டயம் மேனேஜ்மென்ட்
பெரும்பாலான மனிதர்கள் நேரத்தை திட்டமிடாமல் மாங்குமாங்கென்று உழைப்பார்கள். பகல் முழுவதும் வேலை பார்த்து முடித்த பிறகும், இன்னமும் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கும். எதை முதலில் முடிப்பது என்று புரியாமல் கண்டதையும் செய்யத்தொடங்கி குழப்பம் அடைவார்கள்.
ஒவ்வொரு அதிகாரியிடமும் ஏராளமான வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதனை முறைப்படுத்துவது அவசியம். அதாவது எது மிகமிக முக்கியம், எது அவசரம், எது அவசரமில்லை என்று செய்யவேண்டிய வேலைகளை மூன்றாக பிரித்துக்கொள்வது நல்லது. இவற்றில் மிகமிக அவசரத்துக்கு முதல் முக்கியம் கொடுக்கவேண்டும். மற்ற வேலைகளை செய்வதற்கு நேரம் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எல்லா வேலைகளையும் நாமே செய்யவேண்டுமா அல்லது பிறரிடம் பிரித்துக்கொடுகலாமா என்று தீர்மானித்து செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் எல்லா வேலைகளையும் தானே செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை. தானே நேரடியாக வேலையை செய்தால்தான் திருப்தியாக இருக்கும் என்று சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கமாக இருப்பார்களே தவிர, திறமையான நிர்வாகியாக உருவாக வாய்ப்பு இல்லை.
அதேபோன்று எந்த ஒரு செயல் செய்வதற்கும் கால, நேரம் பார்க்கக்கூடாது. ராகு காலம், எமகண்டம் என்று நேரத்தையும் அஷ்டமி, நவமி என்று சில நாட்களை ஒதுக்குவதும் ஏற்கத்தக்கதல்ல. எல்லா நாளும் நல்ல நாள், எல்லா நேரமும் நல்ல நேரம் என்ற சிந்தனையே வெற்றியாளனுக்கு அழகு. எப்படிப்பட்ட நாள், எப்படிப்பட்ட நேரம் என்றாலும் சாப்பிடுவதையோ, தூங்குவதையோ எவரும் ஒதுக்குவதில்லை. அதுபோல் நல்ல செயலை செய்வதற்கு விருப்பமின்றி காலத்தின் மீது பழி போடக்கூடாது.
நேரம் போதவில்லை என்று சொல்பவர்கள், தங்களுடைய நேரம் எங்கே வீணாகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட நேரம் செல்போன் பேசுபவதால் நேரம் போகிறது என நினைத்தால், ஐந்து நிமிடங்களுக்கு மேல் எவருடனும் பேசுவதில்லை என்று சுய கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களுக்கு விரயமாகும் நேரத்தை சுருக்கினாலே போதுமான நேரம் கிடைத்துவிடும். தினமும் அரக்கபரக்க அலுவலகம் வராமல் அரை மணி நேரம் முன்னதாக வந்துவிடும் பழக்கம் மிகவும் நல்லது. அப்போதுதான் அன்றைய பணியை நிதானமாக திட்டம்போட்டு வேலை செய்யமுடியும்.
சிலர் குடும்பத்தைவிட வேலைதான் முக்கியம் என்று இரவு பகலாக அலுவலகத்திலே கதியாக இருப்பார்கள். இதுவும் சரியல்ல. அலுவலகம் போன்றே குடும்பமும் முக்கியமானது. அதேபோல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் அத்தியாவசியமானது. போன் பேசும்போதே உடற்பயிற்சி செய்வது, தொலைக்காட்சி பார்க்கும்போது குடும்பத்தினருடன் பேசுவது என்று முடிந்தவரை ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வதும் புத்திசாலித்தனமே.
நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதும் நேரத்தை சேமிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் நேரத்தை சேமிக்கவும் முடியும். ரயில் பயணம் செய்யும்போது மடிக்கணினி எடுத்துக்கொண்டு சென்றால், அடுத்த நாள் முடிக்கவேண்டிய சில வேலைகளை பயணத்தின்போதே செய்துவிடலாம். அதேபோல் தொலைக்காட்சியில் தொடர் பார்க்கும் பெண்மணிகள், அந்த நேரத்தில் காய்களை நறுக்கிக்கொண்டே பார்த்தால், நேரம் மிச்சமாகும். குடும்பத்தில் அனைவரும் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைத்துவிட்டால் தேடும் நேரம் நிறையவே மிச்சமாகும்.












