தத்துவமேதை ஜான் லாக் சிந்தனைகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவஞானிகளில் ஒருவரும் தாராளமயத்தின் தந்தை (father of liberalism) என்றும் அழைக்கப்படுபவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் லாக் (John Locke). இவரே இங்கிலாந்தின் முதலாவது அனுபவக் (Empiricism) கோட்பாட்டாளர் என்று கருதப்படுகிறார். ஜான் லாக் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனின் அறிவு அவனது பட்டறிவினால் மட்டுமே வந்தது என்பது இவரது கோட்பாடு. அதாவது நெருப்பு சுடும் என்ற அறிவு அவனை நெருப்பு எற்கனவே சுட்டதனால் தான் வந்தது என்பதன் அடிப்படையில் அமைந்தது என்கிறார்.
இங்கிலாந்திலுள்ள ரிங்ட்டன் என்னும் நகரில் 1632 ஆம் ஆண்டில் ஜான் லாக் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, 1656 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும், 1658 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இளமையில் இவர் அறிவியலில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். 36 ஆம் வயதில் பிரிட்டனின் தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழகத்திற்கு (Royal Society) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவத்துறையிலும் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால், மிக அரிதாகவே மருத்துவத் தொழில் செய்தார்.
ஷாஃப்டஸ்பரி பிரபுவுடன் இவருக்குக் கிடைத்த நட்பு, இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முளையாக அமைந்தது. ஷாஃப்டஸ்பரி பிரபுவுக்கு இவர் செயலாளராகவும் குடும்ப மருத்துவராகவும் ஆனார். ஷாஃப்டஸ்வரி தம் காலத்தில் முற்போக்கான அரசியல் கொள்கைகளை வலியுறுத்திய முக்கியத் தலைவராக விளங்கினார். ஷாஃப்டஸ்பரி அரசியல் நடவடிக்கைகளுக்காக இரண்டாம் சார்லஸ் மன்னர் அவரை சிறிது காலம் சிறையிலடைத்திருந்தார். 1682 ஆம் ஆண்டில் ஷாஃப்டஸ்பரி ஹாலந்துக்குத் தப்பியோடினார். அதற்கு அடுத்த ஆண்டில் அங்கு அவர் காலமானார். ஷாஃப்டஸ்பரியுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தமையால் ஜான் லாக் மீதும் அரசருக்கு ஐயம் எழுந்தது. அதனால், 1683 ஆம் ஆண்டில் லாக்கும் ஹாலந்துக்குத் தப்பிச் சென்றார். இரண்டாம் சார்லசுக்குப் பின்னர் அரசு பீடம் ஏறிய இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் 1688 ஆம் ஆண்டில் நடந்த வெற்றிகரமான இரத்தம் சிந்தாப் புரட்சியில் பதவியிலிருந்து அகற்றப்படும் வரையிலும் லாக் ஹாலந்திலேயே தங்கியிருந்தார்.
1689 ஆம் ஆண்டில் லாக் தாயகம் திரும்பி, இங்கிலாந்திலேயே வாழ்ந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த லாக்., 1704 ஆம் ஆண்டில் காலமானார்.
“மனிதனின் அறிவாற்றல் பற்றிய ஆய்வுரை” (An Essay Concerning Human Understanding) என்ற நூல்தான் ஜான் லாக்குக்கு முதலில் புகழ் தேடித் தந்தது. இந்த நூலில், மனித அறிவின் தோற்றம், இயல்பு, வரம்புகள் ஆகியவை குறித்து இவர் விரிவாக விவாதித்துள்ளார். லாக்கின் கொள்கைகள், அடிப்படையில், அனுபவ அறிவின் அடிப்படையில் உள்ளது.
“சகிப்புணர்வு பற்றிய கடிதம்” (A Letter Concerning Toleration) என்ற இவரது நூல் முதலில் 1689 ஆம் ஆண்டில் ஆசிரியர் பெயரின்றியே வெளி வந்தது. இந்நூலில், சமயத்தைச் சுதந்திரமாகப் பயிலுவதில் அரசு தலையிடலாகாது என்று இவர் வலியுறுத்தியிருந்தார். புரோட்டஸ்டான்டுப் பிரிவுகள் அனைத்தும் சமயச் சகிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய முதலாவது ஆங்கிலேயர் ஜான் லாக் என்று கூற முடியாது. எனினும் சமயச் சகிப்புணர்வுக்கு ஆதரவாக இவர் எடுத்துரைத்த வலுவாக வாதங்கள், இந்தச் கொள்கைக்கு மக்களின் ஆதரவு பெருகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையான உரிமைகள் உண்டு என லாக் உறுதியாக நம்பினார். உயிர் வாழ்வதற்குரிய உரிமை மட்டுமின்றி, தனி நபர் சுதந்திரம், சொத்துரிமை ஆகியவையும் மனிதனுக்கு உண்டு என அவர் வலியுறுத்தினார். குடிமக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் உறுதியாகக் கூறினார். அவருடைய இந்தக் கொள்கை சில சமயம் “அரசு பற்றிய இரவுக் காவலர் கோட்பாடு” (Night Watchman Theory of Government) என்று அழைக்கப்பட்டது.
மேலும் “சட்டமன்றத்தின் நடவடிக்கையானது, அதனிடம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு முரண்பட்டதாக இருக்கிறதென மக்கள் காண்கின்ற போது, அந்த சட்டமன்றத்தை அகற்றுவதற்குரிய அல்லது மாற்றுவதற்குரிய உயர் மேலதிகாரம் மக்களிடையே நிலை பெற்றுள்ளது” என்று லாக் கூறினார். இவ்வாறு புரட்சி செய்வதற்கான உரிமைக்கு லாக் அளித்த ஆதரவு தாமஸ் ஜெஃபர்சன் போன்ற அமெரிக்க புரட்சித் தலைவர்களுக்குத் தீவிரமான அகத்தூண்டுதலாக அமைந்தது.
லாக்கின் கொள்கைகள், ஐரோப்பா கண்டத்தினுள் முக்கியமாக ஃபிரான்சுக்குள் ஊடுருவிப் பாய்ந்தன. ஃபிரெஞ்சு புரட்சிக்குப் ஃபிரான்சின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் லாக்கின் கொள்கைகள் மறைமுக காரணங்களாக அமைந்தன. வால்ட்டேர், தாமஸ் ஜெஃபர்சன் போன்ற தலைவர்கள் ஜான் லாக்கைவிட அதிகப் புகழ்பெற்றவர்களாக விளங்கிய போதிலும், லாக்கின் எழுத்துகள் அவர்களுக்கு முந்தியவை என்பதையும், அவருடைய எழுத்துகள் அவர்கள் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தின என்பதையும் மறந்துவிடலாகாது.
உலகில் பல புரட்சிகள் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். இவரது சமூகக் கட்டுப்பாட்டு கோட்பாடு உலகம் முழுவதும் பரவியது. இவரது படைப்புகள் அறிவுத் தத்துவவியல், அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மனம், பிரக்ஞை, அறிவு, சுயம் குறித்து ஆராய்ந்து எழுதினார்.
‘தாராளவாதத்தின் (லிபரலிசம்) தந்தை’ எனப் போற்றப்படும் ஜான் லாக்கின் சில சிந்தனை துளிகள்
- ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தனிப்பட்ட சொத்து. இதில் அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.
- நமது வருமானம் நமக்கான காலணிகளைப் போன்றது. அது மிகச்சிறியதாக இருந்தால், இறுக்கிப்பிடிக்கும்; அது மிகப்பெரியதாக இருந்தால், தடுமாறச்செய்யும்.
- கல்வியே ஒரு நல்ல பண்புள்ளவனின் உருவாக்கத்திற்கு தொடக்கத்தைக் கொடுக்கின்றது.
- புதிய கருத்துகள் எப்பொழுதுமே சந்தேகிக்கப்படுகிறது மற்றும் எவ்வித காரணமும் இல்லாமல், பொதுவாக எதிர்க்கப்படுகின்றது.
- பெரியவர்களின் பேச்சுகளைவிட, ஒரு குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய உண்டு.
- கிளர்ச்சியானது மக்களின் உரிமை.
- நரகத்திற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் சொர்க்கத்திற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.
- அனைத்து செல்வமும் தொழிலாளியின் உற்பத்திப்பொருளே.
- மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மனிதனுக்கான வேலை.
- மனோபலமே மற்ற நற்பண்புகளுக்கான பாதுகாவலனாகவும், ஆதரவாளனாகவும் உள்ளது.
- வலிமையான உடலிலுள்ள வலிமையான மனமே, இந்த உலகில் மகிழ்ச்சியான நிலைக்கான முழு விளக்கமாகும்.
- மனிதர்களின் செயல்பாடுகளே, அவர்களின் எண்ணங்களின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதை நான் எப்போதும் நினைப்பதுண்டு.
- உனக்காகப் பொய் சொல்பவன் உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.
- புதிய கருத்துகள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படுகின்றன மற்றும் பொதுவாக எதிர்க்கப்படுகின்றன.
- உங்களிடம் இல்லாத விஷயங்கள் உங்களிடம் இருப்பதைப் பயன்படுத்துவதைத் தடுக்க விடாதீர்கள்.
- சட்டம் இல்லாத இடத்தில் சுதந்திரம் இல்லை.
- எல்லா செல்வங்களிலும் மிகவும் விலைமதிப்பற்றது நமக்கு நம்மீதுள்ள அதிகாரமாகும்.
- சட்டம் எங்கு முடிகிறதோ, அங்கு கொடுங்கோன்மை தொடங்குகிறது.
- மனிதர்களின் செயல்கள் அவர்களின் எண்ணங்களின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்.
- செல்வத்திற்கு ஆயிரம் வழிகள் உள்ளன, ஆனால் சொர்க்கத்திற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.
- பயத்தின் மிகப் பெரிய அடித்தளமே வலிதான் என்பதால், பயம் மற்றும் ஆபத்துக்கு எதிராக குழந்தைகளை வலுப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்குமான வழி, வலியை அனுபவிக்க அவர்களை பழக்கப்படுத்துவதுதான்.
- கிளர்ச்சி என்பது மக்களின் உரிமை.
- நீரூற்றுக்கு அவர்களே விஷம் கலந்து விட்டு, நீரோடைகள் ஏன் கசப்பாக இருக்கின்றன என்று பெற்றோர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
- இந்த உலகிற்கு எதிரான ஒரே வேலி அதைப் பற்றிய முழுமையான அறிவே.
- ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்ந்து, அவனது மனதால் அறியக்கூடிய பல உண்மைகளை அறியாமல் கூட கடைசியில் இறக்கலாம்.
- எல்லாச் செல்வங்களும் உழைப்பின் விளைபொருள்.
- பயிற்சி மட்டுமே மனதின் சக்திகளையும், உடலின் சக்திகளையும் அவற்றின் பரிபூரண நிலைக்கு கொண்டுவருகிறது.
- குழந்தைகளிடத்தில் இருக்கும் ஆர்வம் என்பது அறிவுக்கான பசியாகும்.
- உண்மையில் உழைப்புதான் எல்லாவற்றிலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
- மக்கள் எப்போதுமே ஒரே இடத்தில் நடப்பதால், ஒரு பாதை தோன்றுகிறது.
- இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது.












