ஏன் இப்படி காதலிக்கிறார்கள்..?
ஆண்கள் ஒரே நேரத்தில் பத்து பெண்களை விரும்பலாம். ஆனால், பெண்கள் யாரேனும் ஒரே ஒருவர் மீது மட்டுமே அதீத அன்பு செலுத்துகிறார்கள். அதன் பிறகு என்ன காரணத்திற்காகவும், அந்த அன்பை மாற்றிக்கொள்வதில்லை.
விரட்டி விரட்டி காதலிப்பவர், முதலில் காதலை சொல்பவரை எல்லாம் லாஜிக் பார்க்காமல் பெண்கள் காதலிக்கிறார்கள். அதேபோல் குடிகாரன், ரவுடி, போதைக்காரன், கொலைகாரன், சமூகவிரோதி என்றெல்லாம் தெரிந்தும் அவர்களை உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள்.
பிள்ளை எத்தனை பெரிய தவறு செய்தாலும் அம்மாக்கள் மன்னிக்கிறார்கள். கணவன் கொலை செய்துவிட்டு வந்தாலும் மனைவிகள் பாதுகாக்கிறார்கள். ஏனென்றால் பெண்கள் மனதுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அன்பு, காதலில் மூளையைப் பயன்படுத்தி குழப்பிக்கொள்வதில்லை.
இதற்கு வரலாற்று உதாரணம் என்றால் சர்வாதிகாரி முசோலினிக்கு உயிர் விட்ட கிளராவையும், ஹிட்லருக்காக உயிர் விட்ட ஈவாவையும் சொல்லலாம். இருவரும் லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது பேரன்பு செலுத்த பெண்களால் முடிந்தது.
இன்றைய உதாரணமாக விஜய் ரசிகைகளைச் சொல்லலாம். தன்னுடைய 13 வயது மகனை கரூர் நெரிசலில் பறிகொடுத்த விஜய் ரசிகை ஒருவர், ’இதற்கு விஜய் காரணம் இல்லை’ என்று உறுதியாகச் சொல்கிறார். அவர் மட்டுமில்லை, விஜய்யைப் பார்க்கவந்த அத்தனை ரசிகைகளும் ஒரே குரலில், ‘விஜய் எந்த குற்றமும் செய்யவில்லை’ என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்கள்.
தான் விரும்பியவர்கள் எந்த தப்பும் செய்ய மாட்டார்கள், அப்படி தவறு நடந்தாலும் அதற்கு வேறு ஒருவரே காரணம் என்றே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையே பெண்ணின் பலவீனம். சரி, தவறு, நல்லது, கெட்டது என்று மூளையால் அன்பை பரிசோதிக்காத வரை ஆணுக்குப் பெண் அடிமையாகவே இருப்பார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
