திருவள்ளுவரின் ஈரடி தத்துவம்

Image

முக்காலத்துக்கும் வழிகாட்டி

. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி என்பது வரலாற்றுப் பதிவு. அப்படிப்பட்ட தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாகத் திகழ்ந்து வருகிறது வள்ளுவன் எழுதிய திருக்குறள்.
பனைஓலையில் எழுத்தாணி மூலம் எல்லாருக்கும் எக்காலமும் போற்றும் வண்ணம் முப்பால்கள் அடங்கிய திருக்குறளை இந்த மண்ணிற்கு திருவள்ளுவர் விட்டுச் சென்றுள்ளார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அது, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் எனப் பல பெயர்களில் சிறப்பிக்கப்படுகிறது. அதுபோல், இதை எழுதிய வள்ளுவரும் நாயனார், தேவர்,  முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல் என்பதாக மூன்று இயல்கள் உள்ளன. பொருட்பாலில் அரசியல், அங்க இயல், ஒழிபியல் என மூன்று இயல்கள் உள்ளன. காமத்துப்பால் களவியல், கற்பியல் என்ற இரண்டே இயல்களைக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டிருக்கின்றது.  
திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். திருக்குறளுக்கு பழங்காலத்தில் வாழ்ந்த பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதுபோல், திருவள்ளுவருக்கும் தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றை அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள்  மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது. இது தவிர லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் என்னும் கல்வி நிறுவனத்தில், வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருக்குறள் அறத்தை சொல்லிக்கொடுத்து பொருளை அள்ளிக் கொடுத்து, இன்பத்தோடு வாழ வழிகாட்டிய நூல் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக, மழலை தொடங்கி நாட்டை ஆளும் மன்னன் வரைக்கும் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று பாதை காட்டியதோடு, தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என ஏழு வார்த்தைகளில் வாழ்க்கையின் வெற்றிக்கான சூட்சுமத்தை விதைத்துச் சென்றவர் வள்ளுவர்.

தவிர கல்வியின் முக்கியத்துவம், மனிதன் வாழ்வதற்கான செல்வம், நாவடக்கம் ஆகியவற்றுக்கும் தீர்வு தந்தவர் திருவள்ளுவர். மேலும், திருக்குறளின் இரண்டாம் அதிகாரமான, ‘வான் சிறப்பு’ மழை, நீர் ஆகியவற்றின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது. இப்படி, வள்ளுவத்தின் வாழ்வியல் தத்துவங்கள் இன்றளவும் கடல் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆகையால் நாமும் வள்ளுவத்தை படித்து,  அதன் வழியில் பயணிப்போம்.

Leave a Comment