தகவல் களஞ்சியம் 5
கங்காரு குட்டியின் எடை 2 கிராம்
வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான கங்காரு, ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றது. சிவப்பு, ஈஸ்டர் க்ரே, வெஸ்டர்ன் க்ரே, ஆண்டிலோப் என 4 வகையான கங்காருகள் உள்ளன. இதில், சிவப்பு கங்காரு மிகவும் பெரியது ஆகும். வலிமையான பின்னங்கால்களையும் நீண்ட பாதங்களையும் உடைய கங்காருகள் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் ஓடுவன. நன்கு நீந்தும் இயல்புடையன. கங்காரு தனது உயரத்தைவிட, மூன்று மடங்கு உயரம் தாவிக் குதிக்கும் வலிமை உடையது. புல்லை விரும்பிச் சாப்பிddu, அசைபோடும் இயல்புடையது. ஆறு ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய கங்காரு கூட்டமாக வசிக்கக்கூடியது.
ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 கங்காருகள் வரை இருக்கும். ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்தால், தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து எச்சரிக்கும். கங்காருவின் வால் தசை மிகவும் வலுவானது. வேகமாக ஓடித் திரும்பும்போது கீழே விழாமல் சமன்படுத்தும் வேலையினை வால் செய்யும். எதிரிகளைத் தாக்கும்போது முன்னங்கால் அல்லது பின்னங்கால்களால் பலமான உதை கொடுக்கும். ஆளுமையினை நிரூபிக்க ஆண் கங்காருகள் சண்டையில் ஈடுபடுவதுண்டு. மனிதர்கள், டிங்கோ நாய்கள், நரிகள், காட்டு நாய் போன்றன இவற்றின் எதிரிகளாகும். கங்காரு குட்டிகள் ஜோய் என்று அழைக்கப்படுகின்றன. பிறந்த கங்காரு குட்டி 2 கிராம் எடை மட்டுமே இருக்கும். சுமார் 6 மாதங்கள் அம்மாவின் வயிற்றுப் பையினுள் இருந்து முழு வளர்ச்சி பெறும். ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரையில் இடம்பெற்றுள்ள பெருமை கங்காருக்கு உண்டு. பறவைகளில் ஈமு பறவைக்கு இந்தப் பெருமை உண்டு. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ முடியாத செயல் என்பதால் முன்னேற்றத்திற்கான அடையாளமாக இவை அரச முத்திரையில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் புற்றுநோய்!
உலகிலேயே அதிக அளவில் உயிரிழப்பை கேன்சர் நோய்தான் ஏற்படுத்துகிறது. இங்கு இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட கேன்சரால் சாகும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். ஆம், கடந்த 10 ஆண்டுகளில் இருதய நோயின் இறப்பு விகிதத்தைவிட கேன்சர் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டிற்குள்ளாக கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளைவிட சுமார் 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாய், மார்பக, கருப்பை வாய் புற்றுநோயாளிகளே இதில் பெரும்பாலானோர் ஆவர். புற்றுநோய் கண்டுபிடிப்புக் கருவிகளின் நவீனமயமாக்கல் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. குடி, புகைப்பழக்கம், ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.
———————-
குங்குமப்பூ ரகசியம்
குங்குமப்பூ என்பது உண்மையில் பூவே கிடையாது. சஃப்ரான் க்ரோகஸ் ஃப்ளவர் எனப்படும் ஊதா நிற மலரின் நடுவில் காணப்படும் சிகப்பு நிறச் சூல் காம்புதான், இந்த குங்குமப்பூ. ஒரு கிலோ மிகத்தரமான குங்குமப்பூ லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. 2 அல்லது 3 கிராம் பாக்கெட்டுகளே 300 முதல் 1,000 ரூபாய்க்கு மேலாகவே விலைவைத்து விற்கப்படுகிறது.
குங்குமப்பூவிற்கு இத்தனை மவுசு கிடைக்கக் காரணம், அதன் அறுவடைமுறை. ஒவ்வொரு மலரின் சூல்காம்பு பகுதியும் பக்குவமாகக் கைகளால் பிரித்தெடுக்கப்பட வேண்டும். அதன்பிறகு, ஈரப்பதம் வற்றும்வரை காயவைக்கப்பட வேண்டும். சூலகங்களைப் பறிக்கவும், அவற்றைக் காயவைத்து அள்ளவும் நிறையப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மிகநுண்ணியதாக காணப்படும் சூல்காம்புகளை மலரிலிருந்து பிரித்தெடுப்பதே கடினமான வேலை. காயவைத்து அள்ளும்போது குங்கமப்பூவின் எடை இரண்டுக்கு ஒன்றாகக் குறுகிவிடும். ஒவ்வொரு மலரிலும் மூன்றே மூன்று சூல்காம்புகள்தான் இருக்கும். இதனால் ஒரு ஏக்கர் அறுவடையில் கிடைக்கும் குங்குமப்பூவின் அளவு ஒன்று அல்லது இரண்டு கிலோ மட்டுமே. எட்டு கிராம் அளவு குங்குமப்பூவைப் பிரித்தெடுக்க தோராயமாக 1,70,000 மலர்கள் தேவைப்படுகின்றனவாம்.
