இலவசம் என்று எதுவும் இல்லை

தள்ளுபடி உண்மை

செல்போன் தொடங்கி தொலைக்காட்சி வரை எக்கச்சக்க விளம்பரங்கள் கண்களைக் கவர்கின்றன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 75 சதவீதம் தள்ளுபடி, குழந்தைகளுக்கு அனுமதி இலவசம், ஆணுடன் வரும் பெண்ணுக்குக் கட்டணம் இல்லை என்றெல்லாம் ஆசைகளைத் தூண்டுகிறார்கள்.

அதேபோன்று 500 ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் கட்டைப் பை இலவசம். ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் பாத்திரம், குலுக்கலில் வீட்டுமனை என்றும் அழைப்பு விடுவார்கள். இந்த தருணங்களில் எல்லோரும் உறுதியுடன் உச்சரிக்க வேண்டிய ஒரே மந்திரம், ‘இலவசம் என்று எதுவும் இல்லை’ என்பது தான்.

பொதுவாகப் பணம் என்பது மனிதரின் உழைப்புக்கு விலையாகக் கொடுக்கப்படுகிறது. அப்படி உழைத்துக் கிடைக்கும் பணத்தை யாரும் யாருக்கும் இலவசமாகக் கொடுக்க மாட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இலவசம் என்று சொல்லப்படும் சேவைகளில் மறைமுகக் கட்டணம் ஒளிந்திருக்கும். கிரடிட் கார்டு, வட்டி இல்லாத இ.எம்.ஐ. போன்றவை எல்லாமே மோசடி வலை. 75 சதவீதம் தள்ளுபடி என்றால் அதைவிட அதிக லாபம் கடைக்காரருக்கு இருக்கிறது என்பதே அர்த்தம்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் வீடியோக்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்று நினைக்கலாம். அது முழு உண்மையல்ல. உங்கள் ஆதரவு யாருக்கு, உங்கள் விருப்பம் என்ன என்பது போன்ற தகவல்களை அந்த நிறுவனங்களுக்கு உங்களை அறியாமலே கொடுக்கிறீர்கள். இந்த தகவல்களை விற்பனை செய்து பெரிதாக லாபம் சம்பாதிக்கிறார்கள். அதனாலே இலவசமாகக் கொடுக்கிறார்கள்.

எனவே, சலுகை விலை, தள்ளுபடி, கடைசி நேர விற்பனை, இலவசம் என்று எதையும் நம்பி ஏமாற வேண்டாம். இதுவே பணத்தைப் பாதுகாக்கும் வழி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment