உள்ளுணர்வை நம்புங்கள்… வெற்றி நிச்சயம்

Image

டிஜிட்டல் சாமியார் ஸ்டீவ் ஜாப்ஸ்

புத்திசாலிகள் முதலாளி ஆகிறார்கள், பெரும் புத்திசாலிகள் சாமியார் ஆகிறார்கள் என்பார்கள். ஒரு சிறு இழையில் சாமியாராகும் முயற்சியை கைவிட்டு, டிஜிட்டல் கடவுளாக மாறியவர்  ஸ்டீவ் ஜாப்ஸ். உள்ளுணர்வு மீது முழு நம்பிக்கை வைத்தால் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதை உலகிற்குக் காட்டும் வகையில் வாழ்ந்து காட்டிய போராளி.

பிறவியே தோல்வி

வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அமெரிக்க விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த அப்துல் ஃபட்டா ஜான் ஜண்டாலிக்கு ஜோயன் கரோல் சியபல் என்னும் சக மாணவியைப் பார்த்ததும் காதல் தீ பற்றிக்கொண்டது. இரண்டு பேரும் பின்விளைவுகள் தெரியாமல் எல்லை மீறி ஜாலியாக இருந்ததால் 1955ம் ஆண்டு மகன் ஸ்டீவ் பிறந்தார். விரும்பாமல், எதிர்பாராது வந்த குழந்தை என்பதால் இருவருக்கும் வளர்க்க முடியாத சூழல். அதனால், பழைய கார்கள் வாங்கி விற்கும் பால் ஜாப்ஸ் – கிளாரா தம்பதிக்குப் பிள்ளையைத் தத்துக் கொடுத்தார்கள்.

ஸ்டீவ் ஆறு வயது அடைந்ததும் அவனுடைய பிறப்பு ரகசியத்தைச் சொன்னார்கள். அந்த ரகசியம் குழந்தைக்குத் தெரிய வேண்டியது அவசியம் என்றே நினைத்தார்கள். இதைக் கேட்டதும் மனம் உடைந்துபோனார் ஜாப்ஸ். அந்த தம்பதியரின் அன்பு, ஆதரவினால் கொஞ்சம் கொஞ்சமாக தான் ஒரு அனாதை என்ற எண்ணத்திலிருந்து மீண்டுவந்தாலும், அந்த வடு அவரது மனதில் ஆறவே இல்லை.

எலக்ட்ரானிக்ஸ் காதலன்

ஸ்டீவ் படிப்பில் அதிக ஈடுபாடு இல்லை என்றாலும் அதீத திறமை இருக்கிறது என்பதை நான்காம் வகுப்பு ஆசிரியை இமோஜின் கண்டுபிடித்தார். முதல் மார்க் வாங்கினால் ஐந்து டாலர் பரிசு தருவேன் என்று ஜாப்ஸ் திறமைக்கு ஒரு சவால் விட்டார். அந்த ஐந்து டாலருக்காகப் படித்து, ஆசிரியை எதிர்பார்த்தபடி முதல் மதிப்பெண் வாங்கி ஜெயித்தார் ஸ்டீவ்.  அதன் பிறகே அவருடைய திறமை அவருக்குத் தெரியவந்தது.

ஸ்டீவிடம் வயதுக்கு மீறிய சாமர்த்தியம் இருந்தது. அதேநேரம், எல்லாவற்றையும் அனுபவிக்கும் ஆர்வம் இருந்தது. அதனால் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, மார்யுவானா, எல்.எஸ்.டி ஆகிய போதைப் பொருட்களை உபயோகித்தார். அவற்றில் பெரிதாக ஒன்றும் இல்லையென கண்டறிந்து, அந்த பழக்கங்களிலிருந்து சட்டென வெளியே வந்ததுதான் ஜாப்ஸின் தனித்தன்மை.

1960ம் ஆண்டுக்குப் பிறகு எலெக்ட்ரானிக்ஸ் யுகம் பிறந்தது. ஸ்டீவ் வசித்த கலிபோர்னியா மாநிலத்தில் ரேடியோ, தொலைக்காட்சி போன்றவை எல்லா வீடுகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கின. ஸ்டீவுக்கு இவற்றில் எக்கச்சக்க ஆர்வம் வந்தது. அதனால் ரேடியோ, டி.வி. அசெம்பிள் செய்வதற்கான பாகங்களை வாங்கிக் குவித்தார். பூர்வ ஜென்ம பந்தம்போல் ஸ்டீவ் எலெக்ட்ரானிக்ஸை சிக்கெனப் பிடித்துக்கொண்டார்.

