சுவைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு நாளும் மனிதன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதேநேரம் தனக்கு மட்டும் இப்போதைக்கு வராது என்ற நம்பிக்கையில் தான் இந்த உலகம் சுவாரஸ்யமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று மகேந்திரனுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஞானகுரு.
மரணத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறதே..?
மனிதன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த உயிரினமும் மரணத்தை விரும்புவது இல்லை. அதேபோல் தனக்கு இப்போதைக்கு மரணம் வராது என்றே ஒவ்வொருவரும் உறுதியுடன் நம்புகிறார்கள். உயிருக்கு ஆபத்து வந்தால் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். ஆனால் எந்தக் கடவுளாலும் எந்த மதத்தாலும் மரணத்தை நிறுத்தமுடியாது. ஆம், இந்த உலகில் இதுவரை எந்த மனிதனும் சிரஞ்சீவியாக வாழ்ந்ததே இல்லை.
அப்படியென்றால் மரணம் என்றால் என்ன?
அது வாழ்க்கையின் முடிவல்ல, இன்னொரு ஆரம்பம். அதன் சூட்சுமம் மனித மூளைக்கு அப்பாற்பட்டது.. மரத்தின் இலை கீழேவிழுந்து மட்கியதும் மரத்துக்கு உரமாகி மீண்டும் இலையாக மாறுவதைப்போல், இந்த மரணத்துக்கும் வாழ்க்கை உண்டு. அதனால் மரணத்தைக் கண்டு அச்சம் வேண்டாம். எந்தஒரு திருப்பத்திலும், நிமிடத்திலும் மரணம் காத்திருக்கலாம் அதனால் மரணத்தை தவிர்க்கவோ, எதிர்க்கவோ முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் மரணத்தைத் தடுக்க முடியாது. அதனால் மரணத்தை இயல்பாக எதிர்கொண்டு மனமார வரவேற்க வேண்டும்.
மரணத்தை எப்படி வரவேற்க முடியும்?
பூக்களை ரசிப்பதுபோல் மரணத்தை ரசிக்க வேண்டும் மணமும் உயிர்ப்பும் உள்ள வரை மலர்களைக் கொண்டாடுவதுண்டு. அதன்பிறகு குப்பைத்தொட்டிக்குப் போய்விடும். அப்படித்தான் உயிர் இருக்கும் வரை ரசித்து வாழவேண்டும். உயிருக்கு இடைஞ்சல் வரும்போது ஆனந்தமாக மரணிக்க முன்வர வேண்டும்.
கடமை முடிவடையும் வரை மரணத்தை தள்ளிப்போட ஆசைப்படலாம். அது, அலை நின்றதும் மீன் பிடிப்பதற்கு சமம். தனி மனித கடமைக்கும் மரணத்துக்கும் தொடர்பு கிடையாது. ஒருவர் இல்லையென்றால் இந்த உலகில் எதுவும் நிற்பதில்லை. ஏதாவது நடக்கும். அதனால் வீட்டுக்கு வரும் உயர் அதிகாரி அல்லது பிடித்தமான நண்பர் போன்று மரணத்தை வரவேற்கும் மனநிலை வேண்டும். தெருவில் விளையாடும் குழந்தை, தூரத்தில் அம்மாவைப் பார்த்ததும் ஓடிவந்து ஆசையாக கட்டிப்பிடிக்குமே, அப்படி மரணத்தை தழுவிக்கொள்ள வேண்டும். மரணத்தை ரசிக்கும் மனநிலை வந்துவிட்டால், சகிப்புத்தன்மையும் ஆனந்தமும் மனதில் பொங்கும், தங்கும்.
மரணத்தை ரசிப்பது எப்படி?
இறைச்சிக் கடைகளில் கோழிகளை ஒரே இடத்தில் அடைத்திருப்பார்கள். அந்தக் கோழிகளின் கண் எதிரில்தான் பிறகோழிகள் வெட்டப்படும். அதைக்கண்டு மற்ற கோழிகள் கத்தி, கூப்பாடு போவதில்லை. மரணத்தை வேடிக்கை பார்க்கும். வெட்டப்பட்ட கோழியின் உடல் துண்டு வீசப்பட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் உணவாக கொத்தித் தின்னும். மரணம் வரும்வரையிலும் வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் கோழியைப்போல் நீயும் வாழுங்கள்.
அதாவது, எப்படிப்பட்ட சூழலிலும் வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். அப்போது தான் மரணத்தின் சுவை இனிப்பு என்பது தெரியவரும். வாழ்க்கையை அனுபவிக்கும் ஒவ்வொரு நபராலும் மரணத்தையும் ரசிக்க முடியும்’’ என்றார் ஞானகுரு.
’’இன்னமும் மனம் திருப்தி அடையவில்லை’’ என்றார் ஞானகுரு.
‘’அச்சம் அகலாத வரையிலும் சுவையைக் கண்டறிய முடியாது. எனவே நீங்கள் நிதானமாக மரணம் பற்றி பேசலாம். உங்களுக்குத் தான் மரணம் இல்லையே’’ என்று சிரித்தார் ஞானகுரு.
மரணம் பற்றி பேச்சு முதன்முதலாக மகேந்திரனுக்கு இனிப்பாக இருந்தது.