சினிமா எனும் வாழ்க்கை – குங்ஃபூ பாண்டா
வெற்றியின் ரகசியம் என்னவென்பதை அறிவதற்கு ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறார்கள். ஆனால், வெற்றியின் உண்மையான ரகசியம் என்னவென்பதை குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கும் குங்ஃபூ பாண்டா எனும் அற்புத படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று.
குழந்தைகளுக்கான படம் என்றாலே நம்பமுடியாத சாகசங்கள் மற்றும் நகைச்சுவை எனும் எழுதப்படாத விதியை உடைத்து, சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும் வித்தியாசமான திரைப்படம் இது. வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் அதேநேரம், மூளைக்கும் மனசுக்கும் உரமூட்டும் வகையில் இதமானது.
அநீதி, அநியாயம், அக்கிரமம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்துவருவேன் என்று கிருஷ்ணர் கூறியது போன்று, அழிவில் இருந்து உயிர்களைக் காப்பாற்றக்கூடிய ஹீரோ எனப்படும் வாரியர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்கு, பயிற்சிக் கூடத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது.
நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்ட புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, கொக்கு ஆகிய ஐந்தும் தங்கள் திறமையைக் காட்டுவதற்கு காத்திருக்கின்றன. இவர்களில் ஒருவர்தான் அடுத்த வாரியர் என்று அனைவரும் நினைக்கும் நேரத்தில், முடிவு வேறுவிதமாக அமைகிறது. ஆம், அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கே சரியான நேரத்தில் வரமுடியாத சோம்பேறியான குண்டு பாண்டா, அடுத்த வாரியராக தற்செயல் விதியின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
’நடக்கவே சிரமப்படும் தொப்பை பாண்டா எப்படி வீரனாக முடியும்?’ என்று ஆசிரியர் ஷீஃபூ எனப்படும் குட்டியூண்டு செங்கரடி சந்தேகம் கேட்கிறது.
அதற்கு, ’இதுதான் விதி. கரடிகு சண்டை சொல்லிக்கொடுத்து வாரியராக மாற்றவேண்டியது உன் கடமை’ என்று சொல்லி காற்றில் கரைகிறது தலைமை குருவான ஆமை.
எந்த நேரமும் எதையாவது தின்னவேண்டும் என்ற ஆசையுடனும் மந்தபுத்தியுடன் இருக்கும் பாண்டாவுக்கு சண்டை போட சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, ஷீஃபூ டயர்டாகி விடுகிறார். ஒரு கட்டத்தில் கொழுக்கட்டை சாப்பிடுவதில் பாண்டாவுக்கு இருக்கும் அலாதி ஆர்வம் இருப்பதைக் கண்டதும், அந்த வழியில் பாடம் கற்பிக்க முடிவு செய்கிறார். அதாவது, கொழுக்கட்டை தின்பதற்காக எதையும் செய்யத் தயாராகும் இருக்கும் கரடியின் குணத்தை புரிந்துகொண்டு, அதன் மூலமே சண்டை கற்றுக்கொடுக்கிறார். எல்லா பயிற்சியும் எடுத்துக்கொண்டாலும், தன்னம்பிக்கை இல்லாமல் தீனிப்பண்டாரமாகவே இருக்கிறது பாண்டா.
அந்த ஊர் எதிர்பார்த்திருந்த ஆபத்து வருகிறது. கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வில்லன் சிறுத்தை தப்பி ஊருக்குள் வருகிறது, எதிர்த்து சண்டையிடும் புலி, குரங்கும் பாம்பு போன்றவற்றை எல்லாம் அடித்து துவம்சம் செய்கிறது.
மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ‘வெற்றி ரகசியம்’ எனப்படும் சங்கேத குறிப்பை கைப்பற்ற விரும்புகிறது சிறுத்தை. அந்த சிறுத்தைக்குப் பயந்து மக்கள் பெட்டி, படுக்கைகளுடன் ஊரைவிட்டே கிளம்புகிறார்கள்.
அந்த நேரத்தில், ‘வில்லன் சிறுத்தையை வெல்ல வேண்டும் என்றால் அந்த வெற்றி ரகசியத்தை நீ அறிந்துகொண்டு அதனுடன் சண்டை போடு…’ என்று அந்த பாதுகாப்பு ரகசியத்தை பாண்டாவிடம் ஒப்படைக்கிறது ஷூஃபி.
அந்த வெற்றி ரகசியம் எனப்படும் குறிப்பைத் திறந்துபார்க்கிறது பாண்டா. ஆனால், அது, எதுவும் எழுதப்படாத வெற்றுக் காகிதம். அது என்ன சொல்லவருகிறது என்பதை புரிந்துகொள்ளாமல், சிறுத்தையுடன் மோதி வெற்றிபெற முடியும் நம்பிக்கையை இழக்கிறது பாண்டா.
எனவே, பாண்டாவை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பிவிட்டு, சிறுத்தையுடன் மோதுவதற்குத் தயாராக காத்திருக்கிறது ஷூஃபு.
தனது சமையல்கார தந்தையுடன் பாண்டாவும் ஊரைவிட்டு கிளம்புகிறது. அப்போது பாண்டா ரொம்பவே வருத்தப்பட்டு, ‘நான் எதற்குமே லாயக்கில்லை. எனக்கு உங்களைப் போல் நன்றாக சமைக்கவும் தெரியாது. உங்கள் சமையல் சுவைக்கு ஒரு பிரத்யேக ரகசியம் இருக்கிறது, அதுவும் எனக்குத் தெரியாது’ என்று கவலைப்படுகிறது.
அதற்கு தந்தை, ‘எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி எந்த ரகசியமும் இல்லை… என்னிடம் சூப் நன்றாக இருக்கும் என்று நம்பி வருகிறார்கள்… அதனால் அவர்களுக்கு சூப் சுவையாகத் தெரிகிறது. அதை விரும்பிக் குடிக்கிறார்கள். வெற்றிக்கு ரகசியம் எதுவுமில்லை.. அவ்வளவுதான்’ என்று ஆறுதல் படுத்துகிறார்.
அப்போதுதான் பாண்டாவுக்கு வெற்றியின் உண்மையான தத்துவம் புரிபடுகிறது.
அதாவது, வெற்றிக்கு என்று பிரத்யேகமாக எந்த ரகசியமும் இல்லை, நம்பிக்கை மட்டும் போதும்… வீரன் என்று நம்பினால் வெற்றி வந்துவிடும் என்பது புரியவே, பெரும் நம்பிக்கையுடன் போர்க்களத்தில் குதிக்கிறது. சிறுத்தையை எதிர்த்து பாண்டா வெற்றியடையும் காட்சிகளும், வெற்றிக்குப் பிறகு ஷூஃபுவிடம் ஜாலியாக பாண்டா உரையாடும் காட்சிகளும் உலகத்தரமானவை.
தத்துவம் பேசினால் யாருக்குமே பிடிக்காது என்பார்கள். ஆனால், சரியான விதத்தில் எப்படிப்பட்ட தத்துவத்தையும் இதமாகச் சொல்லமுடியும் என்பதற்கு இந்தப்படமே சாட்சி.
’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவான் சொன்னதை ஒரே வரியில், ‘காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை’ என்று எளிமையாக சொல்கிறது ஊக்வே எனப்படும் ஆமை.
நேற்று என்பது ஹிஸ்டரி, நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது அதனால் அது மிஸ்ட்ரி, இன்று மட்டுமே நிஜம் அதனால் இதுதான் பிரசன்ட் உன் கையில் இருக்கும் பொக்கிஷம் என்பதுபோன்ற பொன்மொழிகள் எல்லாம் சர்வசாதாரணமாக வந்து போகின்றன.
மனதில் ஏதேனும் உறுத்தல், சங்கடம், வருத்தம் இருக்கும் நேரத்தில் இந்தப் படத்தைப் பாருங்கள். ஆயிரம் பாட்டில் அமிர்தம் குடித்த உற்சாகம் ஏற்படும்.