இந்த நேரம் வாஸ்னியாக் என்னும் சக மாணவருடன் நட்பு வளர்ந்தது. இருவரும் எலக்ட்ரானிக்ஸ் துறையைப் புரட்டிப் போட ஆசைப்பட்டார்கள். வாஸ்னியாக் ப்ளூ பாக்ஸ் என்னும் தொலைபேசிக் கருவி கண்டுபிடித்தார். அதன் மார்க்கெட்டிங்கை ஸ்டீவ் பார்த்துக்கொண்டார். நூறு கருவிகள் விற்றார். வாஸ்னியாக்கின் கண்டுபிடிப்புத் திறமை + ஸ்டீவின் மார்க்கெட்டிங் = பிசினஸ் வெற்றி என்று இருவரும் உணர்ந்தார்கள். கை கோர்த்துத் தொழில் தொடங்க முடிவு செய்தார்கள்.

உள்ளுணர்வு தேடல்

இந்தக் கால கட்டத்தில் ஸ்டீவ் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தார். ஸ்டீவுக்குப் படிப்பு கசந்தது. நான் ஏன் பிறந்தேன்? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்கிற தத்துவக் கேள்விகள் அவர் மனதை அரித்தன. ஞானம் கிடைப்பதற்கு முன்பு புத்தர் இருந்தது போன்று குழப்பமான மனநிலைக்குப் போனார்.  

குழப்பத்தை தீர்க்கும் வழி தேடினார். யார் என்ன வழி காட்டினாலும் அதை செய்யத் தொடங்கினார். அந்த வகையில் சைவ உணவுக்கு மாறினார். செருப்பு, ஷூ போடுவதை நிறுத்தினார். எங்கு போனாலும், வெறும் கால்களுடன் நடந்தார். ஊர், ஊராக சுற்றினார். ரோடு, நண்பர்கள் அறை என்று கண்ணில் கண்ட இடங்களில் தூங்கி எழுந்தார்.

வயிறு பசித்தால் குப்பையிலிருந்து காலி கோலா பாட்டில்களைப் பொறுக்கி எடுத்து கடையில் போட்டு காசு பார்த்து, அதில் சாப்பிட்டார். அதிக பசி என்றால் ஏழு மைல் தூரத்தில் இருந்த ஹரே கிருஷ்ணா கோவிலுக்கு நடந்துபோவார். அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவார். இப்படிப் பதினெட்டு மாதங்களை ஓட்டினார்.

எதுவும் புரிபடாத நேரத்தில் நண்பர்கள் மூலம் அட்டாரி என்னும் வீடியோகேம்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். வீடியோ கேம்ஸ்க்கு பணம் அள்ளித்தரும் ஒரு கூட்டத்தையும், சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கும் ஒரு மக்கள் கூட்டத்தையும் பார்த்து ஆச்சர்யமானார். மனிதருக்குள் ஏன் இந்த வித்தியாசம் என்று பலரிடமும் கேட்டர் திருப்தியான விடை கிடைக்கவில்லை. மீண்டும் தேடத் தொடங்கினார்.

திசை மாற்றிய இந்திய பயணம்

ஹரே கிருஷ்ணா கோயில் பிரசங்கம் ஒன்று அவர் மனதைக் கவர்ந்தது. இந்தியாவில் தன்னுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்பினார். இமாலய மலைக்குச் சென்று நீம் கரோலி பாபாவை சந்தித்து தன் அத்தனை சந்தேகங்களுக்கு விடை கேட்க விரும்பினார். கையில் பணம் திரட்டிக்கொண்டு இந்தியா வந்தார். கொல்கொத்தா, ஹரித்வார் எனப் பல சுற்றல்கள். இந்திய உணவும், தண்ணீரும் ஸ்டீவ் உடலுக்குச் சேரவில்லை. ஒரே வாரத்தில் உடல் எடை 64 கிலோவிலிருந்து 55 கிலோவாகக் குறைந்தது. ஆனால், நீம் கரோலி பாபாவைப் பார்த்தாகவேண்டும் என்னும் வெறித்தனமான ஆசை. ரெயில், பஸ் பிடித்து ஆசிரமம் இருக்கும் நைனிடால் போனார். ஆசிரமத்தில் பாபா இல்லை.

பாபா எப்போது திரும்புவார் என யாருக்கும் தெரியவில்லை. அது வரை என்ன செய்வது என்று புரியாமல் நைனிடாலில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். உள்ளூர்க் குடும்பம் ஒன்று அவருக்கு தினமும் சைவ உணவு சமைத்துக் கொடுத்தார்கள். உடல்நிலை கணிசமாகத் தேறியது. அந்த அறையில் யோகியின் சுயசரிதை புத்தகம் படித்தார். அது, பரம்ஹம்ஸ யோகானந்தாவின் வாழ்க்கை வரலாறு. சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று.

