பாரம்பரிய விளையாட்டு – தட்டாங்கல்
வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இன்றைய பெண்கள் பலர் விளையாடும் ஒரு ஜாலியான பாரம்பரிய விளையாட்டு, தட்டாங்கல் ஆகும். இந்த விளையாட்டு ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்ககாலத்தில் இதன் பெயர் தெற்றி. இவ்விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.
பழங்காலத்தில் இந்த விளையாட்டை,மேலும் சுவாரஸ்யமானதாக்க பாட்டுப்பாடிக் கொண்டு ஆடுவர். இது பண்டைக்காலத்தில் கழங்கு கொண்டு ஆடப்பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழற்காய் அல்லது கழற்சிக்காய்களைக் கொண்டு விளையாடுவதே கழங்காகும். இந்த கழற்சிக்காய் என்பது இன்று கெச்சக்காய் என மருவியுள்ளது. தட்டாங்கல்தான் நாளடைவில் மெருகடைந்து அம்மானையாக மாறியிருக்கலாம்.
மேலும் இளம் பெண்கள் கழங்கு விளையாடுவதாகவும், அப்போது ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களை பாடுவதாகவும் புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள்.
முக்கூட்டு சிக்குட்டு பாவக்கா
முள்ளில்லாத ஏலக்கா,
நாங்கு சீங்கு
மரவள்ளி கிழங்கு,
ஐவார் அரக்கு
சம்பா சிலுக்கு,
அஞ்சு குத்து நாத்தனா
அழுவுறாண்டி மாப்புள,
ஏழுண்ணா என்கண்ண
எழுத்தபடியண்ண
கருத்த சொல்லண்ணே
என்பது போன்று பல பாடல்கள் இந்த நேரத்தில் பாடப்படுவதுண்டு. தட்டாங்கல் விளையாட்டு குறித்து புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தட்டாங்கல் விளையாட்டை அறிஞர்கள் மூன்றாங்கல், ஐந்தாங்கல், பத்தான்கல், பல கல், பல நாலொரு கல் என்று வகைபடுத்தியுள்ளனர். ஆனால், தேவநேயப் பாவாணர் ஏழாங்கல், பன்னிருகல், பதினாறாங்கல் என்று மேலும் மூன்று வகைகளை கூறியுள்ளார்.
தட்டாங்கல் என்ற பெயர் கற்களை மேலே தூக்கிப்போட்டு அவை கீழே விழுவதற்குள்ளே தரையினை தட்டிப்பிடிக்கும் முறை பின்பற்றப்படுவதால் தட்டாங்கல் என அழைக்கப்பட்டு இருக்கலாம். தற்போதைய தட்டாங்கல் விளையாட்டு, மேலே கல்லைப்போட்டு விழுவதற்குள் கீழே உள்ள கற்களை எடுக்க வேண்டும் என்பதாக அமையப்பட்டுள்ளது. தட்டாங்கல் பலவகைப்படும். அவையனைத்தும் வீட்டுக்குள்ளும் வீட்டுமுற்றத்திலும் விளையாடப் பெறும்.
கற்களை கீழேவைத்து ஒரு கல்லை மேலே எறிந்து, அது கீழே விழுவதற்குள் கீழே இருக்கின்ற கல்லை ஒன்று, இரண்டு, மூன்று என்ற முறைப்படி எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னிருமுறை தொடர்ந்து விளையாடினால் பழம் பெற்றவராவார். மீண்டும் முதலிலிருந்தே தொடர வேண்டும். மேலே எறிந்த கல் தவறிவிட்டால், மற்றொருவர் ஆட்டத்தைத் தொடரலாம். இவ்விளையாட்டில் கற்களுக்கேற்ப ஆட்டமும் விதிமுறைகளும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு கற்களைக் கொண்டு ஆடப்படும் ஆட்டத்தில், ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான் ஐந்தான், ஆறான், ஏழான், எட்டான், ஒன்பதான், பத்தான் என பத்து பிரிவுகள் ஆட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்க வேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும் எடுக்கவேண்டிய விதத்திற்கும் விதிமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஆரம்பிக்கும்போது ஏழு கற்களையும் கீழே விரித்தவாறு போட்டுவிட்டு, அதில் ஒரு கல்லை தாய்ச்சிக் கல் என கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இக்கல்லை மேலே வீசியெறிந்துவிட்டு அது கீழே கைக்கு வந்து சேருமுன், கீழே கிடக்கும் மற்ற கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்ததைத் தொட்டுவிடக் கூடாது) கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து விழும் தாய்ச்சிக் கல்லைப் பிடித்துவிட வேண்டும். தொடர்ந்து பத்தையும் தாய்ச்சிக் கல்லை கீழே விட்டுவிடாமல் ஆடிவிட்டால் மீண்டும் ஒண்ணானை கட்டை என்ற பெயரில் விளையாடி, ஒரு கட்டை ஜெயித்ததாகக் கொள்ளப்படும்.
மனமும் சிந்தனையும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே விளையாட முடியும் தட்டாங்கல் விளையாட்டில், பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும், கை நரம்புகளும் வலுப் பெறுகிறது. தன்னம்பிக்கை வளர்கிறது. போட்டி மனப்பான்மை உண்டாகிறது. கவனத்திறன் அதிகரிக்கிறது. ஒரேநேரத்தில் பலவித செயல்பாடுகளில் இயங்க வைக்கிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது என்கின்றனர், விளையாட்டு ஆசிரியர்கள்.
பெண்களுக்குமட்டுமல்ல, வீட்டில் இப்போது பொழுதுபோகாமல் அமர்ந்திருக்கும் ஆண்களுக்குமான விளையாட்டு இது.