பிறந்த நாள் நினைவலைகள்
அரசியலில் நுழையப் போகிறேன் என்று ரஜினிகாந்த் பூச்சாண்டி காட்டிய காலங்களில் கருணாநிதிக்குத் தீவிர ஆதரவாளராக இருந்தவர் விஜயகாந்த். ஜெயலலிதாவை வைத்தும் விழாக்கள் எடுத்தவர். ஆனால், அரசியல் என்று வந்தவுடன் ஆளுமைகள் என்றெல்லாம் பார்த்து பயப்படாமல் எதிர்த்து நின்றவர்.
இன்று விஜயகாந்த் சிலைக்கு திறப்பு விழா நடத்தியிருக்கிறார் பிரேமலதா. அவரது 72வது பிறந்த நாளில் அவரது வாழ்வின் சில துளிகள் மட்டும் இங்கே.
விஜயாகந்த் என்றாலே கோபக்காரர், ஆக்ஷன், வீர வசனங்கள், பழி வாங்குதல், முரட்டு சுபாவம் என்று படங்கள் இருந்தாலும் இயல்பான வேடங்களிலும் கலக்கியவர் என்பதற்கு உதாரணமே வைதேகி காத்திருந்தாள், டெளரி கல்யாணம் போன்ற படங்கள்.
நட்புக்கு உதாரணம் விஜயகாந்த். ராவுத்தர் சொன்னால் சரியா இருக்கும் என்று மறு பேச்சில்லாமல் ஒத்துழைக்கும் நண்பர்.
சரத்குமாருக்கு முக்கிய வில்லன் வேடம் கொடுத்துப் புலன் விசாரணை, அதனைத் தொடர்ந்து தன் நூறாவது படத்தின் முதல் அரை மணி நேரத்தில் முக்கிய வேடம், பின்னர் அவரையே நாயகனாக வைத்துத் தன் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த “தாய் மொழி” படத்தில் சிறப்பு வேடம் என்று சரத்குமாருக்கு வாழ்வு கொடுத்தவர்.
கடின உழைப்பாளிகள், தொழில் மீது பற்றுக் கொண்ட மனிதர்கள், நான் வாழ்ந்தால் மட்டும் போதுமல்ல மற்றவன் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற கண்ணியம் போன்றவற்றின் இலக்கணம்.
இவரைப் பற்றி ராதாரவி, ‘’கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்று இரு பெரும் அரசியல் தலைமைகள் இருந்த போது இந்தா அந்தா என்று போக்குக் காட்டாமல் தில் ஆக அரசியல் களத்தில் இறங்கியவர் நம் விஜயகாந்த். இனி எந்தக் காலத்திலும் இந்த மாதிரியான அரசியல் சூழலும் வாய்க்காது இப்படி ஒருவர் தில் ஆகக் களம் இறங்கவும் முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
ஈழத் தமிழரின் ஆரம்ப காலச் சோதனைகளை, இனவெறிக் கொலைகளை எதிர்த்து சக நடிகர்களைத் திரட்டிப் போராடியவர். அப்போது விஜயகாந்த் இவ்வளவு பெரிய உச்ச நடிகருமில்லை, நடிகர் சங்கப் பொறுப்பிலும் இல்லை. இன்று வரை தன் அரசியல் ஆதாயத்துக்காகத் தான் ஆத்மார்த்தமாக ஈழத்தமிழருக்காகச் செய்ததைச் சொல்லி விலை பேசவில்லை. ஈழத் தமிழர் விடிவு வேண்டித் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தையே ஆண்டுகள் பலவும் ரத்துச் செய்தவர்.
நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் பதவியேற்ற பின்பே அந்தச் சங்கத்துக்கே ஒரு பலம் வந்தது போல அவர் முன்னெடுத்த பல நடவடிக்கைகள், சங்க வளர்ச்சி நிதி என்று யாருமே விமர்சிக்காத அளவுக்கு நேர்மையானவை. உதவி செய்வதில் இவர் இன்னொரு எம்.ஜி.ஆர்.
இயக்குனர் செல்வமணி, “விஜயகாந்த் சாரை விட நல்ல நடிகர் இருக்கலாம் விஜயகாந்த் சாரை விட நல்ல அரசியல்வாதி இருக்கலாம் ஆனால் விஜயகாந்த் சாரை விட நல்ல மனிதரை நான் கண்டதே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.
சூதுவாது தெரியாதவர். அதனாலே ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்து முதல்வர் பதவிக்கு சரியான நபர் விஜயகாந்த் என்பதாலே மக்கள்நலக் கூட்டணி இவரை தேடி வந்தது.
வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி நல்ல மனிதர் என்பதாலே இன்றும் அனைவரும் நினைத்து மகிழும் மனிதராக இருக்கிறார் விஜயகாந்த்.