இவரே நம்பிக்கை நாயகி

Image

மானஸி ஜோஷி

திடீரென ஏற்படும் விபத்துகள் எல்லாமே கொடூரமானவைதான். அப்படிப்பட்ட விபத்துகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. ஆனால் அப்படியொரு விபத்துதான், மானஸிக்கு புத்தம்புது வாழ்க்கைக்கு வழி காட்டியுள்ளது.

ஆம், மானஸி நயன ஜோஷிதான் பாரா பேமிண்டன் போட்டியில் இன்று இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை. ஸ்விட்சர்லாந்தின் பேலஸ் நகரில் நடந்த உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் எஸ்.எல்-3 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவரை எதிர்த்து விளையாடிய நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான பாருர் பார்மரை 21-12, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

1989ம் ஆண்டு மும்பையில் பிறந்த மானஸி பிறவியிலேயே மாற்றுத்திறனாளி இல்லை.. இவரின் தந்தை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். மானஸி, மும்பை பல்கலைக் கழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற மானஸி. இயல்பிலேயே நம்பிக்கையும் குறும்புத்தனமும் நிறைந்தவர் மானஸி.

2011ம் ஆண்டுதான் அந்த கொடூரம் நடைபெற்றது.  போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை ஒன்றைக் கடக்கும் போது டிரக் ஒன்று மோதவே விபத்திற்குள்ளானார். மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மானஸியின் உடலில் முழுவதும் எலும்பு முறிவுகளும், காயங்களும் நிறைந்திருந்தன. தொடர்ந்து பத்து மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சையில் வேறு வழியே இல்லாமல்  அவரதுஇடது கால் அகற்றப்பட்டது.

அவர் எழுந்து நடப்பதற்கே ஓர் ஆண்டு ஆனது. 2012ல் செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நிலையில், நடப்பதற்கே அதிகம் சிரமப்பட்டார் மானஸி. ஆனால், மாற்றுத்திறனாளி ஆகிவிட்டதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் செயற்கை காலுடன் பாட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொண்டார். அது மட்டுமின்றி ஸ்கூபா டைவிங்கிலும் பயிற்சி பெற்றார். 2014ம் ஆண்டு பாரா போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சி செய்து, அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பிறகும் மனம் தளராமல் பயிற்சிகளை மேற்கொண்டார். தனது முழு நேரத்தையும் பேட்மிண்டனில் மட்டுமே செலவிட தொடங்கினார். அதன்பிறகே
2015ல் நடைபெற்ற பாரா ஏசியன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெள்ளி பதக்கத்தை வென்றார். ஆனால், அந்த பதக்கம் அவருக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. ஆகவே, தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்கத் தொடங்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியுடன் இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.


டோக்கியோவில்  நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது கனவு  என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மானஸி. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் தள்ளிப் போனாலும் விரைவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிவருவதில் உறுதியாக இருக்கிறார்.

மானஸியின் மன உறுதிக்கும் நம்பிக்கைக்கும் இன்னொரு அங்கீகாரம் உலக அளவில் கிடைத்துள்ளது. ஆம், இவர் உருவத்தில் பார்பி பொம்மை தயாரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சாதித்த மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களின் உருவங்களில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்ஸ்பயரிங் உமன் கான்செப்டில் முதல்முறையாக இந்தியப் பெண் மானசி ஜோஷி உருவ பொம்மை வெளியிடப்பட்டுள்ளது.

பார்பி பொம்மை வெளியிட்டதில் மானஸிக்கு மிகுந்த பெருமை. இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனம் என்னைப் போன்ற உருவ பொம்மை தயாரித்து வெளியிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.இது மற்ற பெண்களுக்கு நிச்சயம் முன் மாதிரியாக இருக்கும். அன்றாடம் சவால்களை எதிர்கொண்டு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமாக இருக்கும். பார்பி அடல்ட் பொம்மையாக இருந்தாலும், அந்த பொம்மையால் ஈர்க்கப்படுவது குழந்தைகள்தாம்.

நான் 2011-ல் விபத்தைச் சந்தித்து கால்களை இழந்து மீண்டும் எனக்காகப் போராடத் தொடங்கினேன். என்னுடைய வெற்றி என்னுடைய நம்பிக்கையால் மட்டும் உருவானது. என்னைப் போன்று நிறைய வெற்றியாளர்களுக்கு பார்பி பொம்மை வெளியிடப்பட்டுள்ளது. எங்களைப் போன்று சாதித்தவர்களின் பொம்மைகளைப் பார்க்கும்போது நிச்சயம் எங்களின் கதைகளையும் வெற்றிக்கான போராட்டங்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்வார்கள். இது அவர்களுக்கான வெளிச்சமாக அமையும்” என்று கூறியுள்ளார்.

நம்பிக்கை ராணிக்கு இன்னமும் ஏராளமான வெற்றிகள் காத்திருக்கின்றன.

Leave a Comment