வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய சம்பவம், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம். இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவைக் கேட்டு அஜித்குமாரை அடித்து விசாரணை செய்திருக்கிறார்கள். இதில் அஜித்குமார் மரணம் அடைந்துவிட்டதால், காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அப்பாவி மரணத்துக்கு நியாயம் கேட்டு பலரும் போராடும் நிலையில், இப்போது அந்த காவலர்களின் மனைவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். அதாவது, மேல் அதிகாரிகள் இட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டியது காவலர்களின் கடமை. எனவே, இங்கு உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மதிப்பது தவறா என்று கேள்வி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் அதிகாரிகள் சொல்வதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும்போது, அவர்களை கைது செய்வது எப்படி சரியாக இருக்கும் என்று வழக்கறிஞர் நிலாவிடம் கேட்டோம்.
இந்த கேள்விக்கு நிலா, ‘’ஒவ்வொரு துறையிலும் உயர் அதிகாரிகள் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். கடுமையான சில கட்டளைகள் போடுவார்கள், அவை சட்டத்துக்குப் புறம்பானதாகவும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் அவருக்குக் கீழே இருப்பவர்கள் அப்படியே கேட்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
உயர் அதிகாரி சொல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா. அவரது வேலையின் ஒரு பகுதியா என்பதை பகுத்துப் பார்த்து செயல்படுத்த வேண்டும். கொள்ளை அடித்து வர வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் உத்தரவு போடுகிறார் என்பதற்காக அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. வேலை சட்டத்துக்குள் வரும் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.
உயர் அதிகாரிகள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் பணிமாற்றம் போன்ற தண்டனைகள் கிடைக்கலாம். சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்து கடுமையான தண்டனை, குற்றவாளி என்றெல்லாம் சிக்கலில் மாட்டுவதை விட, இதில் ஆபத்து குறைவு. சட்டத்துக்குப் புறம்பான செயல்களை செய்யத் தூண்டும் உயர் அதிகாரிகள் குறித்து அவருக்கும் மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்’’ என்கிறார் நிலா.
இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.