சாகும் நேரத்தில் சங்கரா ரகசியம்

ஞானகுரு க்யூட் குட்டிக் கதை

கேள்வி : சாகுற நேரத்தில் சங்கரா சங்கரா என்கிறார்களே, அது என்ன..?

  • டி.வாசுகி தங்கராஜ், வள்ளிக்குளம்.

ஞானகுரு :

அது ஒரு நல்ல கதை. ஒரு பணக்காரர் மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்கான வழியை ஒரு குருவிடம் கேட்டார். மரணம் வரும்போது, நீ சொல்லும் கடைசி வார்த்தை சங்கரா என்பதாக இருந்தால், நீ சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்று சொன்னார். சொர்க்கத்துக்குப் போவது இத்தனை எளிதா என்று நினைத்த பணக்காரர் அதை மனதில் நன்றாக பதிய வைத்துக்கொண்டார். கடைசி காலத்தில் அவருக்கு நோய் வந்தது, நிறைய அவஸ்தைப்பட்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் சங்கரா என்று சொல்லவே இல்லை. ஏனென்றால், இன்னமும் மரணம் நெருங்கவில்லை என்றே நினைத்தார். ஒரு கட்டத்தில் சங்கரா என்று சொல்லாமலே செத்தும் போனார்.

என் அப்பாவால் ஏன் சங்கரா என்று சொல்லமுடியாமல் போயிற்று என்று அந்த குருவிடம் கேட்டான் அவரது மகன். ‘சாகும்போது மட்டும் சங்கரா சங்கரா என்று சொல்வது யாராலும் முடியாது. உயிருடன் இருக்கும்போதே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்து பழகுதல் வேண்டும்…’ என்று சொன்னாராம். இதுதான் தத்துவம். எந்த ஒன்றுக்கு ஆசைப்பட்டாலும், அதனை வாழ்நாள் முழுக்க கடைபிடித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

Leave a Comment