ரத்தநாள அறுவைச் சிகிச்சை மருத்துவர் துளசிகுமார்
நாள்தோறும் மனித சமுதாயம், பலவகைகளான நோய்களை எதிர்கொள்கிறது. அதில் ஒன்று ரத்தநாளங்களில் ஏற்படும் நோய்கள் (Vascular Diseases). இதுகுறித்த பொதுவான விஷயங்களை சென்னை சூர்யா வடபழனி மருத்துவமனையின் இரத்தநாள அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் துளசிகுமார் அவர்களிடம் பேசினோம்.
இதயத்திலிருந்து செல்லும் ரத்தக்குழாய்களும் உடலின் மற்ற பகுதிகளிலிருந்து செல்லும் ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படும் வேளையில், மருந்துகள் மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தும் முறையே ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறை (வாஸ்குலர்) ஆகும். இது, மருத்துவத் துறையில் சிறப்பு வாய்ந்தது.
இருதயத்திலிருந்து வரும் ரத்தக் குழாய் தமனி (Artery) என்று அழைக்கப்படும். உடலின் மற்ற பாகங்களிலிருந்து வரும் ரத்த குழாய்கள் சிரை (venous) எனப்படும்.
இந்த ரத்தநாள அறுவைச் சிகிச்சையில் இருதயம் மற்றும் மூளையில் இருக்கும் ரத்தக் குழாய்களைத் தவிர, மற்ற எல்லா ரத்தக் குழாய்களையும் சரிப்படுத்தும் திறன்பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவே வாஸ்குலர் துறை ஆகும். இது, இருதய அறுவைச் சிகிச்சை துறையிலிருந்து பிரிந்து சென்ற ஒரு துறையாகும்.
கடந்த 50 வருடங்களாக மருத்துவத் துறையில், இது தனிப் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே நம் தமிழகத்தில்தான் அதுவும் நம் சென்னை மருத்துவமனையில்தான் இதற்கான சிறப்புப் பிரிவை, பேராசிரியர் வீரா ரெட்டி 1967ல் ஆரம்பித்து வைத்தார். இதற்கான மேல்படிப்பு 1991ம் ஆண்டிலிருந்து சென்னையில் மட்டும்தான் இருந்துவந்தது. ஆனால், தற்போது இதன் மேற்படிப்பு இந்தியா முழுவதும் 15 மருத்துவக் கலலூரிகளில் பாடத் திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. இந்த படிப்பை முடித்தவர்களுக்கு, எம்.சி.ஹெச் என பட்டம் அளிக்கிறார்கள். டிப்ளோமேட் நேஷனல் போர்டு என்கிற பட்டமும் வழங்கப்படுகிறது.
ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய தற்போது ஊசி மூலம் செலுத்தப்படும் கருவிகள் இருப்பதால், அவற்றைக்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். இதை ஆஞ்சியோ பிளாஸ்டி சர்ஜரி என்பார்கள். அதாவது, இதயத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் அடைக்கப்பட்டிருப்பதைத் திறக்க பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையே ஆஞ்சியோ பிளாஸ்டி ஆகும். ஆனால், இதில்கூட அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு வாஸ்குலர் சர்ஜரி துறை வளர்ச்சி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ரத்தநாள அறுவைச்சிகிச்சை தவிர மருத்துவம் சம்பந்தமான சிகிச்சைகளையும் வாஸ்குலர் நிபுணர்கள் செய்துவருகிறார்கள். இது ஒரு சிறப்பான விஷயம்.
ரத்தக் குழாயில் இரண்டு வகையான நோய்கள் வர வாய்ப்புண்டு. ஒன்று, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதனால் வரும். மற்றொன்று, ரத்தநாள புடைப்பு நோய். அதேமாதிரி சிரைகளில் ரத்தம் உறைவு ஏற்படுவதால், சில பிரச்சினைகள் வரலாம். சிரைகளில் ரத்தம் தேக்கம் ஏற்பட்டால் வெரிகோஸ் வெயின் (veriscovein) பிரச்சினை வரலாம்.
அதுபோல், சிலருக்கு பிறப்பிலேயே ரத்தக் குழாய்களின் வளர்ச்சி முழுமையடையவில்லை என்றால், மேல்பர்நேஷன் எனும் பிரச்சினை வரும்.
அதாவது, பிறப்பிலேயே தழும்பு மாதிரி வரும். இது, ரத்தக் குழாயில் முடிச்சுகள் ஏற்படுவதால், ரத்தம் ஒரே இடத்தில் தேங்கிவிடும். இதனால் இது, விகாரதன்மையுடன் இருக்கும். அதுபோல், சுத்தமான ரத்தம் உடல் முழுவதும் போகாமல், குறுக்கு வழியில் நேராக சிரைகளுக்குச் செல்வதால் இதயத்துக்கு சுமை அதிகமாகிவிடும். அதனால் இதயம் பலகீனப்படலாம். மேலும், ரத்தம் அடைப்பு ஏற்படுவதால் எந்த இடத்துக்கு ரத்தம் செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கு ரத்தம் செல்லாததால், அது வளராமல் போய்விடலாம். இது பிறவியேலேயே ஏற்படுவதாகும். அதுபோல், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வயதாகும்போது கொழுப்பு படியும். அது மூளைக்குப் போகும் ரத்த குழாயை அடைத்தால் பக்கவாதம் வந்துவிடும்.
இந்த ரத்தநாள அடைப்பை, அறுவைசிகிச்சை மற்றும் ஊசி மூலம் செலுத்தும் பலூன் மூலமாக சரி செய்வதற்கும் வாஸ்குலர் சர்ஜன்களுக்கு திறன் உண்டு. இது தவிர, சில சமயங்களில் மற்ற சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கு வாஸ்குலர் சர்ஜன்ஸ் உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். அதாவது, ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. அப்படியான சமயத்தில், வாஸ்குலர் சர்ஜனோட உதவி தேவைப்படும். உதாரணத்துக்கு, கர்ப்பப்பையில் ரத்தக் கசிவு அதிகமானால், அதை நிறுத்தி சரிசெய்வதற்கு வாஸ்குலர் சர்ஜனோட உதவி தேவைப்படும்.
அதேபோல், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின்போது அந்த மருத்துவக் குழுவில் வாஸ்குலர் சர்ஜன் ஒருவர் இல்லையெனில், மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்ய பர்மிஷன் கொடுக்க மாட்டார்கள். எத்தகைய உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையாக இருந்தாலும் சரி, கட்டாயம் வாஸ்குலர் சர்ஜன் ஒருவர் இருக்க வேண்டும். நீண்டநாள் கிட்னி பிரச்சினை உள்ளவர்களுக்கு, ரத்தக் குழாய்களில் ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்கு டியூப் ஒன்று போடுவார்கள். அது, தற்காலிகமானதுதான் என்றாலும் பொதுவாக அதை கிட்னி மருத்துவ நிபுணர்களே போடுவார்கள் அல்லது உயர் சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள்கூடப் போடுவார்கள். இந்த டியூப், பிளாஸ்டிக் அல்லது சிலிகான் ஆக இருக்கலாம். இதைத் தவிர்க்க அறுவைச்சிகிச்சை (arteriovenous fistula) மூலம் வாஸ்குலர் சர்ஜன்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.