ஆசிரியர் பார்வை
தங்களுடைய ஆசை மகளுக்கு கடன் வாங்கியாவது பிரமாண்டமாக திருமணம் முடித்து வைத்ததும், தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிக்கொள்ளும் பெற்றோர்கள்தான் அதிகம். அதன்பிறகு, புகுந்த வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதை எல்லாம் அந்த பெண்ணே சமாளித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.
இது நியாயம்தானா..?

பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அழகு பார்த்து வளர்த்து, படிக்கவைத்து, திருமணம் முடித்துவைத்ததும் சட்டென ஒதுங்கிக்கொண்டால், அந்த பிஞ்சு நெஞ்சு என்னவாகும் என்று யோசிக்க வேண்டாமா..? நம் சமூகத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் இப்படி நேர்கிறது. ஆண் பிள்ளை திருமணம் முடிந்தபிறகும் பெற்றோரின் ஆலோசனை கேட்டு, பெற்றோர் ஆதரவுடன் வாழ்க்கை நடத்துகிறான். அதேநேரம், பெண்ணுக்கு அவளது பெற்றோர் ஆலோசனை கூறுவதும், நம் சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால், ஒதுங்குவதே நல்லது என்று நினைக்கிறார்கள்.
ஒரு செடியை புடுங்கி வேறு ஓர் இடத்தில் நட்டுவிட்டதுடன் வேலை முடிந்துவிடாது. அது, நன்றாக துளிர்த்து மரமாக மாறும் வரையிலும் பராமரிப்பும் கண்காணிப்பும் தேவை. அப்படித்தான் பெண்ணும் புகுந்த வீட்டில் சகஜமாக புழங்கி, ‘இது என்னுடைய வீடு’ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றும் வரையில், பெற்றோர் ஆதரவும் அன்பும் மிகவும் அவசியம்.
பெண்ணுக்கு அமையும் கணவன் நல்லபடியாக அமைந்துவிட்டால் பிரச்னை இல்லை. குடிகாரனாக, சந்தேகப்புத்தி உள்ளவனாக, பண ஆசை உள்ளவனாக, சிற்றின்பப் பிரியனாக இருந்துவிட்டால் என்ன செய்வது…?
திருமணம் முடித்த பெண் கணவனை திருத்தவேண்டும் என்று சொல்வது எல்லாம் சினிமாவுக்குத்தான் நன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் சரிப்பட்டு வராது. ஏனென்றால், பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர் சொற்படி கேட்காமல்தான் இன்னமும் அவன் தவறான வழியில் போய்க்கொண்டு இருக்கிறான். அவனை திருமணம் முடித்து புதிதாக வீட்டுக்கு வந்த பெண் அன்பு காட்டி திருத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?
இதுபோன்ற தருணங்களில் பெண்ணுக்கு பெற்றோர் துணை நிற்கத்தான் வேண்டும். இல்லையென்றால் தனிமையில் அழுது அழுதே அவள் தவறான முடிவுக்குப் போய்விடுவாள். புகுந்த குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல், பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு பொய்யான ஆதரவு கொடுத்து ஏமாற்றவும் ஒரு பெரும் கயவர் கூட்டம் காத்திருக்கிறது. எனவே, பெற்றேன், வளர்த்தேன், கட்டிக்கொடுத்தேன், கடமை முடிந்தது என்று கை கழுவி விடாதீர்கள். அவள் என்றென்றும் உங்கள் மகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேநேரம், மகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். அதாவது கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் சின்னச்சின்ன ஊடல்களுக்கு எல்லாம் பஞ்சாயத்து செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை நடத்துமாறு பெண்ணுக்கு அறிவுறுத்துங்கள். ஏனென்றால், செல்லமாக வளர்க்கப்படும் இன்றைய பெண் பிள்ளைகள் தங்கள் இஷ்டப்படி வாழத்தான் ஆசைப்படுகிறார்கள்.
பிறருக்கு உரிய மதிப்பு கொடுத்து, விட்டுக்கொடுத்தால் வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்பதை அழுத்தம்திருத்தமாக பெண்ணுக்குப் புரியவையுங்கள். அதேநேரம், அவர்களுக்கு ஆதரவு கொடுக்க நீங்கள் வெளியே இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையும் விதையுங்கள்.
அதுதான் நல்ல பெற்றோரின் கடமை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்












