இதுவே ஜப்பான் ரகசியம்.
மனிதர்களால் நிச்சயம் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்று ஏராளமான நபர்கள் நிரூப்பித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஏன் எல்லோராலும் அப்படி வாழ முடிவதில்லை என்று கேள்வி கேட்டாள் சகுந்தலா.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு மனித உடல் படைக்கப்பட்டுள்ளது என்று எந்த ஒரு மருத்துவமும் உறுதி செய்யவில்லை. ஒவ்வொரு உடலும் தனித்தன்மை வாய்ந்தது. 100 ஆண்டுகள் வாழ்வதற்கான ரகசியம் என்று எதுவும் இல்லை. சித்தர்கள் சொல்லி வைத்தது எல்லாம் ஆரோக்கிய குறிப்புகள் மட்டும்தான். ஆனால், வாழ்க்கையின் நீளத்தை நிச்சயம் அதிகரித்துக்கொள்ள முடியும். அதற்கான ரகசியத்தை சொல்கிறேன் கேள்.
இப்போது ஜப்பான் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் முதியவர்கள் அதிக ஆயுளுடன் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்துகொண்டு பின்பற்றினாலே போதும். அவர்கள், மூன்று நேரமும் குறைந்த அளவு மட்டுமே உணவு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் கஞ்சி போன்று காய்ச்சிக் குடிக்கின்றனர். திட உணவு என்றால் மென்று தின்கின்றனர். நொருங்கத் தின்றால் நூறு வயது என்று நம்மவர்கள் சொன்னதைத்தான் கடைபிடிக்கின்றனர். உணவுதான் உடலின் ஆயுளைக் கூட்டும் முதல் சூத்திரம். ஹோட்டல் உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் முழுமையாக தவிர்த்துவிடு. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிடு, ருசிக்காக சாப்பிடக் கூடாது.
அடுத்தது உறக்கம். எந்த நேரத்தில் எல்லாம் தூக்கம் வருகிறதோ, உடனே உறங்கிவிடு. கஷ்டப்பட்டு கண் விழித்து படிப்பதும், வேலை செய்வதும் உடலுக்கு பெரும் கேடு. குறிப்பாக பகலில் தூக்கம் வந்தாலும், தூங்குவதற்குத் தயங்காதே.
மனித உடலுக்கு நடையைத் தவிர சிறந்த பயிற்சி வேறு எதுவுமே இல்லை. வாகனங்களை முற்றிலும் தவிர்த்துவிடு. எங்கேயும் நடந்தே போ. சீரான பாதையில் மட்டுமே செல்வதைத் தவிர்த்து, மேடு, பள்ளம், மணல், மலை என்று சகல இடங்களிலும் நடந்து செல். இந்த மூன்றையும் கடைபிடிக்க முடிந்தால் நூறு ஆண்டுகளை நோக்கி நிச்சயம் செல்ல முடியும்” என்றதும் மலைத்து நின்றாள் சகுந்தலா.
’’நான் இதுவரை சொன்னது ஆரோக்கியத்துக்கான வழிகள். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் வலிமையான மனம். அதாவது, 100 ஆண்டுகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற ஆசையும் விருப்பமும் உள்ள மனம். உடலைவிட மனம் மிகவும் முக்கியமானது…” என்று ஞானகுரு சொன்னதும் ஆச்சர்யமானாள் சகுந்தலா.
’’அதெப்படி சாத்தியம். வலிமை இல்லாத உடலில் மனம் மட்டும் வலிமையாக இருந்தால், அது ஆயுளை நீட்டிக்குமா?’’ என்று கேட்டாள்.
‘’மனதிற்கு உடலின் வலிமையைப் பற்றிய கவலை ஒருபோதும் கிடையாது பெண்ணே. அது நினைத்த நேரத்தில் நிலவில் இறங்கக்கூடியது. ஆயிரம் பேர் எதிரே வந்தாலும் அடித்து நொறுக்கும் வலிமை கொண்டது. அதனால், நீண்டநாள் வாழும் பேராசை மனதுக்கு வேண்டும்.
அதற்கு முதல் படி என்ன தெரியுமா? என்ன வயது என்பதையும், இன்றும் நாளையும் என்ன நாள் என்பதையும் மறந்துவிடு. இனி, ஒவ்வொரு நாளும் உனக்கானது என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
முடிந்த வரையிலும் குடும்பம், நட்பு, உறவினர்கள் என்ற வட்டத்தைவிட்டு விலகியே நில். ஏனென்றால், நீ சிலருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் மற்றவர் உன்னை கட்டுப்படுத்துவதும் மனதை காயப்படுத்தும். புதுப்புது இடங்களை, புதுப்புது மனிதர்களை சந்தித்துக்கொண்டே இரு. நாளைய பற்றிய கவலையை மறந்து இன்றைய தினத்தில் மட்டுமே வாழு. நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடாது பற்றிக்கொள். 100 ஆண்டு மட்டுமல்ல, காலம் உள்ள வரையிலும் நீ வாழ்வாய்” என்று ஞானகுரு முடித்ததும் சகுந்தலாவிடம் புன்னகை வந்தது.