மனதை விட பலவீனமானது இல்லை. மனதை விட வலிமையானதும் இல்லை.

மந்திரச்சொல்

மனிதரின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம், பயம் துணிச்சல், நிம்மதி, கோபம் போன்ற எல்லாமே அவரது மனதின் விருப்பத்தைப் பொறுத்தே அமைகின்றன.

பொதுவாக, மனம் பலவீனமானது. ஒரு சிறிய விமர்சனம் மனிதருக்கு பெரும் வருத்தம் கொடுத்துவிடும். ஒரே ஒரு தோல்வி, ஒட்டுமொத்த முயற்சிகளையும் தடுத்து முன்னேறவே முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும்.

எதிர்காலம் பற்றிய அச்சம் மனதில் பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி. தேவையற்ற கவலையில் ஆழ்த்திவிடும். மனதை கட்டுப்படுத்த முடியாதவருக்கு, அது எதிரியாக மாறி மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்.

மனதை ஜெயித்தவர்களுக்கு அது நண்பனாகவும் உத்வேக சக்தி தரும் பயிற்சியாளராகவும் உதவுகிறது. எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும், தோல்விக்குப் பிறகு எழுந்து நிற்கும் சக்தியும் தருகிறது.  

உடல் வலிமையை விட மன உறுதியால் சாதனைகள் படைத்தவர்களே அதிகம். ’என்னால் முடியும்’ என்ற எண்ணமே வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும்.

வெயிலைக் கண்டதும், ‘கருத்துவிடுவேன்’ என்று ஒதுங்குபவர் உண்டு. வைட்டமின் டி கிடைக்கும் என்று நடப்பவர்கள் உண்டு. வெயில் ஒன்றுதான், மனநிலை வேறு.

ஹெலன் கெல்லர் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் இல்லாத மனவலிமையால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் உயர்ந்தார். ஸ்டீபன் ஹாக்கிங் உடல் முழுவதும் செயலிழந்த நிலையிலும், தனது சிந்தனையால் அறிவியல் உலகில் அழியாத இடத்தைப் பெற்றார்.

எனவே மனதை வசப்படுத்தினால் பலமாகும், புறக்கணித்தால் பலவீனமாகும். மனதை வென்றுவிட்டால் உலகை வெல்வது எளிது. மனதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் பலவீனமானவர்கள். மனதை வென்றவர்கள் வலிமையானவர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment