ரஜினி வழியில் எஸ்கேப்..?
விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படமே அவரது கடைசி படமாக இருக்கும் என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கும் வேளையில், அவரது 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்குவதை உறுதி செய்திருக்கிறார்.
அப்படின்னா கோட் படம் கடைசி இல்லையா? விஜய் இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவது இல்லையா என்று அவரது ரசிகர்களே விக்கித்து நிற்கிறார்கள். 2026ல் தேர்தல் வரப்போகிறது என்பதால் இப்போதே தேர்தல் அரசியலில் நுழைந்தால் மட்டுமே தி.மு.க.வை எதிர்க்க முடியும் என்று புலம்புகிறார்கள்.
கோட் படம் முடிஞ்சதும் அரசியல் களத்துல வந்து அண்ணன் சண்டை செய்வாரு என்று காத்திருக்கும் ரசிகர்கள், ‘திரும்பவும் ஒரு படம்’ என்றதும் அதிர்ந்து நிற்கிறார்கள்.
ஏனென்றால் மீண்டும் ஒரு படம் என்றால் குறைந்தது 6 மாதங்கள் ஆகிவிடும். அதன்பிறகு விஜய் அரசியலுக்குள் நுழைவது என்றால் கடைசி நேர பரபரப்பாக இருக்குமே தவிர அஸ்திவாரம் சரியாக இருக்காதே என்று பதறுகிறார்கள்.
அதேநேரம் விஜய் நிர்வாகிகள், ‘அண்ணன் ஏற்கெனவே தெளிவா சொல்லியிருக்கிறார். சினிமாவை முடிச்சுட்டுத் தான் வருவேன்னு. அவர் நாலு மாசம் நின்னாலே போதும் ஆட்சியைப் பிடிச்சுடுவார்’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
நாலு மாசத்தில் சினிமாவே முடிக்க முடியாது, வந்து அரசியலை கவிழ்க்கப் போகிறாரா… நடிகர் ரஜினிகாந்த் இப்படி சொல்லித்தான் ஏமாத்திக்கிட்டே இருந்தாரு என்ற புலம்பல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.