ஸ்டீவ் திரும்பத் திரும்ப, மனப்பாடம் செய்யும் அளவுக்கு இந்த நூலைப் படித்தார். காவி உடைக்கு மாறினார். நீண்ட ஜடாமுடி, காவி உடை, போதைக் கண்கள். அவரே தீட்சை வாங்கின சாமியார் மாதிரி இருந்தார். இந்த காலகட்டத்தில் புத்த மதம் பற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தார். பலரிடமும் பேசினார். இந்த காலகட்டத்தில் அவர் மனதிலிருந்த பல குழப்பங்களுக்கு விடை கிடைத்தது.

அந்த நேரத்தில் ஒரு சாமியாரை சந்தித்தார் ஸ்டீவ். ‘’உனக்கு இங்கு வேலை இல்லை, நீ உன் இடத்துக்குப் போ…’’ என்று உத்தரவு போட்டார். தன்னுடைய வாழ்க்கை ஆன்மிகப் பாதையா அல்லது அறிவியல் பாதையா என்ற குழப்பத்துக்குப் பதிலை அந்த சாமியார் கூறியதாக நம்பினார். உடனே இந்தியாவிலிருந்து கிளம்பினார்.

ஞானம் கிடைத்தது

இந்த இந்திய பயணம் கொடுத்த உள்ளுணர்வு விழிப்பு குறித்து ஸ்டீவ், “அமெரிக்காவில் நாம் அறிவைப் பயன்படுத்துகிறோம். இந்தியக் கிராமங்களில் அறிவை விட உள்ளுணர்வைப் பயன்படுத்துகிறார்கள். உலகத்தின் மற்ற எல்லா மக்களையும்விட இந்தியர்களிடம் மட்டுமே உள்ளுணர்வு வளர்ச்சியடைந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அறிவை விட மிகச் சக்தி கொண்டது உள்ளுணர்வுதான். (இந்திய அனுபவத்தால்) நான் அறிவைவிட உள்ளுணர்வை நம்பத் தொடங்கினேன்.

பழி போடுவதும், பிரச்னைகளில் இருந்து விலகி ஓடுவதும் எதிர்மறைச் சிந்தனையின் விளைவுகள். எனவே ஒருபோதும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. மாறாக எப்படி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமே தோன்றும்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டுமே தவிர, யார் மீது குறை சொல்லலாம் என்று யோசிக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்தியப் பயணமும் இந்து மதம், புத்த மதமும் அவர் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கின. தன்னுடைய கனவை நோக்கி நடந்தார். ஸ்டீவ் மறுபடியும் அட்டாரி நிறுவனத்தில் வேலைக்குப் போகத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் பழைய நண்பர் வாஸ்னியாக்குடன் சந்திப்பு நடந்தது. அவர் படிப்பை முடித்துவிட்டு, அன்றைய முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹ்யூலெட் பக்கார்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். எலெக்ட்ரானிக்ஸில் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து ஹோம்ப்ரூ கம்யூட்டர் கிளப் என ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் கம்யூட்டர் மிகப்பெரியதாக இருந்தது. அதை சிறிதாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள். முதல் ஆப்பிள் கம்யூட்டர் உருவானது. ஆனால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையில் கம்யூட்டர் மட்டுமே விற்பனையானது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘வடிவம் கவர்ச்சியாக இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்டீவ் ஜாப் ஸ்டைலாக கம்யூட்டரை உருவாக்கினார்.

வாழ்க்கையில் திருப்பு முனை.

புதிய கம்யூட்டரை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்தார்கள். கம்யூட்டரைப் பார்த்ததும் அனைவருக்கும் பிடித்துப் போனது. போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த முன் பணத்தை வைத்தே அடுத்தடுத்து கம்யூட்டர் தயாரித்து விற்பனை செய்தார்கள். கடுமையாக வேலை செய்தாலும் மிகப்பெரும் லாபம் கிடைக்கவில்லை. எனவே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

அதன்பிறகு வாட்ஸ் டிஸ்னி நிறுவனம் மூலம் பிக்சார் என்ற அனிமேஷன் நிறுவனத்தை உருவாக்கினார். அது வெற்றி அடையவில்லை. அடுத்து நெக்ஸ்ட் என் சாஃப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கினார் அதுவும் தோல்வி. எனவே மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கே திரும்பினார். அங்கேயும் போராட்டமாகவே காலம் நகர்ந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1996ல் ஐமேக் என்ற கம்யூட்டரை வடிவமைத்தார்.

