பணமே மந்திரம்
இயந்திரமயமான இந்த உலகில், எல்லோருக்கும், எல்லா விஷயங்களுக்கும் பணம் தேவை. பிறப்புமுதல் இறப்புவரை நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் பணம் பிரதான பங்கு வகிக்கிறது. நமது வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல, எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொண்டு வாழவேண்டும். ஆம், சேமிப்பும், சிக்கனமும் சரிசமமாக இருந்தால், பொருளாதார சமநிலை ஏற்பட்டுவிடும்.
தனிநபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தின் சேமிப்பையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி உலகச் சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இது அக்டோபர் 30ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1924ல் இத்தாலி நாட்டின் மிலனில் நடைபெற்ற முதல் உலகச் சிக்கன பேரவையில் அக்டோபர் 31ம் நாள் உலகச் சிக்கன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சேமிப்பைப் பற்றிய நமது நடத்தைகளில் மாற்றம் ஏற்படுத்துவதும், வளத்தின் முக்கியம் பற்றி நமக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
சிக்கனப் பழக்கம் இந்தியாவின் பழைமையான ஒரு நற்பண்பாகும். சிறுவயதில் இருந்தே நமது பெற்றோர் சொத்து மற்றும் சேமிப்பைப் பற்றிய முக்கியத்துவத்தைப் போதித்து வருகின்றனர். தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். இவற்றிலிருந்து நாம் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளலாம். எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு சிக்கனத்துடன் வாழ்க்கையை மேற்கொண்டு சிறுகசிறுகச் சேமிப்பது முக்கியமாகும்.
ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் 10 சதவீதத்தைச் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நிறைய பேர் சிக்கனம், கஞ்சத்தனம் ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்க்கின்றனர். அது தவறு. சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கிவிட்டுத் தேவையான செலவுகளை மட்டும் முறையாகச் செய்வது. கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக்கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டிவைத்து மகிழ்வது.
உதாரணத்துக்குச் சொல்லப்போனால், நம் வீட்டின் உணவுத்தேவைக்கு ஏற்ப சமைத்து, உணவை வீணாக்காமல் உண்பது சிக்கனம். சேமிக்க வேண்டும் என்பதற்காக அன்றாட உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது கஞ்சத்தனம். ஆக, இரண்டுமே வெவ்வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது தவிர, சேமிப்பின் அருமையை உணராத இன்னும் சிலர், அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஆடம்பரமாகவும், எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக்கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறி ஊதாரித்தனமாகவும் செலவுசெய்கின்றனர். ஆடம்பரம், ஊதாரித்தனம் போன்றவை, மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை.
தமது வருமானத்தைவிட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விஷயங்களைச் செய்யக்கூடிய ஒருவராக மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்குப் பதிலாக கிரெடிட் அட்டை முறை புழக்கத்திற்கு வந்துவிட்டது. சில கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது வரையறையில்லாமல் பயன்படுத்துவதையும் இதனால் பின்பு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். பணத்தைப் பணமாக வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்குவம் சிலருக்கு கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை.
நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால், நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத்தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி, தேவைக்கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம். பணம் மட்டுமல்ல… தண்ணீர், மின்சாரம் இப்படி நம் அன்றாட வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். அது நமக்காக மட்டுமல்ல.. நமது வருங்கால சந்ததிக்கும்தான் என்பதை உணர வேண்டும்.
ஆகையால்… இக்கணமும், எக்கணமும் சிக்கனம் அவசியம் என்பதை உணர்வதுடன், இந்த பழக்கத்தை நமது பிள்ளைகளுக்கும் கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. ஆகையால், ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்த்து, சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இந்த நாளில் உறுதியேற்போம்…