என்ன செய்தார் சைதை துரைசாமி – 341
சென்னையின் பெருமைக்கு சிறுமையாகவும், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத சிக்கலாகவும் இருந்துவரும் கூவம் நதி சீரமைப்பு குறித்து மேயர் சைதை துரைசாமி தீவிரமாக சிந்தித்தும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களிடமும் ஆலோசனை நடத்திவந்தார். அப்போது மாசு படிந்த ஆறுகளை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ சுத்தப்படுத்திய சாதனை பற்றி முழுமையாக மேயர் சைதை துரைசாமி அறிந்தார்.
இந்த காலகட்டத்தில் அதாவது 2012, ஜுலை 1 முதல் 4-ம் தேதி வரை உலக மாநகர மேயர்களின் உச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட்டார். சாதாரண அரசியல்வாதியாக இருந்தால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் அரசு பணத்தில் வெளிநாட்டை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும், மதிப்பும் கிடைப்பது அபூர்வம். எனவே, இதுபோன்ற வாய்ப்புகளுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மேயர் சைதை துரைசாமி வித்தியாசமான ஒரு கோரிக்கையை வைத்தார்.
அதாவது, தன்னுடைய சொந்த செலவில் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசு முறை சுற்றுப்பயணம் என்பதால் இதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய அதிகாரிக்டளிடம், ‘’நான் மேயர் பதவிக்கு சேவை செய்வதற்கு மட்டுமே வந்திருக்கிறேன். இந்த பதவியில் அமர்ந்த தருணத்திலேயே இதன் மூலம் எந்த வசதி, சலுகை பெறுவது இல்லை என்று உறுதி எடுத்திருக்கிறேன். எனவே, எனது சொந்த செலவில் செல்வதற்கு அனுமதி வாங்குங்கள்’’ என்று கூறினார்.
இப்படி ஒரு மேயரா என்று மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஆச்சர்யப்பட்டனர். ஏனென்றால் பத்து ரூபாய் செலவு செய்துவிட்டு நூறு ரூபாய் செலவானதாக பந்தா செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தன்னுடைய சொந்த பணத்தை மட்டுமே செலவழிப்பேன் என்று பிடிவாதம் காட்டினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.