தகவல் களஞ்சியம் 2
நேருக்கு எத்தனை குழந்தைகள்
நேருக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். எந்த நேரமும் குழந்தைகளுடனே நேரத்தைச் செலவிடத்தான் ஆசைப்படுவார்.
அதனால்தானே அவரது பிறந்தநாளை, குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆமாம்… நேருக்கு எத்தனை குழந்தைகள் தெரியுமா?
இந்திரா காந்தி மட்டும்தானே… ஏன் அவர் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை.
இதை நேருவிடமே ஒரு முறை பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“எனக்கு நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆசைதான். ஆனால் சொந்த வாழ்க்கையை விட பாரதத்தின் விடுதலையே எனக்கு முக்கியமாக இருந்தது. எந்த நேரத்தில் சிறை செல்வேன் என்று எனக்கேத் தெரியாது. தந்தை பாசம் கிடைக்காமல் குழந்தை ஏமாறக்கூடாது என நினைத்தேன். மேலும் என் மனைவி கமலா அடிக்கடி நோயால் பாதிக்கப்படுபவர். அவர் உடல்நலம் கருதியும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.’ என்றாராம்.
குடும்பக் கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு முன்பே அதனை கடைப்பிடித்துக் காட்டிவிட்டார் நேரு.
பாப்கார்ன் நல்லதா?
பாப்கார்ன் பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும். பெரிய பாக்கெட் இல்லைன்னா கோன்ல பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே சினிமா பாத்தா சூப்பரா இருக்கும். அதுல நார்ச்சத்து இருக்கு. கலோரியும் கொஞ்சம்தான். அதனால என்னோட ஓட்டு பாப்கார்னுக்குத்தான்.
உண்மைதான் வைட்டமின், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற சத்துக்களும் சோளத்தில் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடும்போது மட்டும்தான். கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்னிலும் வீட்டில் உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன்களும் உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பாப்கார்ன் சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துத்தான் பொரித்து விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்த பாப்கானில் கொழுப்பும் கலோரியும் அதிகம். மேஉம் பாப்கார்ன் பெரிதாக பொரிந்து வருவதற்கும், நல்ல மணம் கிடைப்பதற்கும் ‘டைஅசிட்டைல்’ என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது நுரையீரலுக்கு கேடு விளைவிக்கலாம். அதனால் சுவையும் மணமும் குறைவாக இருந்தாலும் சோளம் வாங்கி பொரித்து சாப்பிடுங்கள்.
கல்விக் கடன்
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை தூரம் முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று நம் முன்னோர்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காலத்திலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்படிப்பு படிப்பதற்கு பொருளாதார சுமையை நினைத்து பலரும் தயங்குகிறார்கள். இதற்கு அவசியமே இல்லை.
ஆம், இப்போது அனைத்து மாணாக்கர்களும் கல்விக்கடன் பெற்று படித்துவிட முடியும். கல்விக் கடன் பெறுவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அதனால் இப்போதே கல்விக் கடன் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்குவதற்கு அடையாளச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று இந்த மூன்றும்தான் முக்கியம்.
படிப்பதற்கு எங்கே இடம் கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்டு கடன் பற்றி முடிவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்காமல், இப்போதே அருகில் உள்ள வங்கிக் கிளையினை அணுகி கல்விக் கடன் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் தேவையான ஆவணங்களைக் கொடுத்து எளிதில் கடன் பெறமுடியும்.
பஞ்சாமிர்தம்
பழநின்னு சொன்னதும் என்ன ஞாபகத்துக்கு வரும்.
மொட்டையும் பஞ்சாமிர்தமும்தான்.
ரொம்ப சரி. பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம் என்று பொருள்.
பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ஐந்து பொருட்களும் அமுதத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது. பழம், வெல்லம்,நெய்,பால், தேன் ஆகிய ஐந்து பொருட்களின் கலவைதான் பஞ்சாமிர்தம்.
இதில் இருக்கும் பால் ஒரு முழுமையான உணவு. அதாவது பாலை மட்டும் சாப்பிட்டே உயிர் வாழலாம். சர்க்கரை உடலுக்கு வலிமை கொடுக்கிறது. பழம் என்பது வாழைப்பழத்தைத்தான் குறிக்கிறது. இது சகல உயிர்களும் விரும்பக்கூடிய ஒன்று. உடலுக்கு இதம் தருவது. தேன்,கபத்தை இல்லாமல் செய்துவிடும். நெய்,ஆயுளைக் காப்பாற்றும். ஐந்து பொருட்களுக்கும் தனித்தனி சிறப்பு இருப்பதால்தான், இதனை ஒன்றுசேர்த்து பஞ்சாமிர்தம் என்கிறார்கள்.
உலகில் முதல் பெண்கள் படை
இந்த உலகில் போரில் ஈடுபடாத நாடு என்று எதுவுமே கிடையாது. ஆண்களைப் போன்றே பெண்களும் பல நாடுகளிலும் போருக்குப் போயிருக்கிறார்கள். வீராவேசமாக போரிட்டு தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உலகிலேயே முதன்முறையாக பெண்களுக்கு என்று தனியாக ஒரு படைப்பிரிவு அமைத்த நாடு எதுவென தெரியுமா?
பெண்களை தெய்வமாகப் போற்றும் நம் இந்திய நாட்டில்தான் பெண்களுக்கென தனிப் படை அமைக்கப்பட்டது. அதனை தோற்றுவித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
ஆம், 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தில்தான் பெண்கள் மட்டுமே பங்கெடுத்த, ‘ஜான்சி ராணி படை’ அமைக்கப்பட்டது. இந்தப் படையில் சுமார் 1,500 பெண்கள் இணைந்தார்கள்.
18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரையிலுமான பெண்கள், தங்கள் உண்மையான வயதை மறைத்து இந்தப் படையில் சேர்ந்தார்கள். இந்தப் படையில் நம் தமிழகத்தைச் சேர்ந்த பெண்களும் இடம் பிடித்தார்கள் என்பது நாம் பெருமைப்படக்கூடிய வரலாறு.