பணம் புரளும் வீடியோ கேம் விளையாட்டு

அதிகரிக்கும் அடிமைகள் எண்ணிக்கை



இன்றைய உலகம் கணினிக்குள்ளும், கைப்பேசிக்குள்ளும் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் வெளியில் வியர்வை சிந்தி விளையாட வேண்டிய குழந்தைகள் எல்லாம் வீட்டுக்குள் அடைந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

வீடியோ கேம் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையுமே வளைத்துப்போட்டிருக்கிறது. ஆம், இந்த வீடியோ கேம், உலகம் முழுவதும் பலராலும் விளையாடப்படுகிறது. இது ஒருபுறம் ஆபத்து என்றாலும், மறுபுறம் இதன்மூலம் கோடிகோடியாய்ப் பணமும் குவித்து வருகின்றன, பல பன்னாட்டு நிறுவனங்கள் என்பதுதான் வியப்பான செய்தி.


இணையம் சார்ந்து லாபம் குவிக்கும் தொழில்கள் பல உள்ளன. அதில், வீடியோ கேம் ஒன்றாக இருக்கிறது. அதன் பின்னணியில் உள்ள வணிகம் வியக்கவைப்பதாக இருக்கிறது. ஐரோப்பிய அமைப்பு 2017ல் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுதும்  வீடியோ கேம் விளையாடுவோர் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது என அதில் தெரியவந்துள்ளது. தற்போது மேலும் உயர்ந்திருக்கும். இந்த விளையாட்டுச் சந்தையில், 5.6 லட்சம் கோடி ரூபாய் 2017ல் புரண்டது. இது நடப்பு ஆண்டில், 6.4 லட்சம் கோடி ரூபாயாக  உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காலத்தில், பொழுதுபோக்கிற்காக வீடியோ கேம் ஆடியவர்களே அதிகம். இந்த தொழிலில் 80 சதவிகிதம் தொகை மென்பொருள் விற்பனையில் கிடைக்கிறது. உலகில் மிகப்பெரும் நிறுவனங்களான டென்செண்ட், சோனி, ரியாட், ஆக்டிவிஷன், பிலிஷ்ஷர்டு உள்ளிட்டவை இதில் முதலீடு செய்துள்ளன. ஆசிய நாடான சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் மற்றும் ஜப்பானிய நிறுவனமான சோனி இண்ட்ராக்டிவ் எண்டர்டெயின் நிறுவனங்கள், கிட்டத்தட்ட பாதி அளவு சந்தையை கைப்பற்றியுள்ளன.

டென்செண்ட் நிறுவனம் 2018ல் 32 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. வீடியோ கேம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நாடு சீனாதான். இது, 2017ல் 41 சதவிகிதம் அளவில் பங்களித்தது. அமெரிக்காவின் பங்கு, 32 சதவிகிதமாக உள்ளது.

இப்போது ஜப்பான் நாடும் இந்த யுத்தத்தில் குதித்துள்ளது. 2024ம் ஆண்டு வரை சீனா முன்னணியில் இருக்கிறது. இப்போது ரியல் விளையாட்டு போலவே இந்த விளையாட்டையும் மாற்றிவிட்டனர். ரத்தம், வெட்டி, குத்து போன்றவைகளை இளைஞர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 18 வயது வரை இந்த விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டியது பெற்றோரின் கடமை.

Leave a Comment