மாமனிதர் அம்பேத்கர் கல்வி சிந்தனைகள்
வெளிநாட்டில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமை டாக்டர் அம்பேத்கருக்கு உண்டு. அதற்கு காரணம் படிப்பு மட்டுமே தன்னை உயர்த்தும், தன் சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையால் படித்துக்கொண்டே இருந்தார். அதனாலே கற்றுக்கொண்டே இருந்தார், பட்டங்கள் வாங்கிக்கொண்டே இருந்தார்.
பொருளாதார ஆய்வாளர், மானுடவியல் ஆய்வாளர், நீரியல் அறிஞர், மொழியியல் அறிஞர், சட்ட வல்லுநர், கல்வியாளர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அம்பேத்கருக்கு ஒன்பது மொழிகளைப் பேசவும் எழுதவும் தெரியும் என்பது ஆச்சர்யமான தகவல். அம்பேத்கர் பெற்ற முதுகலைப் பட்டங்கள் மட்டும் 64. மற்றவர்கள் எட்டு ஆண்டுகள் படித்து வாங்கிய பட்டங்களை எல்லாம் அம்பேத்கர் இரண்டரை ஆண்டுகளில் பெற்றார். 50,000 நூல்களை உள்ளடக்கிய அவரது ராஜ்யகிரி நூலகமே, அந்தக் காலத்தில் தெற்காசியாவில் இருந்த மிகப்பெரிய தனியார் நூலகமாகும். லண்டன் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் அருகே சிலை வைக்கப்பட்டுள்ள ஒரே தலைவர் அம்பேத்கர்.
அவரது ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் புத்தகம், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளது. அதே பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் 100 அறிவாளிகளின் பட்டியலில் அம்பேத்கருக்கு முதலிடம் என்பது இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பது ஆகும். உலகத்தை மாற்றிய மனிதர்கள் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட 100 ஆளுமைகள் பட்டியலில் அம்பேத்கருக்கு நான்காம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியால் தனது அறிவை விரிவு செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அவர் எத்தகைய கடுமையான சூழலில் இதனை சாதித்தார் என்பதில் தான் அம்பேத்கரின் தனித்துவம் இருக்கிறது. அம்பேத்கர் கல்வி கற்ற காலம் முழுக்கவே சாதி ரீதியாகவும் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. பட்டினிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. அதிகாரத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
ஆனாலும் தனது கல்விக் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அவரது புரிதல், தனிநபர் சார்ந்த தேவையாக மட்டும் இருக்கவில்லை. அது பின்னர் அவரது குரு என்று அழைத்த ஜோதிராவ் பூலே என்கிற தலைவரின் பார்வையாகவும் இருந்தது. வளர்ச்சியும் முன்னேற்றமும் கல்வியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்கிற பூலேவின் பார்வைக்குத் தான் பின்பு பிரபல பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னும் அழுத்தம் கொடுத்தார்.
அம்பேத்கரின் கல்வி கற்கும் ஆர்வமும், விருப்பமும் வியப்புக்குரியதாக இருந்தன. அதனாலே பெரும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. அறிவு எனும் தங்கச் சுரங்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளவும், அதை சாத்தியமாக்குவதற்கான போராட்டமாகத்தான் அவர் கல்வியைக் கண்டார். அந்த கல்வியை இந்தியாவின் அடி மட்டத்தில் சமூகத்தை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று அவர் நம்பினார்.
வறுமையையும் சாதிக் கொடுமையையும் வெல்லும் வழியாக அம்பேத்கர் கல்வியை அடையாளம் கண்டுகொண்டார். ஆகவே, கல்வியை அடைவதற்கான அவரது போராட்டம் சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது.
அதாவது, அனைவரும் சமதளத்தில் ஓடும் போது அம்பேத்கர் மட்டும் தடை தாண்டி ஓடி அந்த இலக்கை அடையவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனவே அவர் கூடுதல் வலிகளையும் சவால்களையும் சந்தித்தே கல்வியை ஆயுதமாகப் பெற்றார்.
கல்வியை, ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றார் வள்ளுவர். அதையே அம்பேத்கர், ’கல்விதான் அனைத்து இழிவுகளுக்கான மருந்து’ என்கிறார். எனவே அம்பேத்கரின் பார்வையில் கல்வி என்பது மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறுகிறது.
கல்வி என்பது ஒரு இயக்கம் என்று அம்பேத்கர் நம்பினார். அதனால் தான், ‘நோக்கங்களை நிறைவேற்றாத கல்வி பயனற்றது. உண்மையான கல்வி மனிதகுலத்தைத் தொட்டிலிடுகிறது, வாழ்வாதாரத்திற்கான ஆதாரங்களை உருவாக்குகிறது, ஞானத்தை அளிக்கிறது மற்றும் சமத்துவத்தால் நம்மை நிறைக்கிறது. சமூக இழிவு, ஒடுக்குமுறை போன்றவற்றை உடைத்தெறியும் சக்தி கல்விக்கு மட்டும்தான் உண்டு’ என்று பலமாக நம்பினார். அவர் அதை மெய்ப்பிக்கும் வகையில் தன்னையே பேராயுதமாகக் கொண்டு வாழ்ந்தும் காட்டினார்.
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நீதியையும் அறநெறிகளையும் உருவாக்கக் கூடியதையே அவர் கல்வி என்றழைத்தார். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களை வகைமைப்படுத்தும் சமூகத்தை, விழுமியங்களை மதிக்கும் சமூகமாக உயர்த்த கல்வியே கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பினார்.
குலத்தொழில் வழக்கத்தை மாற்றும் செயல்வடிவமாகவும் கல்வியை உருவகித்தார். ஆகவேதான், “ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்து, தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தித் தன்னுடைய உரிமைக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” என்றார் தீர்க்கமாக.
அதனாலே இன்று இந்தியாவின் அடித்தட்டு மக்களிடம் கல்விக்குக் கிடைத்திருக்கும் விழிப்புணர்வுக்கும் முக்கியத்துவத்திற்கும் காரணமாகவும் கண்முன் தெரியும் உதாரண புருஷராகவும் அம்பேத்கர் இருக்கிறார்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்












