தகவல் களஞ்சியம் 4
ஒரு லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும் தேனீக்கள்!
தேனீக்கள் வருமுன் காப்பவை. காரணம், பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்துக்கொள்கின்றன. அவை, ஆண்டொன்றுக்கு 450 கிலோ எடை அளவில், மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றன. அப்படி, தேனீக்கள் தேனைச் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உணவுப் பதப்படுத்துதலின் முன்னோடி எனலாம்.
தேனீக்கள் தங்கள் உணவுக்காக வருடத்துக்கு ஒரு லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும்; அவற்றின் பறக்கும் வேகம் சராசரியாக மணிக்கு 40 கி.மீ ஆகும். பொதுவாக, ஒரு தேன் கூட்டில் மூன்று வகையான தேனீக்களின் கூட்டணி இருக்கும். அக்கூட்டணியில், ஒரே ஒரு ராணி தேனீயும், ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்களும், பல்லாயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இவற்றில் ராணி தேனீ மட்டுமே முட்டையிட்டு, இனவிருத்தி செய்யும். அக்கூட்டின் ராணி தேனீ, சராசரியாக மூன்று வருடங்கள்வரை உயிர் வாழும்.
வேலைக்காரத் தேனீக்கள் 35 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன. ஆனால், மற்ற ஆண் தேனீக்கள் ராணி தேனீயுடன் உறவுகொண்ட பின் இறந்துவிடும். உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற மிக முக்கியப் பணிகளை வேலைக்காரத் தேனீக்கள் செய்கின்றன. தேன் கூட்டு பராமரிப்பை இதர ஆண் தேனீக்கள் கவனிக்கின்றன. இப்படி ஒவ்வொரு வேலையையும் பிரித்துக்கொண்டு செய்து, அந்தக் கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கின்றன, தேனீக்கள்.
இந்தியாவில் 1,60,000 பேருக்கு புற்றுநோய்!
உலகிலேயே அதிக அளவில் உயிரிழப்பை கேன்சர் நோய்தான் ஏற்படுத்துகிறது. இங்கு இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட கேன்சரால் சாகும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். மேலும் உலக அளவில் இருதய நோயால் 2017-இல் 1.77 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகின் மொத்த உயிரிழப்பில் 40 சதவிகிதம் ஆகும். அதேநேரத்தில், கேன்சரால் உயிரிழந்தவர்கள் 26 சதவிகிதம் பேர். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இருதய நோயின் இறப்பு விகிதத்தைவிட கேன்சர் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டிற்குள்ளாக கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட சுமார் 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாய், மார்பக, கருப்பை வாய் புற்றுநோயாளிகளே இதில் பெரும்பாலானோர் ஆவர். புற்றுநோய் கண்டுபிடிப்புக் கருவிகளின் நவீனமயமாக்கல் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. குடி, புகைப்பழக்கம், ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.
நம்பர் ஒன் துறைமுகம் ‘ஷாங்காய்’!
உலகிலேயே அதிக சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் 50 துறைமுகங்கள் பட்டியலில் ஷாங்காய் துறைமுகம் முதலிடத்தைப் பெற்று உள்ளது. இது, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. ஷாங்காய் உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு, ஆண்டுக்கு 3.36 கோடி பெட்டகங்களுக்கு நிகரான சரக்கு கையாளப்படுகிறது. இது 2010-ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிஸியான துறைமுகம் எனப் பெயர் பெற்றது. இந்தத் துறைமுகம் 2016-ஆம் ஆண்டு 370 கோடி ‘டிஇயூ’க்களைக் கையாண்டது. ‘டிஇயூ’ என்றால், ‘டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட்’ ஆகும். இது, ஒரு கப்பலில் சரக்கு சுமக்கும் திறனை அளவிடப் பயன்படுகிறது. ஷாங்காய் துறைமுகம் ஆறு, கடல் சேர்ந்த துறைமுகமாக விளங்குகிறது.
ஒடிஷாவின் ஆபரணம் ‘சிலிகா’!
ஆசியாவிலேயே, மிகப் பெரிய உப்பு நீர் ஏரி இந்தியாவில்தான் உள்ளது. கிழக்குக் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஒடிஷா மாநிலத்தில் உள்ள அந்த ஏரியின் பெயர் சிலிகா. இந்த ஏரி, சுமார் 1,100 சதுர கி.மீ. பரப்பளவில் தயா நதியின் வாயிலில் அமைந்துள்ளது. இந்த உப்பு நீர் ஏரி, நன்செய்நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. காஸ்பியன் கடல், ஈரான், ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற இடங்களில் இருந்து குளிர்காலத்தில் பல பறவைகள் இங்கே இடம்பெயரும்.
இந்த ஏரிக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, சைபீரியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வலசைப் பறவைகள் வருகின்றன. மேலும், மிக வேகமாக அழிந்து வரும் இனமான ஐராவதி ஓங்கில்களும் இருக்கின்றன. உண்மையில், மற்ற ஓங்கில்களைப்போல ஐராவதி ஓங்கில்கள் நீருக்கு மேல் வந்து குட்டிக்கரணம் அடிப்பதில்லை. அவை, மிகுந்த கூச்சச் சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான நேரம் ஓங்கில்களின் முதுகையோ அல்லது செதில்களையோதான் நம்மால் பார்க்க முடியும். மொத்தத்தில், ஒடிஷாவின் ஆபரணம் என்றால், அது சிலிகா ஏரிதான்.
பார்வையற்றவர்களுக்கு வெளவால் குச்சி!
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒருவகை நடைப் பயணக் குச்சியை, பார்வையற்றவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்காக உருவாக்கினார்கள். இது வெளவால்களின் இயக்கத்தின் அடிப்படையில் செயல்படுவதாக அமைந்திருந்தது. வெளவால்கள், தான் பயணிக்கும் பாதையில் எதிரே உள்ள பொருள்களை அறிந்துகொள்வதற்காக எதிரொலி முறையைப் பயன்படுத்தும்.
ஒலி எதிரே உள்ள பொருள்களில் பட்டும் எதிரொலிக்கும் வேகத்திற்கேற்ப பொருளின் நெருக்கம், உயரம், தடை ஆகியவற்றைக் கணித்துக்கொண்டு அவற்றால் எளிதில் விலகிச் செல்ல முடியும். எனவே, இந்த நடைக்குச்சிகள் வெளவால் குச்சி (பேட் கேன்) என்று அழைக்கப்பட்டன. இதை, பார்வையற்றவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைகள், அருகில் உள்ள பொருள்களை அறிந்து ஒலியெழுப்பும். ஒலியைக் கேட்க முடியாதவர்கள் அதிர்வுகள் மூலம் அறிந்துகொள்ளவும் இந்தச் குச்சியில் அதிர்வு உணர்வு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
உயிரை மாய்க்கும் ‘வைர’ பொடி!
வைரம் என்பது ஒருவகை கரிதான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அது கரியேதான். உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரம் எனப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், ரசாயன மாற்றங்களால் கெட்டியாகிய கரி என்ற கார்பன்தான் வைரம் ஆகிறது. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வைரத்தின் மதிப்பை அறிந்திருந்ததால் கிரேக்கர், ரோமானியர், இந்தியர் இதனை வெகுவாக மதித்தனர்.
1868-ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வைரம் ஒன்றைக் கண்டெடுத்தான். அந்த இடம்தான் இன்று புகழ்பெற்ற ‘கிம்பர்லி’ சுரங்கமாக விளங்குகிறது. வைரம் ‘காரட்’ என்ற அலகால் அளவிடப்படுகிறது. ஒரு காரட் என்பது 200 மி.லி. கிராம். ஒரு காரட் வைரத்தை பூமியிலிருந்து எடுக்க 250 டன் நிலம் தோண்டப்படுகிறது. முதல் தரமான வைரம் நிறமற்றதாக இருக்கும். என்றாலும், ஒவ்வோர் இடத்தில் கிடைக்கும் வைரங்களும் நிறங்களில் சற்று மாறுபாடாக இருக்கும். வைரத்தில் ஒளி ஊடுருவும் தன்மை தெளிவாக இருந்து, ஒளி பிரதிபலிப்பும் சரியாக இருந்தால் மதிப்பு கூடும்.
பட்டை தீட்டப்படுவதைப் பொறுத்தே, வைரம் மதிப்பு பெறுகிறது. 54 பட்டைகளைச் சரியான கோணத்தில் தீட்டப்பட்ட வைரமே, அதிக மதிப்பு வாய்ந்தது. வெறும் வைரத்தை எளிதாக எடைபோடலாம். ஆனால், நகைகளாக மாறிய பின்பு எடையிட தனிப்பட்ட எடைக் கருவியும், விதிமுறைகளும் உண்டு. வைரத்தில் வேறு எந்த உலோகமும் சிராய்ப்பு ஏற்படுத்த முடியாது. வைரத்தை வைரம் மட்டுமே அறுக்கும். வைரத்தின் பொடி உயிரை மாய்த்துவிடும் தன்மைகொண்டது. உலக வைர உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ‘அர்ஜைல்’ சுரங்கத்திலிருந்து, ஆண்டுதோறும் சுமார் 20 டன் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிக உயர்ரக வைரக்கற்கள் போட்ஸ்வானா நாட்டிலிருந்து கிடைக்கின்றன. வைரங்களை பாலிஷ் செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் எடுக்கப்பட்ட 186 காரட் ‘கோகினூர்’ வைரம் உலகப் பிரசித்திப் பெற்றது.