• Home
  • ஞானகுரு
  • மனிதரை ஏழையாக்கும் மூன்று முதலாளிகள்

மனிதரை ஏழையாக்கும் மூன்று முதலாளிகள்

Image

வெற்றிக்குப் புதிய பாதை

அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு எஜமான் போன்று கட்டளையிடும் இந்த விஷயங்களை நிராகரிக்கும் மனிதன் நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பான் ஆனால் இந்த விஷயங்கள் மிகவும் சந்தோஷம் தருவதாக இருப்பதால், மனிதன் இவற்றை மனதார நேசிக்கிறார்கள், இவற்றின் பிடியில் இருந்து வெளிவர விரும்புவதே இல்லை.

உணவு

முதல் விஷயம் மனிதனின் வயிறு. அடுத்த வேளை சாப்பாட்டை பதுக்கி வைத்துக்கொள்ளும் குணம் வயிற்றுக்கு கிடையாது. அதேபோல் பசிக்கு ஒரு வேளை ஓய்வு கொடுக்கும் குணமும் வயிற்றுக்கு கிடையாது. ஆனால் வயிற்றின் இயல்பு தெரியாமல் மூக்குமுட்ட சாப்பிடுவதுதான் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் முட்டுக்கட்டை போடும் முதல் விஷயம். கல்யாண சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு என்றால் வெளுத்துக்கட்டுபவர்கள் பலர். இதுதவிரவும் எப்போதும் வயிறு நிரம்பநிரம்ப சாப்பிடவேண்டும் என்ற ஆசையும் பழக்கமும் நிறைய பேருக்கு உண்டு.

உறக்கம்

கும்பகர்ணனின் கதை தெரிந்திருக்கும். உறக்கத்தின் ருசி அறிந்தவன். விழித்திருக்கும்போது கும்பகர்ணனை வெல்வதற்கு எவராலும் இயலாது. அவன் தூக்கத்தைக் கெடுத்து போருக்கு அனுப்பியதால், செத்துப்போனான். அவனுக்கு வாழ்வதைவிட தூங்குவதுதான் ரொம்பவும் பிடித்திருந்தது. அவனைப்போல் நீண்ட நேரம் தூங்குவதை நிறைய பேர் விரும்புகிறார்கள். காலையில் எழுந்து காபி குடித்துவிட்டு மீண்டும் ஒரு தூக்கம் போடுவது நிறைய பேருக்கு பழக்கம். தூங்கத்தூங்க இனிக்குதடா என்று வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

காமம்

காமத்தை சிற்றின்பம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஏனென்றால் கொஞ்சநேரம் மட்டுமே இன்பம் கொடுக்கக்கூடியது. ஆனால் மீண்டும் மீண்டும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டக்கூடியது. உலகில் உள்ள அத்தனை ஆணிடமும் பெண்ணிடமும் ஒரே மாதிரியான இன்பமே கிடைக்கும் என்றாலும், வெவ்வேறு நபரிடம் இன்பம் பெறுவதற்கு ஆசைப்படுவதுதான் காமத்தில் தோற்றுப்போவதன் முதல் அறிகுறி. இந்த விஷயத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை நோக்கி பாய்ந்து செல்கிறது மனிதகுலம்.

ஆக, அதீத உணவு, நீண்ட தூக்கம், உறவுக்கான ஏக்கம் ஆகிய மூன்றும் சாதாரண  நடைமுறை விஷயங்களாக தெரிந்தாலும், இவையே ஒரு மனிதனின் வெற்றிப்பாதையை தீர்மானிக்கின்றன.

உணவு கிடைக்கும்போது வயிறு புடைக்க சாப்பிடுவது தவறில்லை என்றே பலரும் எண்ணுகிறார்கள். நிறைய சாப்பிட்டால்தான் கடுமையாக உழைக்க முடியும் என்று சாக்கு சொல்கிறார்கள். ஆனால் வயிறு நிறைய உணவு இருக்கும்போது தூக்கம் வருமே தவிர, உழைப்பதற்கு மனம் வராது, உடலும் ஒத்துழைக்காது. வயிறு முட்ட சாப்பிடும் கணத்தில் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக தன்னுடைய உடல் நலனை அடகு வைக்கிறான் மனிதன். சாப்பிடுவதற்காகவே பிறந்தவன் போன்று மேலும் மேலும் சாப்பிடுகிறான்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நம் தமிழ் பழமொழி. மருத்துவனிடம் கேட்டால் அதிகம் சாப்பிடுபவனுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, ஞாபகக் குறைவு, கொழுப்பு, மாரடைப்பு, சிறுநீரக குறைபாடு என்று வரிசையாக அனைத்து நோய்களும் வரும் என்று எழுதியே கொடுப்பான். இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், மனிதன் மந்தமாகிவிடுவான் என்பதுதான். அவனுக்கு புதிய சிந்தனை தோன்றவே செய்யாது. நிறைய உணவு சாப்பிடும் மீன் வயிறு வீங்கி செத்துப்போவதைப் போல், மனிதனும் நிறைய தின்று உடல் நிறைய நோய்களை வரவழைத்து செத்துப்போகிறான்.

உணவைப் போலவே அதிக உறக்கமும் சிந்தனைக்கு ஆபத்து தருவதாகும். அதிகநேரம் தூங்கி எழுபவனுக்கு தேவையற்ற மன அழுத்தமும் மனக்குழப்பமும் ஏற்படுவது இயல்பு. ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு உண்டாகும். ஆனால் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டே இருப்பது சுகமாகத் தெரியும். அந்த சுகத்திற்குப் பின் ஏராளமான துன்பம் வரிசைகட்டி நிற்பது தெரியாது. உடம்பு குண்டாக மாறுவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் அதிக தூக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தூக்கத்தை விரும்பும் மனிதனுக்கு சிந்திக்கும் எண்ணமும் திறனும் இருப்பதேயில்லை. அதனால் அதிக தூக்கம் அவனை மூடனாக்கிவிடும்.

மூன்றாவது தீராத காமம். வயிற்றுப் பசியைப் போலவே காமமும் ஒரு வகையான பசி. இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் முழு செயலும் சிந்தனையும் அந்த வழியில் மட்டுமே போகும். எதிரே இருப்பது பெற்றவளா, உடன் பிறந்தவளா என்று பார்க்கமுடியாத அளவுக்கு சிந்தனை மழுங்கும். தீராத காமத்தால் உண்டாகும் பிரச்னைகளை பட்டியல் போடவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நாளேட்டில் தினம் தினம் காணப்படும் சம்பவங்களே சாட்சி.

இந்த மூன்றிலும் கவனம் செலுத்தும் மனிதர்கள் ஒருபோதும் பணம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். எதிர்கால லட்சியத்துக்குத் திட்டமிட மாட்டார்கள். எனவே, பொருளாதார விஷயத்தில் அடுத்தகட்டங்களை நோக்கி ஒருபோதும் நகர்வதில்லை. அதனால் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்கிறார்கள். இவை எல்லாமே தடைக் கற்கள் என்று உணர்ந்தவர்கள் மட்டுமே பணத்தை நோக்கி நகர முடியும்.

Leave a Comment