மாணவர்களுக்கு சீருடை திட்டம்

காமராஜர் நினைவலைகள் – 15

பெருந்தலைவர் காமராஜர் கல்வித் துறையில் செய்த மிகப் பெரிய புரட்சிகளில் பகல் உணவுத் திட்டம் போன்று மகத்தான இன்னொரு சாதனை இலவச சீருடைத் திட்டம். இன்று இது சாதாரண அரசுத் திட்டமாகத் தோன்றினாலும், அந்த காலகட்ட சமூகச் சூழலில் இது மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தமாக இருந்தது.

சீருடைத் திட்டம் ஏன்?

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். காரணம் வெறும் கட்டணமோ புத்தகங்களோ அல்ல; அணிய நல்ல உடை கூட இல்லாத நிலை.

ஒரே வகுப்பறையில் பணக்கார மாணவர் விலையுயர்ந்த ஆடையில் வருவார். ஏழை மாணவர் கிழிந்த ஆடையுடன் வருவார். இதனால் பல குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையால் பள்ளிக்கே வருவதைத் தவிர்த்தனர்.

இதையடுத்தே காமராஜர், ‘’பொருளாதார வேறுபாடு குழந்தைகளின் உடையிலேயே தெரிந்து, அவர்கள் தாழ்வு மனப்பான்மை அடையக் கூடாது. எல்லோரும் சமமானவர்கள் என்ற உணர்வு உருவாக வேண்டும்’’ என்பதை உறுதிப்படுத்தவே அவர் இலவச சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

சீருடை அணிந்த பிறகு, யார் வசதியான குடும்பம், யார் ஏழைக் குடும்பம் என்பதை வெளிப்படையாக அறிய முடியவில்லை. இதனால், தாழ்வு மனப்பான்மை குறைந்தது. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது.

அந்தக் காலத்தில் சில இடங்களில் ஆடையைக் கொண்டே சாதி, சமூகப் பின்னணி போன்றவை ஊகிக்கப்பட்டன. ஒரே சீருடை அணிந்ததால், ’நாம் அனைவரும் மாணவர்கள்’ என்ற அடையாளம் உருவானது. இதுவே சமூக ஒற்றுமையை வளர்த்தது.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment