சூப்பரான மெடிக்கல் அட்வைஸ்
நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் சாதாரண காய்ச்சல், வயிறு வலி என்றாலும் பக்கத்தில் இருக்கும் கிளினிக் அல்லது தனியார் மருத்துவமனையை நாடுகிறார்களே தவிர, அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை. ஏழைகளிலும் மிகவும் ஏழைகளுக்காகவே அரசு மருத்துவமனை இயங்குவதாக பலரும் நினைக்கிறார்கள்.
உண்மையில் ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை பரிசோதனைக் கருவிகளும், தேவனையான அளவு மருந்து, மாத்திரைகளும், மிகச்சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதனால் சின்னச்சின்ன வியாதிகளுக்கு அரசு மருத்துவமனையை நாடுவதற்குப் பழகினால் பெருமளவுக்கு பணம் மிச்சப்படுத்தலாம். கண் கண்ணாடிகள் கூட இலவசமாகக் கிடைக்கிறது.
அரசு மருத்துவமனையில் விதவிதமான நோயாளிகள் வருவார்கள், சுகாதாரமான டாய்லெட் இருக்காது, அதிக கூட்டம் இருக்கும் என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் சின்னச்சின்ன அசெளகரியங்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளப் பழகுவதே நல்லது. நாய்க்கடி, பாம்புக்கடி போன்றவைகளுக்கு சரியான மருத்துவம் மட்டுமின்றி குழந்தைகளுக்குத் தேவையான அத்தனை தடுப்பூசிகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனையில் தேவையில்லாமல் டெஸ்ட் எழுதித்தர மாட்டார்கள். தேவையில்லாமல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த மாட்டார்கள். இயற்கை பிரசவம் அரசு மருத்துமனைகளில் மட்டுமே அதிகம் நடக்கிறது. ஆகவே, அரசு மருத்துவமனையை தள்ளி வைக்காதீர்கள்.
மாலை நேரம் கிளினிக்கில் சிரித்துப் பேசி ஃபீஸ் வாங்கும் அதே மருத்துவர் தான், காலையில் அரசு மருத்துவமனை நோயாளிகளிடம் எரிந்து எரிந்து விழுகிறார் என்றாலும், எல்லா இடங்களிலும் அவர் ஒரே மாதிரியே சிகிச்சை அளிப்பார். ஆகவே, நம்பிச் செல்லுங்கள். நலமுடன் வாழலாம்.