சீமானை டென்ஷன் ஆக்காதீங்க புரோ
சமூகநீதி, சமத்துவம்,பெண்ணுரிமை, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்று தன் இறுதி மூச்சுவரை போராடிய மாபெரும் மக்கள் போராளி தந்தை பெரியாரின் நினைவு நாள். தி.முக.வினரும் அ.தி.மு.க.வினரும் பெரியார் சிலையைத் தேடிச் சென்ற நேரத்தில் விஜய் மட்டும் பனையூரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
இன்று நடிகர் விஜய், ‘’சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்…’’ என்று பதிவு போட்டிருக்கிறார்.
கடமைக்காக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வது, கடமைக்காக எல்லோரையும் புகழ் பாடுவது எனக்குப் பிடிக்காது என்று வீம்பாகப் பேசிய விஜய், இப்படி கடமைக்காக பெரியாருக்கு அஞ்சலி செய்யலாமா என்று நாம் தமிழர் கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.
சில வருடங்கள் முன்பு வரையிலும் நாம் தமிழர்கள் கட்சியினர் பெரியாருக்கு வீர வணக்கம் செய்துவந்தனர். இப்போது அவர்கள் முழுக்க முழுக்க பெரியார் எதிர்ப்பு நிலை எடுத்திருப்பதாலே விஜய் வேண்டுமென்றே பெரியாரை அஞ்சலி செய்வதாகச் சொல்கிறார்கள்.
இது குறித்துப் பேசும் நாம் தமிழர்கள், ‘’புரோ… பனையூரில் இருந்து தான் பிரசாரம் செய்வீர்களா.. அல்லது பிரசாரம் செய்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன் என்று அறிக்கை மட்டும் கொடுத்து ஓட்டுப் போடச் சொல்வீர்களா?’’ என்று கேள்வி கேட்கிறார்கள்.
பதில் சொல்லுங்க புரோ.