• Home
  • ஞானகுரு
  • கடவுள் நம்பிக்கை இல்லாதவரே உலகில் அதிகம்

கடவுள் நம்பிக்கை இல்லாதவரே உலகில் அதிகம்

Image

பகுத்தறிவு முக்கியம் என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், கோயில்களில் இப்போதும் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோயில்களில் பணம் கொட்டுகிறது. அப்படியென்றால் கடவுள் நம்பிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தானே அர்த்தம் என்று கேள்வி கேட்டார் மகேந்திரன்.

கடவுள் நம்பிக்கை இருப்பதாக கண் முன் நீங்கள் பார்ப்பது எல்லாம் உண்மை அல்ல. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த உலகில் அதிகம் என்றார் ஞானகுரு.

’’அதெப்படி அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்றார் மகேந்திரன்.

‘’எல்லா மதத்தினரும் கடவுளை கும்பிடுகிறார்கள். எல்லோரும் கடவுளை நம்புகிறார்கள். ஆனால், சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுகிறவன் அல்லாவையும் இயேசுவையும் கடவுள் இல்லை என்று தான் சொல்லுவான். இஸ்லாமியர்களிடம் கேட்டுப் பார்த்தால் அல்லாவைத் தவிர வேறு யாருமே கடவுள் இல்லை என்பார்கள். கிறிஸ்தவம், சீக்கியம் என்று உலகில் உள்ள அத்தனை மதங்களும் அவர்களுடைய கடவுளைத் தவிர மற்றவர்களை முழுமையாக மறுக்கிறார்கள்.

ஒருவர் வணங்கும் கடவுள் மற்றவர்களுக்கு இல்லை என்றால் என்ன அர்த்தம். அதாவது மற்ற கடவுள் மீது அவநம்பிக்கை வைக்கிறார்கள். எல்லோரையும் கடவுள் என்று ஏற்கும் மனது எந்த மதத்தினருக்கும் இருப்பதில்லை. ஆகவே, இவர்கள் நாத்திகம் பேசுபவர்களை விட மோசமான கடவுள் மறுப்பாளர்கள்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

யோசிக்கத் தொடங்கினார் மகேந்திரன்.