• Home
  • உறவுகள்
  • பிள்ளைகளுக்கு இவை போதும், சொத்து வேண்டாம்

பிள்ளைகளுக்கு இவை போதும், சொத்து வேண்டாம்

Image

குழந்தை வளர்ப்பு பாடங்கள்.

மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த ஞானகுருவைத் தேடி வந்தார் மகேந்திரன். அவர் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகளைக் கண்டதும், கண்களாலே காரணம் கேட்டார்.

‘’இன்று நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். சொத்தை பிரித்துத்தர மறுத்த தந்தையை. அவரது இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து கொலை செய்து, போலீஸில் சிக்கியிருக்கிறார்கள். பிள்ளைகளுக்காக அவர் சொத்து சேர்த்துவைத்தது தவறா..? இனம்புரியாத சோகத்தில் தவிக்கிறேன்…’’ என்று முடித்தார்.

‘’திருமணம் என்ற பந்தம் உருவானதும் ஆணும், பெண்ணும் ஒரு கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட உணர்வுக்கு ஆளாகிறார்கள். அந்த குழப்பத்திலிருந்து வெளியேறி, அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் முன்னரே, குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்களுடைய வாழ்க்கையின் அர்த்தமும், லட்சியமும் குழந்தை வளர்ப்பு என்ற ஒற்றைக் குறிக்கோளாக மாறிப்போகிறது.

ஒரு நல்ல குழந்தையாக வளர்ப்பதற்கு முயற்சி எடுப்பதைவிட, ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கவும், அதற்காக எத்தனை பணம் செலவழிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதுதான், பெற்றோரின் சமூக அந்தஸ்தையும், பிள்ளைகள் மீதான அன்பையும் வெளியிலகிற்குக் காட்டுவதாக நம்புகிறார்கள்.

தகுதிக்கு மீறி செலவழிக்கத் தொடங்குவதால் அவர்களுடைய வாழ்க்கை றெக்கை கட்டி பறக்கத் தொடங்குகிறது. இரவும் பகலுமாக உழைக்கும் மனிதர்களிடம், ‘ஏன் இப்படி கடுமையாக உழைக்கிறீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள். ’நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி உழைக்கிறேன்’ என்று பாச மழை பொழிவார்கள்.

தங்களுடைய எதிர்காலத்துக்கு செல்வம் தேவையோ இல்லையோ, பிள்ளைகளின் எதிர்காலத்துக்குத் தேவை என்றும், நிறைய சொத்துக்கள் சேர்த்துவைத்தால்தான், தங்கள் குழந்தை எதிர்காலத்தில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்றும் நம்புகிறார்கள். சுருக்கமாகச் சொல்வது என்றால், பணத்தில்தான் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதாகக் கருதி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து பணம் தேடி அலைகிறார்கள்.

இது சரிதானா… நல்ல வழியில் பலன் அளிக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். திறமையும் தகுதியும் உள்ள பிள்ளைகள் பெற்றோர் சேமிப்பை கண்டுகொள்வதில்லை. தகுதி இல்லாத பிள்ளைகளுக்கு செல்வத்தை நிர்வகிக்கத் தெரிவதில்லை.

எனவே, பெற்றோர் சேமித்த சொத்துக்களை கரைத்துவிட்டு, ஒன்றுமில்லாமல் நிற்கும் எத்தனையோ வாரிசுகளைப் பார்க்கிறோம். சொத்துக்காக மல்லுக்கட்டி சிறையிலும், நீதிமன்றங்களிலும் நிற்பவர்களைப் பார்க்கிறோம். சொத்துக்காக பெற்றவர்களையே கொலை செய்யும் பிள்ளைகளை பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக, நிகழ்காலத்தில் எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல், பெற்றோர் இரவும் பகலுமாக உழைத்து ஓடாய் தேய வேண்டுமா..? அப்படியென்றால் பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டியது என்ன..?

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒருசில விஷயங்கள் கண்டிப்பாக கொடுக்கத்தான் வேண்டும். அதில் முதல் விஷயம் ஆரோக்கியம். பெற்றோரின் உடல் நலன் அடிப்படையில்தான் பிள்ளைகளின் ஆரோக்கியமும் அமைகிறது. நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, புற்றுநோய் என பெற்றோருக்கு இருக்கும் பல்வேறு உபாதைகள் நாளை பிள்ளைகளுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்களை தாக்கியிருக்கும் நோய்களில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றும் வகையில் நல்ல உணவுப் பழக்கத்தையும், உடற்பயிற்சிகளையும், தேவையெனில் முன்னெச்சரிக்கை மருத்துவ வழிமுறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

அடுத்தபடியாக, பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டியது, கல்வி. அதுதான் என்றென்றும் அழியாமல் பிள்ளைகளுக்கு உதவி செய்யக்கூடியது. பிள்ளைகள் எந்த துறையில் பிரகாசிக்க ஆசைப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அந்த வழியில் பிள்ளைகள் விரும்பும் வரையில் படிப்பதற்கு உதவி செய்வதுதான் பெற்றோரின் முக்கியமான கடமை.

இதையடுத்து, பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய முக்கியமான ஒரு சொத்து நேரம். ஆம், தினமும் அரை மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிட வேண்டியது மிகவும் அவசியம். பெரும்பாலான பிள்ளைகள் விரும்புவதும் இதைத்தான். தங்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வி, பாராட்டு, அவமானம், அனுபவம் போன்றவற்றை பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு சிறிய வயதில் பிள்ளைகள் ஆர்வமாக இருப்பார்கள். அப்போது தொடங்கி அவர்களுடன் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், டீன் ஏஜ் வயதிலும், அதன்பிறகும் அவர்களுக்கு முழுமையாக ஆதரவாக இருக்க முடியும்.

எனவே, பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், கல்வி, நேரம் ஆகிய மூன்றையும் கொடுத்தால் மட்டும் போதும். இது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் மகிழ்ச்சி தரும்’’ என்றார் ஞானகுரு.

மகேந்திரன் முகத்தில் தெளிச்சி வந்தது.

Leave a Comment