க்யூட் குட்டி கதை
இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே கிடையாது. ஞாபக மறதி, அசட்டை, சோம்பேறித்தனம், நெருக்கடி போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது எட்டிப்பார்க்கவே செய்யும். அதனால் கடைநிலை ஊழியர் தொடங்கி முதலாளி வரை எல்லோருமே தவறு செய்யும் சூழல் வரலாம்.
நடந்த தவறுக்கு பிறர் மீது பழி போடுவது, நான் சரியாகத்தான் செய்தேன் என்று சாதிப்பது, இதெல்லாம் மிகச்சிறிய தவறுதான் என்று அசட்டையாக சொல்வது எல்லாமே அந்த நேரத்தில் தப்பிக்கும் வழியாக இருக்கலாமே தவிர, எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதுதான் சிறப்பானது.
மன்னிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது என்று சொல்கிறது இந்த குட்டிக் கதை.
ஒரே ஊரை சேர்ந்த இரண்டு பேர் வெளியூர் சென்று திரும்பினார்கள். மெயின் ரோட்டில் இருந்து அவர்கள் கிராமத்துக்கு செல்வதற்கு 5 கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதனால் ஆட்டோ, வண்டி ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தார்கள், அப்படியெதுவும் கிடைக்கவில்லை என்றதும் இருவரும் பேசிக்கொண்டே நடக்கலாம் என்று கிளம்பினார்கள்.
அவர்களில் கறிக்கடை வைத்திருக்கும் ராஜன் ரொம்பவும் பலசாலி. அடுத்தவன் செல்வம் சமீபத்தில்தான் அந்த கிராமத்து பண்ணையார் வீட்டில் வேலைக்கு சேர்ந்திருந்தான். இனி இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்று ராஜன் சொன்னதும் செல்வம் மகிழ்ந்தான். எனக்கு இன்று ஒரு நண்பன் கிடைத்தான் என்று டைரியில் குறித்துக்கொண்டான். இருவரும் அரசியல் பற்றி பேசிக்கொண்டே நடந்தபோது, இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் கோபமான ராஜன் பட்டென்று செல்வத்தை அடித்துவிட்டான். உடனே ஆத்திரமடைந்த செல்வம் தன்னுடைய டைரியில் இருந்து ஒரு பேப்பரை கிழித்து, இன்று என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று எழுதி தூர எறிந்துவிட்டான்.
கொஞ்சதூரம் இருவரும் பேசாமல் நடந்தார்கள். அப்போது வேலியில் இருந்து ஒரு பாம்பு செல்வத்தை கொத்தவர, சட்டென்று அதனை கையில் இருந்த கழியால் அடித்து கொன்றான் ராஜன். உடனே செல்வம், ஒரு கத்தி எடுத்து பக்கத்து மரத்தைக் கீறி, இன்று என் நண்பன் என் உயிரை காப்பாற்றினான் என்று எழுதிவைத்தான். அதைக் கண்ட ராஜன், நான் உன்னை அடித்தபோது பேப்பரில் எழுதி கீழே போட்டாய்… காப்பாற்றியபோது மரத்தில் எழுதுகிறாய் ஏன் இப்படி செய்கிறாய் என்று விளக்கம் கேட்டான். நீ நல்லது செய்ததை எல்லோரும் அறிய வேண்டும் என்பதாலே மரத்தில் எழுதி வைக்கிறேன். நீ கெட்டது செய்தது யாருக்கும் தெரியக்கூடாது ஆனால் உனக்கு நிச்சயம் தெரியவேண்டும் என்பதற்காகவே காகிதத்தில் எழுதி வீசினேன் என்றான் செல்வம். உடனே செல்வத்தின் நல்ல மனம் தெரியவரவே, என்னை மன்னித்துவிடு… கேட்டுக்கொண்டான். என் நண்பன் இன்று நல்ல மனிதனாக மாறிவிட்டான் என்று கல்லில் எழுதிவைத்தான் செல்வம்.
மன்னிப்பு கேட்கும் குணம் கல்லில் எழுதிவைக்கும் அளவுக்கு உயர்வானது என்பதுதான் உண்மை. அதனால்தான் மன்னிப்பு சமரசத்தின் திறவுகோல் என்றும் மன்னிப்புதான் வலிமையானது என்றும் அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கத் தயங்குபவன் தள்ளியே நிற்பான், மன்னிப்பு கேட்பவன் சகலருக்கும் நெருக்கமாகி வெற்றியை தொட்டுவிடுவான்.
சரி, எப்படி மன்னிப்பு கேட்கவேண்டும்?
இயல்பாகவும் இயற்கையாகவும் மன்னிப்பு கேட்கவேண்டும். நல்ல நோக்கத்திற்காக நான் செய்த செயல் தவறாக முடிந்துவிட்டது என்றோ, எனக்கு தெரியாத ஒன்றை தவறாக செய்துவிட்டேன் என்றோ… எது உண்மையோ அதனை அப்படியே சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் யாரும் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்றாலும், தவறு எப்படி நடந்தது என்பதை தெளிவாக சொல்லவேண்டும். அப்போதுதான், பிறர் அதுபோன்ற தவறு செய்யாமல் தடுக்கமுடியும். மன்னிப்பு கேட்பது நல்ல குணம் என்றாலும் மீண்டும் மீண்டும் தவறு செய்வதற்கான வாய்ப்பாக இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது.
