வள்ளலார் பேரொளி அல்ல போராளி

Image

பசி, அறியாமை, காமம் புதிய சிந்தனை

வள்ளலாரின் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாள் என்று தமிழக அரசு கொண்டாடிவருகிறது. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று போராடிய முதல் சமயப் போராளி அவர். கடவுள் ஒருவரே, கடவுளை ஒளிவடிவில் வழிபட வேண்டும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, உயிர்பலி இடுதல் கூடாது, மது, இறைச்சி உண்ணுதல் கூடாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது போன்றவையே வள்ளலாரின் முக்கிய கோட்பாடுகள். ராமலிங்க வள்ளலார் பாடிய 6 ஆயிரம் பாடல்களின் தொகுப்பு ‘திருவருட்பா’ என்று வழங்கப்படுகிறது.

1867ஆம் ஆண்டு வடலூரில் சமரச வேத தருமசாலையை தொடங்கினார். பசித்தவருக்கு உணவு அளிக்கும் சேவையை இந்த அமைப்பு முக்கியமாக முன்னெடுத்தது. உண்மையான ஆன்மிகம் தன்னலமற்ற சேவைக்கும், தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று வள்ளலார் நம்பினார். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை போதிக்கும் வகையில் தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்று பெயரிடப்பட்டது.

சாதி மறுப்பு, மதமறுப்பு, வேதமறுப்பு, ஆகம மறுப்பு ஆகியவற்றை கடைசி காலங்களில் தீவிரமாகக் கடைப்பிடித்தவர். ஆனால், சாதி, மத எதிர்ப்புகளில் அவர் காட்டிய தீவிரத்தை மக்களிடம் பரப்புவதில் அவர் சார்ந்த இயக்கத்தினரே தயங்கி நிற்கிறார்கள்.

இது வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் உள்ள ஒரு பாடல்.  

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிறுத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”.

இந்த பாடல் மூலம் சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் ஆகியவற்றை வள்ளலார் மறுத்து சன்மார்க்க நிலை தேவை என்று கூறுகிறார். அதற்கான தேடலையே தனது வழிபாடாக அவர் முன்னிறுத்துகிறார். இந்த வகையில் வள்ளலாரும் பெரியாரும் போராளிகள் என்றே கூற வேண்டும். பசியை தீர்ப்பதும் அறியாமையும் அகற்றுவதும் போராளியின் வழியே தவிர ஆன்மிகப் பேரொளி அல்ல.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் அல்ல வாடிய மனிதரைக் கண்டபோதெல்லாம் வாடினார். ஆன்மீகத்தை போதிப்பவர்களெல்லாம் காமத்தைப் பாவம் என்று புறக்கணித்த நிலையில் வள்ளலார் மட்டுமே மனிதனுக்குக் காமமும் நிறைவுசெய்யப்பட ஒன்று, அதையும் நிறைவு செய்தால்தான் உடலே ஒரு கோயிலாக இருக்க முடியுமென்று சொன்னவர் என்பதாலும் போராளி ஆகிறார்.

Leave a Comment