எடப்பாடியுடன் திருமாவின் மக்கள் நலக் கூட்டணி..?

Image

தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட்

கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ம் தேதி முழு மதுவிலக்கை வலியுறுத்தி வி.சி.க. சார்பில் மாநாடு நடத்துகிறார் திருமாவளவன். இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அவர் அழைப்பு விடுத்திருப்பதும், அதுக்கு அ.தி.மு.க. தலைமை நிச்சயம் ஆதரவு கொடுக்கும் என்று வந்திருக்கும் அறிவிப்பும் பெரும் அரசியல் மாற்றம் நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்தாலும் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற கோபம் திருமாவுக்கு உண்டு. ஆனால் பா.ஜ.வுக்கு எதிரே நிற்க வேண்டிய கட்டாயத்தினால் கூட்டணியில் இருக்கிறார்.  

இந்த நிலையில், தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் அழுத்தமாகக் கூறிவருகிறார். மேலும் திருமாவுக்குப் பிடிக்காத பா.ம.க., கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோரும் எடப்பாடி அணியில் இல்லை. ஆகவே, இப்போது அந்தக் கூட்டணிக்குப் போவதால் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நினைக்கிறார். அதோடு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அழைத்துச் சென்றுவிட்டால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வென்றுவிடும் என்று கணக்குப்போடுகிறார்.

எனவே திருமாவளவன், ‘’இந்த மாநாட்டுக்கு எந்தக் கட்சியும் வரலாம், அதிமுகவும் வரலாம்’ ‘மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது’’ என்று திரும்பத் திரும்ப அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை ஏற்று ஜெயக்குமாரும் பதில் அளித்திருக்கிறார்.

திருமாவளவன் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணியால் தான் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மீண்டும் அப்படியொரு சூழலை உருவாக்குகிறார் திருமா. அ.தி.மு.க. தலைமையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்குகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது சபலத்தில் இருக்கிறார்கள்.

எனவே, இப்போது திருமாவளவன் மீது தி.மு.க.வினர் பாயத் தொடங்கியிருக்கிறார்கள். ‘மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.உலகில் எங்குமே நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியவில்லை.சட்ட விரதோ கள்ளச்சாராயத்திற்கு தான் வழிவகுக்கும். இதுவெல்லாம் தெரிந்தும் திருமா மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்றால் நிச்சயம் அரசியல் தான் என்கிறார்கள்.

Leave a Comment