ஏப்ரல் 17 தீரன் சின்னமலை பிறந்த நாள்
நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த மாமனிதர்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் பிறந்த நாள் இன்று. 1756-ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி.
இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தான் கற்றுக்கொண்ட கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். மைசூர் மன்னன் ஹைதர் அலிக்கு கொண்டுசெல்லப்பட்ட வரிப்பணத்தைப் பறித்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து புரட்சிக்காரராக அறியப்பட்டார்.
ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் கடுமையாக எதிர்த்த சின்னமலை, ஹைதர் அலி இறந்ததும் அவரது மகன் திப்பு சுல்தானுடன் கைகோர்த்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடினார்.
போரில் வெல்லமுடியாத சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து தூக்கிலிட்டனர். ஆங்கிலேயர்களை நடுநடுங்கச் செய்த தீரன் சின்னமலையின் வீரத்துக்கு மரியாதை செலுத்துவோம்.
