சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள்

Image

படிங்க… பரப்புங்க

நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.

காசு குடுத்து வாங்கலாமா?

ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் நூறு தங்கக் காசுகள் இருந்தன.​

‘’நான் இதில் உனக்கு இருபது காசுகள் கொடுத்தால் நீ என்னைப் புகழ்வாயா?” என்று கேட்டார் பணக்காரர்.

“அது எப்படி?​ எனக்கு நூற்றில் இருபதுதானே கொடுக்கிறீர்கள்?​ சமமாகப் பகிர்ந்து ​கொள்ளவில்லையே?” என்றான் ஏழை.

“சரி!​ ஆளுக்கு ஐம்பது என்று வைத்துக் கொள்ளுவோம்.”

“”சமநிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புகழுவதில்லை!”

“அப்படியானால் நூறு காசுகளையும் உமக்கே கொடுத்து விட்டால்?”

“அப்புறம் நான் உங்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை” என்றான் ஏழை.

ஏமாற்றம்!

ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான்.

“நான் அழகான கூண்டில் அடைபட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி.

ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான். அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது.

திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்.

சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,​ “என் ஜோடி கிளியும் சாகவில்லை.​ நான் தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச் சொல்லி அனுப்பியது.​அவ்வளவுதான் நண்பா,​வரட்டுமா!” என்று கூறிச் சென்றது.

வீண் பெருமை!

கோயில் கருவறையில் உள்ள கடவுளுக்கு அர்ச்சகர் ரோஜா மாலையைக் கழுத்தில் சார்த்தி தாமரை மலரைத் தலையிலும் வைத்து பூசை செய்தார். ரோஜாவுக்கும் தாமரைக்கும் கர்வம் ஏற்பட்டது. ரோஜாவைப் பார்த்து தாமரை சொன்னது.

“சேற்றில் முளைத்தாலும் இறைவன் தலை மீது அமர்ந்திருக்கிறேனே, நான்தான் பெரியவன்!” என்றது.

பதிலுக்கு ரோஜா சொன்னது, “முள்ளில் மலர்ந்தாலும் ஆண்டவன் கழுத்தில் மாலையாகத் தொங்குகிறேன். நான்தான் பெரியவன்!” என்றது.

மறுநாள் பூசை செய்ய வந்த அர்ச்சகர் எல்லா பூக்களையும் எடுத்து குப்பையில் போட்டார். “வீண் பெருமையால் பயனில்லை’ என்பதை மலர்கள் புரிந்து கொண்டன.

Leave a Comment