• Home
  • சக்சஸ்
  • நெப்போலியன் தோல்விக்குக் காரணம் இதுதான்

நெப்போலியன் தோல்விக்குக் காரணம் இதுதான்

Image

பலத்தை மறக்காதீங்க

புத்திக்கூர்மை, திறமை உள்ளவர் என்றாலும் நம்பிக்கையை இழந்துவிட்டால், தன்னுடைய பலத்தை மறந்துவிட்டால் வெற்றி காணாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வரலாற்று உண்மை சம்பவமே சாட்சி.

தன்னுடைய மன வலிமையாலும் திறமையாலும் உலகையே வெல்லக் கிளம்பிய பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன், ஒரு கட்டத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்துவிட்டார். தோல்வியால் அவமானத்தில் இருந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து, ஆப்பிரிக்க  நாட்டில் ஒரு சிறையில் அடைத்துவைத்தது. எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நெப்போலியனுக்கு அந்த தோல்வியும் கைதும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. உலகையே வெல்ல முடியும் என்று தன்னுடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த நெப்போலியன், அந்த சிறையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்.

அதனால் எந்த நேரமும் சோகத்தில்தான் இருந்தார். யாருடனும் பேசுவதை விரும்பாமல் தவிர்த்தார். அந்த நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அரசு அனுமதி பெற்று நெப்போலியனை சந்திக்க வந்தார். அவருடனும் நெப்போலியன் மனம்விட்டு பேசுவதாக இல்லை. பக்கத்தில் ஒரு காவலர் நின்றுகொண்டு அவர்கள் பேசியதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அதனால் அந்த நண்பர் நெப்போலியனிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, ’இந்த விளையாட்டை நீ தனிமையிலே விளையாடலாம். இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குள் உன்னிடம் ஒரு புதிய மாற்றத்தை இந்த விளையாட்டு காட்டிவிடும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஆனால், அவநம்பிக்கையும் அவமானத்துடனும் இருந்த நெப்போலியன் அந்த விளையாட்டை திறந்துகூட பார்க்கவே இல்லை. அந்த சிறையிலேயே சிறிது காலத்தில் நெப்போலியன் இறந்தும் போனார்.

அதன்பிறகு பிரான்ஸ் அருங்காட்சியகம், மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விடும் பணியில் இறங்கியது. அப்போது தற்செயலாக  ஆய்வு செய்த போது,  அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது

அந்த சிறைச்சாலையில் இருந்து தப்புவதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் நெப்போலியன் தன்னுடைய பலத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதால், எதற்காக நண்பர் வந்து ஒரு விளையாட்டைக் கொடுத்திருக்கிறார் என்று சிந்திக்கவே இல்லை. தன்னுடைய பலத்தை மறந்துவிட்ட அவரது அவநம்பிக்கைதான், அவரது சிந்தனையை, புத்திக்கூர்மையை உடைத்துப்போட்டது.

அதனால், எத்தகைய சோதனையான நிலைமை வந்தாலும் உங்கள் பலத்தின் மீதான நம்பிக்கையை கைவிடவே வேண்டாம். பயம், அச்சம், தோல்வி பற்றிய சிந்தனை வந்தவருக்கு வெற்றி எட்டாக்கனியாகிவிடும்.

ஒரு எலி நினைத்தால் சிமென்ட் தரையை பற்களால் ஓட்டை போட்டுவிடும். மரக்கட்டையை துளைத்துவிடும். ஆனால், அதுவே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக்கொண்டதும், தன்னுடைய பலத்தை மறந்துவிடுகிறது. மரண பயத்தில் அங்கும் இங்குமாகத் துள்ளித்துள்ளி மரணத்தைத்தான் அழைக்கிறது.

அதனால் ஒருபோதும் உங்கள் பலம் என்னவென்பதை மறக்கவே வேண்டாம். எத்தகைய துன்பம், சோதனை வந்தாலும், பலத்தால் வெற்றிபெற முடியும் என்று உறுதியுடன் நம்புங்கள். வெற்றி நிச்சயம்.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment