- எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆரோக்கிய ரகசியம்!
அரை நூற்றாண்டு காலமாக எழுதி வரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் .சாகித்ய அகாடமி விருதாளர். சுமார் 200 சிறுகதைகள், 300 கவிதைகள் 600 கட்டுரைகள், ஆறு நாவல்கள் எழுதிய பின்னும் எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறவர். அவர் தனது ஆரோக்கியம் சார்ந்து பேசுகிறார்.
“நான் சின்ன வயதில் இருந்து வறுமையைப் பார்த்தவன். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 11 பேர். எங்கள் வீட்டில் ஒரு ஆப்பிள் வாங்கிக் கொண்டு வந்தால் கூட ஒன்பது துண்டுகளாக்கி ஆளுக்கு ஒரு துண்டு தான் வரும்.
எனக்கு விருப்பமான உணவு என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சாப்பிடுவேன். வறுமை சூழ்ந்த காலத்தில் எனக்கு உணவு கிடைப்பது சிரமமாக இருந்தால் பிடித்தமான உணவு பற்றி நினைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழலிலும் நான் நன்றாகப் படிப்பேன். நான் பள்ளியில் முதல் மாணவன் .மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றேன். அப்படி நன்கு படிப்பவன். பாடப் புத்தகங்கள் தவிர இன்னொரு பக்கம் வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டு நூலகங்களில் நிறைய படிப்பேன். சிறுவயதிலேயே இப்படி எனது வயிற்றுப் பசியை அறிவுப்பசியாக மாற்றிக் கொண்டேன். எனவே நிறைய படிக்க ஆரம்பித்தேன்.
நான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே நம்மூர் உணவுகளைத் தேடுவது இல்லை. அங்குள்ள உணவுகளையே சாப்பிட விரும்புவேன். அதில் அவர்களது கலாச்சாரம் இருப்பதாக நினைப்பேன். அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன் .இப்படி நான் வெளிநாடுகள் சென்ற போது கூட நம்மூர் உணவுகளைத் தேடாது அங்குள்ள புதிய உணவுகளையே சாப்பிடுவேன்.
இப்போது எனக்கு வயது 78 ஆகிறது. பற்களில் சில இல்லை. எனவே மட்டன் சிக்கன் போன்றவற்றை நான் சாப்பிடுவதில்லை .அசைவ உணவுகளில் மென்மையாக இருப்பதால் மீனை மட்டும் விரும்பிச் சாப்பிடுவேன். அதிலும் குழம்பில் போட்ட மீன் எனக்கு மிகவும் பிடிக்கும். வறுத்துப் பொரித்தவற்றைச் சாப்பிடுவதில்லை.

நாஞ்சில் நாடாகிய எங்கள் பகுதியில் பழங்காலத்தில் சமைக்கப்பட்ட உணவுகள் எல்லாம் இப்போது என்னவென்று கேட்பார்கள். அவற்றின் பெயர்களைச் சொன்னால் கூட பலருக்கும் தெரியாது .அப்படிப்பட்ட உணவு வகைகளை எல்லாம் சேகரித்துத் திரட்டி நான் ‘நாஞ்சில் நாட்டு உணவு’ வகைகள் பற்றி 500 பக்கத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறேன்.
அதில் நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன். செட்டிநாட்டு உணவில் எனக்கு மண்டி என்பது பிடிக்கும் .கறுப்பாக புளிப்பும் காரமும் கொண்டது. இப்போது நினைத்தாலும் நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறது. அதைப் பற்றி மண்டி என்றொரு கட்டுரையே எழுதி இருக்கிறேன்.
காய்கறிகளில் எனக்கு எதுவும் தள்ளுபடி இல்லை. அனைத்தையும் சாப்பிடுவேன். எனக்கு 35 ஆண்டுகளாக சர்க்கரை இருக்கிறது .ஆனாலும் அனைத்துப் பழங்களையும் நான் சாப்பிடுவேன். என் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் ஒரு பழம் எடுத்துக் கொள்வேன். அளவோடு சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளும் பழம் சாப்பிடலாம் .அவர்கள் சாப்பிடக்கூடாது என்பது ஒரு கற்பிதம். தவறான பிரச்சாரம் நான். இத்தனை ஆண்டுகளாக அனைத்து பழங்களையும் சாப்பிட்டு வருகிறேன். வயதுக்கேற்றபடி உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். கடினமாகச் சீரணிக்கும் உணவுகளைத் தவிர்த்து வருகிறேன் அவ்வளவு தான் எனது உணவுத் திட்டம்.
என்னிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது? என்று ஒரு பேட்டியில் கேட்டார்கள் அது அந்த நேரத்துப் பசியைப் பொறுத்தது என்று நான் சொன்னேன். அப்படித் பசி தான் உணவின் ருசியைத் தீர்மானிக்கிறது .நான் லாரிகளில் இந்தியாவில் பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அப்போது லாரி டிரைவரும் கிளீனரும் நெடுஞ்சாலையில் ஓரத்தில் இருக்கும் தாபாவில் சாப்பிடுவார்கள் .நானும் உடன் இருந்து சாப்பிட்டு இருக்கிறேன். அப்போது அவர்கள் அந்த ரொட்டியைப் பிய்த்து, அந்த டால் என்கிற பருப்புக் கடைசலில் மூழ்க வைத்து பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் நறுக்கென்று கடிக்கிற போதே அவர்களுடைய பசியின் ஆழம் தெரியும்.
அப்படி விரும்பிச் சுவைத்து உண்ணும் போதே அவர்கள் எவ்வளவு பசியில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஏழைகளுக்கு உணவின் வடிவாக இறைவன் வருகிறான் என்று ஒரு பைபிள் வாசகம் உண்டு. அப்போது அதை நினைத்துக் கொண்டேன்.

இந்தியாவைச் சுற்றிய போதும் உலக நாடுகளைச் சுற்றிய போதும் அப்படித்தான் நான் அங்கே கிடைக்கிற உணவுகளைச் சாப்பிட்டேன் .அந்தக் காலத்தில் சிலர் உலகச் சுற்றுப்பயணம் செய்து விட்டுப் பயணக் கட்டுரை எழுதுவார்கள் .அப்போது நியூயார்க்கில் சாம்பார் சாதம், மோர் மிளகாய் கிடைக்கவில்லை, தேடி அலைந்தோம் என்று எழுதி இருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் மரபாக மாட்டுக் கறி சாப்பிட்டவன் இல்லை. ஒரு முறை நான் கனடா சென்றிருந்தபோது அங்கே மாட்டுக் கறி இருந்தது .கம்பியில் வட்டமான துண்டுகளை அடுக்கிக் குத்தி நெருப்பில் வாட்டி சுரண்டி சுரண்டிக் கொடுத்தார்கள். சாப்பிட்டுப் பார்த்தபோது அது எனக்கு ருசியாக இருந்தது.
என் மகனைப் பார்க்க வடக்கு கரோலினா சென்றபோது சுஷீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்டான். அது பச்சை மாமிசம். பழக்கம் இல்லாததால் தயக்கமாக இருந்ததால் சாப்பிடவில்லை .ஆனால் மீண்டும் ஒரு முறை கனடாவுக்கு ஒரு நண்பரின் மகள் வீட்டுக்குச் சென்றபோது ஜப்பானிஷ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே புதிதாக ஒன்றைக் கொடுத்தார்கள். சாப்பிட்ட போது நன்றாக இருந்தது. நண்பரின் மகள் அங்கிள் அந்த உணவு எப்படி இருந்தது என்றாள் .நன்றாக இருந்தது என்றேன். அதுதான் அந்த சுஷீ என்றாள். பச்சை மாமிசம் தான். ஆனால் அதை அந்த அளவுக்குப் பக்குவப்படுத்திக் கொடுத்திருந்தார்கள் அவ்வளவு ருசியாகவும் இருந்தது.
நான் 50 ஆண்டுகளாக மது அருந்துபவன். பல்வேறு வகை மது அருந்தியுள்ளேன். ஆனால் குடிகாரன் கிடையாது. அளவோடு அருந்துவேன். என் மகன் ஜப்பானில் ஒரு மதுக் கடைக்கு அழைத்துச் சென்றான்.
டக்கீலா என்ற மதுவைக் கொடுத்தார்கள். அது மெக்ஸிகன் மதுவகை, சாராயம் போன்றது, அதை அப்படியே குடிக்க வேண்டும் எதுவும் கலக்கக் கூடாது .அது கற்றாழையில் இருந்து எடுக்கப்பட்டது .அதற்கு சைடிஷ் ஆக மது பரிமாறிய பெண் கொஞ்சம் உப்பையும் எலுமிச்சம்பழத் துண்டையும் கொடுத்தாள். உப்பை நாக்கால் நக்கிக் கொண்டு எலுமிச்சம்பழத் துண்டை சப்பிக்கொள்ள வேண்டும்.அதுதான் சைடிஷ். அப்படியே செய்தேன். அந்த ஊர்ப் பழக்கம் அது.எந்த ஊருக்குச் சாப்பிடப் போனாலும் அந்த ஊர் மரபையும் பண்பாட்டையும் மதிக்க வேண்டும். அதைத்தான் டேபிள் மேனர்ஸ் என்கிறார்கள்.
எனக்கு நண்டு சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. என் அம்மா நண்டு சமைத்தது கிடையாது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் ஒரு மனத்தடை உள்ளது. ஆனால் என் பேரன் நண்டை விரும்பிச் சாப்பிடுகிறான். நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை. என்னைக் கேட்டால் எந்த உணவையும் சிலர் உணவை ருசித்து பார்க்காமலே பிடிக்காது என்பார்கள். ஏன் பிடிக்கவில்லை? அதன் தோற்றம், மணம், ருசி எது பிடிக்கவில்லை என்று நினைத்துப் பார்த்தால் தானே தெரியும்?

உணவு வெறும் உணவு அல்ல. உணவில் கொடுப்பவர்களின் உணர்வு மட்டுமல்ல உணவில் கலாச்சாரமும் இருக்கிறது. உணவு உற்பத்தியின்போது கூட நமது கலாச்சாரம் வெளிப்படும்.
நன்றாக கத்திரிக்காய் விளைந்திருக்கும் இடத்தில் என்ன கத்திரிக்காய் நன்றாக இருக்கிறதா? என்று வழிப்போக்கர் கேட்டால் கூட அவனுக்கு கை நிறைய கத்திரிக்காய் கொடுப்பார்கள். அப்படி ஒரு மரமேறி பதநீர் இறக்கும்போது வழிப்போக்கன் வந்தால் அவனுக்குக் கொடுப்பார்கள். அதற்குக் காசு வாங்க மாட்டார்கள். இப்படி மீன் வாங்கச் செல்லும்போது குதிப்பு மின் இருக்கா என்று கேட்டால் அவர்கள் நான்கைந்து என்று எடுத்துக் கொடுப்பார்கள். காசு வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த மீன் வகை பிள்ளை பெற்றவர்களுக்கு பால் ஊறுவதற்காக கொடுக்கப்படுவது. பிள்ளைப் பால் கொடுப்பதற்கு காசு எதற்கு என்று நினைப்பார்கள். இப்படி நமது உணவுகளிலும் வியாபாரத்திலும் நமது பண்பாடு கலந்து இருக்கிறது.
மகாராஷ்டிராவில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றியவரின் வீட்டிற்குச் சென்றேன். அங்கே எனக்கு மது கொடுத்தார்கள். அது வெளிநாட்டு மதுவல்ல. அங்குள்ள சாராயம் தான். அப்போது அந்த நண்பரின் பிள்ளை ஜன்னலை சாத்தினான். நண்பர் அப்போது ஏன் சாத்துகிறாய் நாம் என்ன திருட்டு வேலையா செய்கிறோம் ?என்றார். அப்படி ஒரு பண்பாடாக இருக்கிறது. குடிப்பதைக் கூட ரகசியமாக குடிப்பதில்லை. விருந்தினர்களுக்கு வெளிப்படையாக தைரியமாகத்தான் பரிமாறுகிறோம் என்று சொல்வார்கள்.
நெல் அறுவடையின் போது வயலில் அறுத்து கதிர்களைக் கொண்டு போகும்போது நிறைய நெல்மணிகள் மண்ணில் உதிரும். அப்போது இதெல்லாம் உதிராமல் இருப்பதற்கு ஒன்றும் கண்டுபிடிக்கவில்லையா? என்று நான் கேட்பேன். அப்போது ஐந்தாவது வகுப்பு தோற்ற என் அப்பா சொல்வார், ”அதெல்லாம் நமக்கானது அல்ல. பறவைகள், எலி, அணில் போன்ற பிராணிகளுக்காக. அதை விட்டு விட வேண்டும்” என்பார். அவருக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இப்படி இதில் ஒரு பண்பாடு இருக்கிறது. இப்படி உணவு என்பது சாதாரண உணவு அல்ல. அதில் பண்பாடு அறம் அனைத்தும் கலந்துள்ளது.
நான் இயல்பாக உடல் பலம் குன்றியவன். எனவே சிறுவயதில் இருந்து எனக்கு விளையாட்டு, ஆடல், பாடல்களில் ஈடுபாடு இல்லை. மற்றவர்கள் சடுகுடு, பாண்டி போன்றவை விளையாடும் போது வேடிக்கை மட்டும் பார்ப்பேன். ஆனால் படித்துக் கொண்டிருப்பேன்.
இப்போது உடல் ஆரோக்கியத்திற்கு உடல் இயக்கம் தேவை. உடலுக்கு ஏதாவது ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. இப்போதெல்லாம் நான் தினமும் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்வேன். அதைக் கண்டிப்பாக நான் பின்பற்றி வருகிறேன். நடைப்பயிற்சி பல நோய்களுக்கு மாமருந்தாக இருக்கிறது. நோய்த் தடுப்பு மருந்தாகவும் இருக்கிறது.
நான் பெரிய பணக்காரன் இல்லை. ஆனால் நிம்மதியாக இருக்கிறேன். நிறைவாக இருக்கிறேன். இன்னும் எழுத வேண்டிய கடமைகள் இருக்கின்றன, கனவுத் திட்டங்கள் உள்ளன. அதற்குள் எமன் வந்தால் விரட்டி அடிப்பேன். எப்போதும் மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வளவுதான். இவ்வளவு தான் என் ஆரோக்கிய ரகசியம்.” என்று புன்னகைக்கிறார்.
- அருள்செல்வன்
படங்கள்: புதுவை இளவேனில்