தோற்றாலும் ஜெயித்தவர்
திறமையான எல்லா விளையாட்டு வீரர்களும் மெடல் வென்றுவிடுவதில்லை. திறமையான தொழிலதிபர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்களாகி விடுவதில்லை. அப்படித்தான் கொள்கைப் பிடிப்புள்ள அரசியல்வாதிகள் எல்லோரும் ஆட்சியில் அமர்ந்துவிடுவதில்லை. இதற்கு உதாரணம் வைகோ.
மறுமலர்ச்சி மாமனிதர் இயக்கத்தந்தை வைகோ இன்று 81 ஆவது பிறந்த நாள் கொண்டாடுகிறார். தந்தை பெரியாரின் ஒப்பற்ற மாணவர், பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வழித்தோன்றல், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திராவிட இயக்கப் போர்வாள் என்றெல்லாம் பாராட்டப்பட்ட வைகோவின் பிறந்த நாளை அவரது கட்சியினர் இன்று “தமிழர் தலை நிமிர்வு நாளாக” கொண்டாடி வருகிறார்கள்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இன்றும் உறுதியாக நிற்கும் ஒரு நபர். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு சட்டப்பூர்வ போராட்டங்களை தைரியமாக முன்னெடுத்துச் செல்பவர். அதேநேரம், பிரபராகரன் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்யாதவர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முழு முதல் காரணி இவர் தான். இவரை விலைக்கு வாங்குவதற்கு நடந்த அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்தவர். அன்று இவர் மட்டும் தலை அசைத்திருந்தால் கோடிகளில் புரண்டிருக்கலாம். அதேபோல் முல்லைப்பெரியாறு, நியூட்ரினோ போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி லட்சக்கணக்கானோரை திரட்டிய போதிலும் தேர்தல் நலனுக்காக இந்த போராட்டங்களை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இந்தியாவின் மையப்பகுதியான மத்தியப்பிரதேசம் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்களை படையென நகர்த்தி ராஜபக்சேவின் சாஞ்சி வருகைக்கு எதிராக நின்றார். இதுபோன்ற ஒரு போராட்டத்தை இந்தியாவில் எந்த இனமும் நடத்தியதில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு கொள்கை, சூழலியல் கொள்கைகளை தமிழ்த்தேசிய அரசியலில் நின்று எதிர்கொண்ட ஒரே அரசியல் ஆளுமையாக பாரளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வாதிட்டவர், போராடியவர். திமுக, அதிமுக என இருபெரும் ஆதிக்க-அதிகார கட்சிகளுக்கு இடையே சாமானியர்களின் கோரிக்கையை மையநீரோட்டத்திற்கு எடுத்துச்சென்றவர் அவர். இந்த இரு கட்சிகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அரசியலை தொடந்து 30 ஆண்டுகளாக நடத்தியவர்.
அரசியல் சாணக்கியத்தனம் இல்லாத காரணத்தாலே ஆட்சிக் கட்டிலில் அரிய முடியாமல் போனவர். தோற்றுப் போனவர் என்றாலும் இது பெருமையான தோல்வியே.