இது நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஐபுக் வெளியிட்டார்.  ஐமேக், ஐபுக் என இரண்டு தயாரிப்புகள் சந்தையைத் திரும்பிப் பார்க்க வைத்தன. மேக் ஓஎஸ் எக்ஸ், ஆப்பிள் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு ஆப்பிள் தயாரிப்புகள் புத்துயிர் பெற்றன. அமோக வெற்றி கிடைத்தது.  ஃபைனல் கட், லாஜிக் ஆடியோ நிறுவனங்களை ஆப்பிள் கைப்பற்றியது.

காலத்தின் வேகத்துக்கும், டெக்னாலஜியின் வளர்ச்சிக்கும் ஸ்டீவ் ஜாப் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட முடியாமல் 2003ம் ஆண்டு ஜாப்ஸின் கணையத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்றுச் சிகிச்சைகள் நடந்தும் 2011ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதேநேரம், தொழில்நுட்பத்தில் முன்னோடி, பிரிமியர் பிராண்ட், பாதுகாப்பு என்ற வகையில் இன்றும் ஆப்பிள் நிறுவனம் இன்றும் முன்னணியில் இருக்கிறது என்றால், அந்த சிந்தனைகளின் அச்சாணி ஸ்டீவ்.

உள்ளுணர்வு சரியான இடத்துக்க் அழைத்துச்செல்லும் என்பதை அவர் இந்தியாவில் கற்றுக்கொண்டர். தொடர்ந்து தோல்விகள், பிரச்னைகள் நேர்ந்தாலும் இறுதி முடிவு சரியாக இருக்கும் என்று நம்பினார். அந்த நம்பிக்கையாலே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் உலகையே அவரால் புரட்டிப்போட முடிந்தது. அதனாலே டிஜிட்டல் கடவுள் என்று போற்றப்படுகிறார்.

ஸ்டீவ் ஜாப் வாழ்க்கை மட்டுமல்ல, வார்த்தைகளும் ஒவ்வொரு நபரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டிகள்.

  • வாழ்க்கை என்பது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியான நினைவுகளை, அனுபவங்களை உருவாக்குவதுதான்.
  • உங்களின் எண்ணங்களை பிறர் எழுப்பும் சத்தத்தில் மூழ்கடிக்க அனுமதிக்காதீர்கள்
  • வாழ்வில் மிகப்பெரும் செல்வமாக நான் கருதுவது பணமோ பொருளோ அல்ல, காலம் மட்டுமே.
  • எல்லோரையும் போல சராசரியாக வாழ்க்கையில் திருப்தி அடையாதீர்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அதை அளவுகடந்து நேசியுங்கள். மற்றவர்கள் போல் உழைக்காமல் உங்களுக்கென்று தனித்தன்மையை உண்டாக்குங்கள். உதவி தேவைப்பட்டால், சரியான மனிதர்களிடம் தயக்கம் இல்லாமல் கேளுங்கள்.
  • வெற்றி அடைந்தவுடன், அவ்வெற்றியிலேயே நின்றுகொண்டிருக்காமல், அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கிவிட வேண்டும்.
  • இங்கே இருப்பது கொஞ்ச காலமே. பிறர் போன்று வாழ்ந்து வீணாக்க வேண்டாம்.
  • நேற்று பற்றிய கவலைகளை மறந்து புதிய நாளையை உருவாக்க இன்று முன்னெடுங்கள்.
  • தொழிலில் வெற்றியடைந்த பாதிப்பேரை வெற்றியடையாத மீதம் பேரிடமிருந்து பிரித்து வைப்பது அவர்களது விடாமுயற்சியே.
  • நீங்கள் எத்தனை விஷயங்களை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதனை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.
  • புதிதாக ஒரு விஷயத்தை செய்யும்போது நிச்சயம் தவறுகள் நடக்கும். அதை ஏற்றுக்கொண்டு நமது மற்ற புதிய விஷயங்களை மெருகேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
  • நீங்கள் செய்வதை நேசிப்பதே சிறந்த வேலையைச் செய்வதற்கான ஒரே வழி.
  • உங்கள் குழந்தைகளை பணக்காரர்களாக வளர்க்காதீர்கள். மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள் – அதனால் அவர்கள் வளரும்போது, ​​பொருட்களின் மதிப்பை அறிவார்கள், அவற்றின் விலை அல்ல…

Leave a Comment