குங்குமப்பூ பூக்கள் செப்டம்பர் இறுதியில் பூக்கத் தொடங்கி, டிசம்பர் முதல் வாரம் வரை மணம் பரப்புகின்றன. ஒவ்வொரு செடியும் பூக்க ஆறுவார காலம் தேவைப்படுகிறது. அதேபோன்று, பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடன் உடனடியாகப் பறித்துவிட முடியாது. நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டுமாம். அதாவது, ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சூல்காம்புகளைச் சேகரிக்க முடியும். காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ள நாட்களில் குங்குமப் பூக்களைப் பறிக்கலாம். குங்குமப்பூவில் உள்ள சில வேதிப்பொருட்களை சூரிய ஒளி பாதிக்கும் என்பதால், அதிகாலை நேரத்திலேயே பெருமளவில் குங்குமப்பூ அறுவடை செய்யப்படுகின்றது.
உலகளவில் 90 சதவிகித அளவு குங்குமப்பூ ஈரான் நாட்டில் அறுவடை செய்யப்படுகிறது. அதிகளவில் வேலையாட்கள் கிடைப்பதும், அவர்களுக்கான சம்பளமும் மிகக்குறைவு என்பது இதற்கான முதல் காரணம். குங்குமப்பூ அறுவடையில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஈரானுக்கு அடுத்து மொராகோ, இத்தாலி, ஸ்பெயின், இந்தியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவிலும் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய வேதிப்பொருள்கள் இதில் இருப்பதால், மறதி, மன அழுத்தம் போன்றவற்றிற்குச் சிறந்த தீர்வாக இருக்கிறது, குங்குமப்பூ. இதைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்
————————-
வழிபடும் பொருள் வெங்காயம்?
முதன்முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே வெங்காயத்தை நம்முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்களாம். இதை உணவாக மட்டுமல்ல, வழிபடும் பொருளாகவும் எகிப்தியர்கள் பார்த்திருக்கிறார்கள். பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு உணவாக வெங்காயத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி ‘மம்மி’யாக்குவதற்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே வெங்காயத்தை மருத்துவத்துக்குப் பயன்படுத்தியது பற்றிய குறிப்புகள் உள்ளன. சரகா, சன்ஹிதா ஆகிய மருத்துவ அறிஞர்கள் வெங்காயம் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று கூறியுள்ளார்கள். வெங்காய ஜானி என்பது பிரான்ஸ் நாட்டு விவசாயிகளில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல். பிரான்ஸில் விளைந்த வெங்காயத்தை இங்கிலாந்தில் விற்பதுதான் இந்த ஜானிக்களின் தொழில். இந்த வெங்காய ஜானிக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2004-ம் ஆண்டு, ரோஸ்காஃப் நகரத்தில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. வெங்காயத்தில், சல்ஃபெனிக் அமிலம் இருப்பதால், அதை உரிக்கும்போது, அந்த அமிலம் காற்றில் பரவி ‘சல்ஃப்யூரிக் அமிலம்’ ஆகிவிடும். அதுதான் காற்றில் கரைந்து கண்ணில் நீர் வரவழைக்கிறது.
————————-
விவசாயத்தின் முன்னோடி கரையான்!
கரையான், எறும்பு இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை. இவை, கூட்டமாக வாழும் சமுதாயப் பூச்சி வகையைச் சேர்ந்தவை. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கரையான்கள்கூட இருக்கலாம். தேனீக்களில் உள்ளது போலவே கரையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணி கரையான்கள். 4 வகை கரையான்களுக்கும் இதுவே தாய். ராணியைக் கர்ப்பமடையச் செய்வதே ஆண் கரையான்களின் பணி. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியைச் சிப்பாய்க் கரையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்காரக் கரையான்களும் செய்கின்றன.
ஒரே புற்றில் கரையான்கள் கட்டுக்கடங்காமல் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளைத் தோற்றுவித்தாலும், உணவுப் போட்டி ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ராணி கரையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். அவற்றுக்கு வேலைக்கார கரையான்கள்தான் உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன. கரையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. இதன்படி, ராணி கரையானின் ஆயுள்காலம் 12 முதல் 20 ஆண்டுகள். வேலைக்காரக் கரையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம் கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றன. விவசாயத்தில் மனிதர்களுக்கு முன்னோடி இந்தக் கரையான்கள்தான். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ்தான் கரையான்களின் உணவு. ஆனால், அவற்றை ஜீரணிக்கும் சக்தி இவற்றுக்குக் கிடையாது என்பதால், சேகரித்துவைத்த மரத்துண்டுகளின் மீது ஒரு வகை காளான்களைப் பயிரிட்டு, மிருதுவான காளான்களையே உண்ணுகின்றன.