என்ன செய்தார் சைதை துரைசாமி – 506
எந்த ஒரு திட்டம் குறித்துப் பேசுவதாக இருந்தாலும், அதற்குரிய ஆதாரங்கள் காட்டியே பேசுவார் மேயர் சைதை துரைசாமி. அப்படித்தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன், மலிவு விலை உணவகம் நடத்தி ஏழைகளுக்கு ஆரோக்கிய உணவு வழங்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
சைதை துரைசாமி கூறியதை எல்லாம் ஆர்வமுடன் கேட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நியாயமான சில கேள்விகள் எழுந்தன. அதாவது, ‘உண்மையில் இத்தனை குறைந்த செலவில் நல்ல உணவு தயாரிக்க முடியும் என்றால் ஏன் ஹோட்டல்களில் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள், நிறைய ஹோட்டல்கள் நஷ்டமடைந்து மூடப்படுவது ஏன்?’ என்று குறுக்குக் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விகளுக்கு சரியான விடை வைத்திருந்தார் சைதை துரைசாமி. ‘’ஹோட்டல்கள் அமைந்திருக்கும் இடம் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த இடத்தின் வாடகை, பார்க்கிங், அலங்காரம், மின்சாரம், தண்ணீர், சம்பளம் போன்றவை அதிக செலவு வைக்கின்றன. மழை, வெயில் போன்ற பல்வேறு காரணங்களால் விற்பனையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும், அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் நியாயமாக ஹோட்டல் நடத்துபவர்கள் ஒருபோதும் நஷ்டம் அடைவதில்லை.
நாம் மாநகராட்சி இடத்தில்தான் உணவகம் தொடங்கப் போகிறோம். எனவே, இடத்திற்கு வாடகை, தண்ணீர் செலவு கிடையாது. அரசு நடத்தும் உணவகத்தில் நல்ல சுவையுடன் உணவு மலிவு விலையில் கொடுப்பது தெரிய வந்தால், மக்களே தேடி வருவார்கள். ஆகவே, விற்பனை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயம் மலிவு விலை உணவகத்தை லாபகரமாகவும் நடத்த முடியும். அதற்கும் சில திட்டங்கள் இருக்கின்றன’’ என்றார் சைதை துரைசாமி.
அத்தனையும் தெளிவாகக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்தார். அதன்பிறகு என்ன பதில் சொன்னார் தெரியுமா?
- நாளை பார்க்கலாம்.
