கிறிஸ்தவத்தை உலுக்கிய பாதிரியாரின் மகன்

Image

அன்பு கடவுளை விட மேலானது.

அரசியல்வாதிகள் என்றாலே மத நம்பிக்கைக்குள் போகவே மாட்டார்கள். ஏனென்றால் மக்களின் மத நம்பிக்கையில் கை வைத்தால் ஆதரவு கிடைக்காது என்று அஞ்சுவார்கள். ஆனால், அரசியல்வாதியாக இருந்த ஒருவருக்கு கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகப் பேசிய பிறகும், அவர் மீது அன்பு செலுத்தினார்கள், ஆதரவு தெரிவித்தார்கள் என்றால், அது இங்கர்சாலின் வாய்மைக்குக் கிடைத்த மரியாதை.

அவர் ஒரு பாதிரியாரின் மகன். கிறிஸ்தவ வேதங்களை கரைத்துக் குடித்தவர். அதனால் அவர் எழுப்பிய விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் யாராலும் பதில் தர முடியவில்லை.

நியூயார்க்கில் பாதிரியார் ஒருவரின் மகனாகப் பிறந்து, பைபிள் மற்றும் மதம் தொடர்பான அத்தனை நூல்களையும் நுட்பமாகக் கற்றுத் தேர்ந்தவர் இங்கர்சால். தன்னைப் போலவே தன் மகனும் மதப் போதகராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை. அதற்காகவே இங்கர்சாலை தயார் செய்தார்.

ஆனால், தந்தையின் ஆசைக்காக அத்தனையும் படித்து முடித்தாலும், தன்னுடைய பணத் தேவைக்காக சட்டம் படித்து முடித்தார். அதன் பிறகு அரசியலிலும் இறங்கினார். கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

மதத்தை விட அன்பு முக்கியமானது என்பதை மக்களுக்கு சொல்லிக்கொடுத்தார். நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து, நாட்டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ, மக்களைப் பிடித்தாட்டும் மதவெறி, மூடநம்பிக்கை, கண்மூடி வழக்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்தார். மதத்தில் பிணைந்திர்க்கும் உண்மை, சரி, தவறு போன்ற அனைத்தும் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று சொற்பொழிவு ஆற்றினார்.

மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்றால், அவர்களுக்குள் போர்களும், ரத்தச் சிந்தல்களும், மூட வெறிச் செயல்களும், விரோத பகை உணர்வுகளும் இருக்கும் வகையில் எதற்காகப் படைத்தார்?

மனிதர்கள் இவ்வுலகில் துன்பப்பட்டாலும் மறுவுலகில் இன்பம் அடைவார்கள் என்பது முட்டாள்தனம் என்று கடுமையாக சாடினார். பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்படும் கொடுமையை ஏன் உருவாக்கினார்? என்றெல்லாம் மிக எளிமையான அறிவார்ந்த கேள்விகளை எழுப்பினார்.

அன்பு மட்டுமே உலகிலேயே தலை சிறந்த நெறி என்றார். கடவுள் நம்பிக்கை, ஜெபம் செய்வதை விட மனிதர்களை அன்பு செய்வதே உயர்ந்தது. கடவுளை அன்பு செய்வதை விட மனிதனை அன்பு செய்வதே முக்கியம். மனிதகுல மகிழ்ச்சியே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய அரசியல்வாதி.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், பேய், பூதம் பிசாசு அல்லது ஆவிகள், கடவுள், மதம் என்றால் என்ன என்பது போன்ற விழிப்புணர்வு புத்தகங்கள் எழுதினார். இன்று வரை நாத்திகர்களின் பாடப்புத்தகமாக இந்த நூல்கள் திகழ்கின்றன.  

வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய பொருளையெல்லாம் பொதுமக்களின் பணிக்கே செலவிட்டார். உலகப் பிரளயக் கதை சொன்ன மோசோயைவிட டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாடு மேலானது, சரியானது என்று கூறினார்.

மத நூல்களை எழுதின எல்லோரையும்விட, ஹெக்கேல், ஹக்ஸ்லி, டின்டால் முதலிய அறிஞர்களின் எழுத்துக்கள், பூமியைப் பற்றி, வின்வெளியைப் பற்றி, மனித உடல்பற்றி, வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்னை ஈர்க்கின்றன என்று அறிவியலை உயர்த்திப் பிடித்தார்.

அவரது ஒரு சில பொன்மொழிகள் மட்டும் இங்கே.

  • மதத்தால் மனித குலத்தை சீர்திருத்த முடியாது ஏனெனில் மதம் என்பது ஒரு அடிமைத்தனம்.
  • உலகத்திலேயே மிகவும் மலிவான பொருள் அன்பு. மிக  விலை உயர்ந்த பொருளும் அன்பு தான்.
  • மனிதனின் அதிர்ஷ்டம் அவன் தலைவிதியில் இல்லை, அவன் நடத்தையில் உள்ளது.
  • நன்மையும் தீமையும் மனிதனது அனுபவத்தாலும் சிந்தனையாலும் தீர்மானிக்கப்பட்டது. நன்மைக்கு மட்டும் உங்களை திசை திருப்புங்கள்.
  • மகிழ்ச்சி அடைவதற்கான எளிய வழி, மற்றவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
  • வாழ்க்கை முற்றிலும் தென்றலாக இருப்பதில்லை, சூறாவளியாகவும் இருப்பதில்லை. இரண்டும் கலந்ததே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • மனித சமுதாயத்தை இழிவு படுத்தவும் அடிமைப்படுத்தவுமே மூடக் கொள்கைகள் எல்லாம் உபயோகப்பட்டிருக்கின்றன.

Leave a Comment