இல்லாத ஒன்றே மனிதருக்கு முக்கியம்

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இழப்புகள் மனிதனை பக்குவப்படுத்துமா..?

  • என்.மாரிமுத்து, லட்சுமிகாலனி.

ஞானகுரு :

ஏதேனும் ஒன்றை இழக்கும் நேரத்தில்தான், அதனுடைய அருமையை மனிதர்கள் அறிகிறார்கள். கழற்றிவைத்த மோதிரத்தைக் காணவில்லை என்றால், அது யார் வாங்கிக்கொடுத்தது தெரியுமா..? எத்தனை சிறப்பான மாடல் தெரியுமா..? எத்தனை மதிப்பு தெரியுமா..? என்றெல்லாம் புலம்புவார்கள். ஆனால், எல்லாம் கொஞ்ச காலம்தான். அதன்பிறகு வேறு ஒரு மோதிரம் வாங்கியபிறகு பழையதை மறந்தே போவார்கள். இதுதான் மனிதனின் குணம். இழப்புகளில் இருந்து பக்குவம் பெறும் மனப்பான்மை பெரும்பான்மை மனிதர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

கேள்வி : பாராட்டுகளுக்கு மனம் ஏங்கித் தவிப்பதேன்..?

  • வி.ஹரிணி, விவேகானந்தன் தெரு.

ஞானகுரு :

தன்னுடைய வேலையை கடமையாகச் செய்பவர் பாராட்டுக்கு ஏங்குவதில்லை. மற்றவர்களைவிட சிறப்பாக பணியாற்றுவதாக ஒப்பிட்டுப் பார்ப்பவரே பாராட்டுக்கு ஏங்குகிறார். பாராட்டும் பதவியும் தானே வருவதுதான் சிறப்பு என்ற உண்மையை அறிந்தவர் இதற்காக ஒருபோதும் தவிக்க மாட்டார்.

Leave a Comment