காரணம் இது தானா..?
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில் முடிந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது.
மணிப்பூரில் 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கிறது, 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 60,000 க்கும் அதிகமானோர் இடப்பெயர்வு, சில இந்திய மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது என இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. இவை மத சுதந்திர பிரச்னைகள் குறித்து கவலைகளை எழுப்பியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேவாலயங்கள் தாக்குதல், கிறிஸ்தவர்கள் மீதான நடவடிக்கை காரணமாகவே அமெரிக்கா கோபம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த அறிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.