• Home
  • தமிழ் லீடர்
  • மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு உண்மையான காரணம் இது தாங்க..!

மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு உண்மையான காரணம் இது தாங்க..!

Image

ஸ்டாலின் நிறம் காவி

தி.மு.க. அமைச்சரவை மாற்றத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி என்னவென்றால், அது பரபரப்பாக இயங்கிவந்த மனோ தங்கராஜ் நீக்கம். ஆளும் பா.ஜ.க.வின் உத்தரவுக்கு இணங்கவே இந்த மாற்றம் என்பது தான் அரசியல் ஆச்சர்யம்.

மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பா.ஜ.க. தலைவர்கள் அலறிக்கொண்டு இருந்தார்கள். தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரிய ரசிகராகவே மாறினார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.க.வில் இருந்து ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அதன் உண்மைத்தன்மை குறித்து அறியாமலே அவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார். இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் குறைந்தது. அப்போது பா.ஜ.க.வின் உத்தரவுப்படியே பழனிவேல் தியாகராஜன் கழற்றிவிடப்பட்டார் என்று அரசல்புரசலாகப் பேசப்பட்டது. இது உண்மை என்பது இந்த அமைச்சரவை மாற்றத்தில் உறுதியாகியுள்ளது.

சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு எதிராகக் கடுமையாகக் களமாடியவர் மனோ தங்கராஜ் மட்டுமே. மற்ற அமைச்சர்கள் அனைவரும் பா.ஜ.க. விஷயத்தில் நழுவிய நேரத்தில் மனோ தங்கராஜ் மட்டுமே அடித்து விளையாடினார். அதோடு திராவிடக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதிலும் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துத் திரும்பிய பிறகு மனோ தங்கராஜ் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆவின் பால் விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்றும் கனிமொழி ஆதரவாளர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையான காரணம் பா.ஜ.க.வுடன் கள்ள உறவு மட்டுமே என்று உறுதியாகியிருக்கிறது.

ஏனெனில், அவர் வகித்துவந்த பதவிகளில் எப்படிப்பட்ட சாதனைகள் செய்திருக்கிறார் என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். அந்த பதவில், ‘’கடந்த 2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாயப் பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்…’’ என்று பதிவு போட்டுள்ளார்.

நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தி.மு.க.வின் கொடியில் இருப்பது சிவப்பு அல்ல காவி என்பது தெரியவருகிறது. இப்போதும் பா.ஜ.க. உள்ளே புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டும் அரசியல் எதற்காக ஸ்டாலின்..?

Leave a Comment