போட்டுத்தாக்கும் ராமதாஸ்
இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதற்கு அனுமதி இல்லை என்றாலும் தடையை மீறி போராட்டம் நடத்திய செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ் சந்தடி சாக்கில் இன்னமும் முகுந்தன் பதவியில்தான் இருக்கிறார் என்று தெளிவுபடுத்தியதில் பா.ம.க.வினர் பதறி நிற்கிறார்கள்.
இன்று கைது செய்யப்பட்ட செளமியா அன்புமணி, ‘’அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் எங்களை கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் எங்களை கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் கடும் கண்டனம்.!’ என்று தெரிவித்தார்.
இதற்கு உடனடியாக குரல் கொடுத்த டாக்டர் ராமதாஸ், ‘’திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எப்போது தேர்தல் வந்தாலும், திமுக அரசு கண்டிப்பாக படுதோல்வி அடையும். பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணியின் கைது கண்டிக்கத்தக்கது.’’ என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், ‘’பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிக்கிறார். நான் சொன்னால் சொன்னதுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து அன்புமணியுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றி அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. கட்சி முழுமையாக மகன் மற்றும் மருமகள் கைக்குப் போவதை தடுத்து நிறுத்தவே பேரனை களத்தில் இறக்குகிறார் ராமதாஸ். ஆரம்பத்தில் அன்புமணி பக்கம் நின்ற பா.ம.க. நிர்வாகிகள் இப்போது தயக்கத்தில் இருக்கிறார்கள்.
அய்யாவின் ஆட்டத்தை அன்புமணியால் நிறுத்த முடியுமா?