ஞானகுரு தரிசனம்
மலர்களின் தலையாட்டலை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ஞானகுருவிடம் நிதானமாகப் பேசத் தொடங்கினார்.
‘’இன்று பிள்ளை வளர்ப்பு என்பது மிகப்பெரும் சவாலாக மாறிவிட்டது. மோசமான வளர்ப்பு என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று கேட்டார்.
‘’மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்று பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு, சோறு போட்டால் மட்டும் போதும் என்று பெற்றோர்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய பிள்ளையை உலகத்திலேயே சிறப்பாக வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமலே இரண்டு மிகப்பெரிய தவறு செய்கிறார்கள்..’’
‘’இரண்டு மட்டும்தானா..?’’
‘’இப்போதைக்கு ஆண் பிள்ளை வளர்ப்பிலும் பெண் பிள்ளை வளர்ப்பிலும் என இரண்டு மட்டும் சொல்கிறேன். இதை மட்டும் வெளியே சொல்’’ என்று பேசத் தொடங்கினார்.
‘’டீன் வயதில் ஆண் பிள்ளைக்கு ரேஸ் பைக் வாங்கித்தருவதும் பெண் பிள்ளைக்கு பியூட்டி பார்லரை அறிமுகம் செய்வதும் ஆபத்தான செயல். மாணவப் பருவத்தினருக்கு மனதில் இருக்கும் உறுதி உடலுக்கு இருக்காது. இந்த வயதினரால் ரேஸ் பைக்கை நகரங்களில் சமாளித்து ஓட்ட முடியாது. தினம் ஒரு மாணவனாவது இந்த பைக்கினால் விழுந்து உயிரை இழக்கிறான் என்றும் தெரிந்தும் நிறைய பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். இந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளை உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் நபர்களின் உயிருக்கும் எமனாக மாறுகிறார்கள்.
பெண் பிள்ளைகளுக்கு இயற்கையே அழகு என்று சொல்லி வளர்க்காமல் செயற்கை அழகிற்கு அடிமையாக்குகிறார்கள். தலைமுடி, புருவம், இமைகள், உதடுகள் எல்லாமே செயற்கையாக மாறுகிறது. பியூட்டி பொருட்கள் இல்லையென்றால் தான் அழகி இல்லை எனும் அளவுக்கு அவள் நம்பிக்கை இழந்துவிடுகிறாள். அழகு என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது என்பதை சொல்லி வளர்ப்பது போதும்…’’
உண்மையைப் புரிந்து அதிர்ந்து நின்றார் மகேந்திரன்.