நோய் அறிவோம்
மது குடிக்காமலே சிலர் தள்ளாடுவதற்கும் மயங்கி விழுவதற்கும் காரணமாக இருக்கும் வெர்டிகோ பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆகவே, அனைவரும் இந்த நோய் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் சிலருக்கு திடீரென தலைசுற்றல், தள்ளாட்டம் ஏற்படலாம். நன்றாக இயல்பாகப் பேசிக்கொண்டு இருப்பார். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது போன்ற பிரச்னையை நிறைய பேர் ஏதேனும் ஒரு தருணத்தில் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.
ஏதேனும் கனமான பொருளை தூக்கும்போது, அல்லது கீழே உட்கார்ந்திருந்து சட்டென எழும்போது தலை சுற்றல் உண்டாகும். படுக்கையில் இருந்து எழும் நேரத்தில் இத்தகைய தலைசுற்றல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல இருக்கும். சில நிமிடங்களில் சரியாகிவிடும். இன்னும் சிலருக்கு தலை சுற்றும். காது அடைக்கும். இதயம் படபடவென அடைத்துக் கொள்ளும். பேச்சு திடீரென குளறும். இதுபோன்ற பிரச்னைக்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்களில் நிறைய பெண்களுக்கு ஏற்படுவதுண்டு.
காரணங்கள்
பெரும்பாலான நபருக்கு தலை சுற்றுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது காதுகள் தான். நம் காதில் உள்ள சிறிய எலும்புகள்தான் நாம் தலையை உடலை பல்வேறு விதமாக ஆட்டும்போது நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த எலும்புகளில் பிரச்னை என்றாலும் கூட தலைசுற்றல் வரும்.
திடீர் வாய்வு காரணமாகவும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வினால் வயிற்றில் அழுத்தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலிருக்கும். அதேநேரம், ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு, நீரிழிவில் சர்க்கரை திடீரென குறைவது, கழுத்து எலும்பில் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, கர்ப்பம், இதயத் துடிப்பு கோளாறுகள், மருந்துகள் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், போதிய உறக்கமின்மை, தலையில் ஏற்படும் காயங்கள், மூளைக்குச் செல்லும் ரத்தவோட்டம் குறைவு, மூளையில் கட்டிகள், ரத்தக் கசிவு, கழுத்தெலும்பு கட்டிகள், தண்டுவட நோய்கள், கழுத்தெலும்பு தேய்மானம் போன்றவையும் காரணமாக இருக்கலாம். இவை தவிர நரம்பியல் பிரச்சினைகளாலும், வலிப்பு நோயாலும் தலைசுற்றல் ஏற்படலாம்.
இதற்கு ரத்த சோகையும் ஒரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் உண்டாகும். இதனால் கூட தலை சுற்றல் உண்டாகும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தலை சுற்றல் ஏற்படும். இதன் தீவிரமான நிலை என்னவென்றால் தலை சுற்றி விழுந்து சுய நினைவு இழந்துவிடுவார்கள். திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை இது.
உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகிறது9. எனவே, போதுமான அளவு நீர் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். சீரற்ற இதய துடிப்பு இருந்தால், ரத்தம் மூளைக்கு செல்வதில் பாதிப்பு உண்டாகும். உடனே தலை சுற்றல் உண்டாகும்.
இந்த சிக்கலுக்கு ஆளான ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரச்னையை உணர்வார்கள். சிலர் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் ஒரு சக்கரம் போல் சுழல்வதாக உணர்வார்கள். வாந்தி வருவது போல இருக்கும். நடப்பதிலும் தள்ளாட்டம் காணப்படும். நிற்பதிலும் சிரமமாக இருக்கும். மன நிலையில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணம் தோன்றிவிடும். மனதில் குழப்பம் உண்டாகும்.
காது ஜாக்கிரதை
அதிக நபர்களுக்கு காது பிரச்னையே வெர்டிகோவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இப்படி காது நரம்பு மண்டலத்தால் வரும் தலைசுற்றலை பெரிபெரல் வெர்டிகோ என்று கூறுவார்கள். உள்காதில் வட்டவடிவத்தில் கால்வாய் போன்ற பாதைகள் உள்ளன. இது சிறு குகை போல காணப்படும். இங்கிருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வரும் தலைசுற்றல் தான் பெரிபெரல் தலைசுற்று என்று அழைக்கப்படுகிறது. இது போல நரம்பு மண்டலத்தில் சிறு மூளை பாதிக்கப்படுவதாலும் தலைசுற்றல் வரும்.
இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு குழறும், எதிரில் உள்ள பொருட்கள் இரண்டு இரண்டாக தெரியும். கண் அசைதல் மற்றும் அலசல் சிக்கலாக இருக்கும். நேர் கோட்டில் நடப்பதில் சிரமம் இருக்கும். அதோடு ஒரே இடத்தில் நிற்கவும் முடியாத நிலை இருக்கும்.
இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கையைவிட்டு விசுக்கென்று எழக்கூடாது. படுக்கையில் சில நிமிடங்கள் கால்களை நன்றாக அசைத்துக்கொண்டு இருக்க வேண்டும். நன்றாக கண்ணைத் திறந்து அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்து அமர வேண்டும். சில நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்த பிறகே எழுந்து நிற்க வேண்டும். இப்படி நிதானமாக செயல்படத் தொடங்கினால் தலைசுற்றல் பிரச்னையின் தீவிரம் குறையும்.
அதிக வெயிட்டான பொருட்களைத் தூக்குவது, தலையில் கனமான பொருட்களை வைப்பது, ஸ்டூல் மீது ஏறி நிற்பது போன்றவை இவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம். ஆகவே, இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
உணவுகள்
இந்த பிரச்னைக்கு ஆளானவர்களுக்கு எப்போதும் ஏற்படலாம் என்ற பயம் இருக்கவே செய்யும். ஆனாலும், இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, இதுவும் ஒரு சாதாரண நோய் என்ற எண்ணத்தை மனசுக்குக் கொண்டுவர வேண்டும். அதிக இனிப்பு, அதிக உப்பு உள்ள எந்த உணவையும் உண்ணக்கூடாது, ஜங்க்ஃபுட் அறவே தவிர்த்தாகவேண்டும். காபி, சாக்லெட் நிறுத்திவிட வேண்டும். உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும், அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். போதை மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது காது பரிசோதனை செய்வது அவசியம்.
சிலருக்கு பித்தம் அதிகரிப்பதால் தொடர் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வரலாம். அதனால் துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே பித்தம் தொடர்பான தலைசுற்றல் நின்றுபோகும், நெல்லிக்காய் சாதம் செய்துகூட சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும். இன்னும் சில வீட்டு மருந்துகளை கை வைத்தியமாகப் பயன்படுத்தலாம்.
- கொத்தமல்லி விதையை சுடான நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி தினம் பருகினால் தலைசுற்றல் நிற்கும், கொத்தமல்லி துவையல், கறிவேப்பலை துவையலை தினமும் உணவுடன் சேர்த்து வர தலைசுற்றல் குறையும்.
- சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாரை விழுங்கினால் அதன் சாரை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
- இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் நின்று தலைசுற்றல் நிற்கும். இஞ்சி மரப்பன் என்ற மிட்டாய்கூட இதற்கு மிக நல்லது. சுக்குகாப்பி இதற்கு சிறந்து மருந்து. மீன், கோழிக்கறி நல்லது. மற்றப்படி உப்புக் கருவாடு, அப்பளம் போன்றவை கூடவே கூடாது. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்ப்பது நல்லது.
- அஜீரணத்தால் வரும் தலைச் சுற்லுக்கு சுக்கு, மல்லிவிதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது. கசகசா, கொத்தமல்லி, பருத்தி விதை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவது குறையும். பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தலைசுற்றல் என்றால் வாயில் கசப்பு அல்லது புளிப்பு ருசியும் இருக்கும். புளித்த ஏப்பமும், வயிற்று உப்புசமும் ஏற்படலாம். கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படும். தூக்கமும் சரியாக வராது.
இப்படிப்பட்ட தலைசுற்றலுக்கு கருமிளகு அல்லது வெள்ளை மிளகு அல்லது வெந்தயத்தை பாலில் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து மேலும் வதக்கி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் குறையும்.
இந்த கை வைத்தியம் எப்போதாவது ஒரு முறை வருபவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது தலைசுற்றல் வருதல் அல்லது தொடர்ந்து பாதிப்பு இருந்தால் மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனை செய்து மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். என்ன காரணத்தினால் தலை சுற்றல் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவது எளிது.