குழந்தை சுமக்கும் குழந்தைகள் எண்ணிக்கை பெருகுதுங்க…

Image

டாக்டர் அமுதா ஹரி MBBS, DGO, மகளிர் மருத்துவ நிபுணர்.

லீடு ; பதின் பருவத்தில் அதாவது 19 வயதுக்கு முன் ஒரு பெண் கருவுற்றால் அதை டீன் ஏஜ் கர்ப்பம் என்கிறார்கள். இந்த இள வயது கர்ப்பத்தினால் வரும் விளைவுகளை விளக்குகிறார் மருத்துவர்.

முந்தைய காலங்களில், ஒரு பெண் பருவமெய்திய உடனேயே அவள் திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள் என்ற எண்ணத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்தார்கள். இதற்கு போதுமான கல்வியறிவு இல்லாமையே முதல் காரணம் மேலும், கர்ப்பம், குழந்தைப்பேறு போன்றவை குறித்து போதுமான தகவல் அறிவு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம்.

உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள், மனநலம் சார்ந்த பிரச்னைகள், சமூகம் சார்ந்த பிரச்னைகள் என மூன்று விதங்களில் இள வயது கர்ப்பம் பெண்களைப் பாதிக்கிறது.

மனரீதியான உளைச்சல்

தன் வயதுடையவர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருக்கும்போது தான் மட்டும் குழந்தையைச் சுமந்துகொண்டிருப்பது ஒரு பெண்ணுக்கு மன அழுத்தத்தைத் தரலாம். 19 வயதுக்குள் இருக்கும் பெண் உண்மையில் சிறுமிதான். அதனால், உணர்வுபூர்வமாகக் குழந்தையை விரும்பிச் சுமக்கும்,பெற்றெடுக்கும் முதிர்ச்சிக்குள் அவள் வராதபோது இள வயது தாய்மை சுமையாக மாறி அவளை முடக்குவதாக அவள் கருதலாம்.

அதுவும் குழந்தை பெற்ற பிறகு வரக்கூடிய அழுத்தம் மிகவும் அதிகம். அதாவது, தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரும் சுமை. ஜாலியாக சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தவளுக்குக் கால்களில் குண்டு கட்டப்படுவது வலியை அதிகரிக்கும். இத்தகைய பெண்களுக்குத் தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும் எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல்நலப் பிரச்சினைகள்

சிறுவர்களும் சிறுமிகளும் 10 – 12 வயதில் பருவ வளர்ச்சி அடையத் தொடங்குகிறார்கள். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி வந்துவிட்டால் அவள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டாள் எனப் பொருள்தான்.

சிறுவர்களுக்கும் விந்தணுக்கள் வெளிப்படத் தொடங்கிவிட்ட பிறகு அந்த நேரத்தில் உணர்ச்சிவயப்பட்டு உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்ணின் உடல் இந்தக் காலகட்டத்தில் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. இப்படிப்பட்ட வயதில் கருவுறுவது இளம் பெண்களுக்குப் பிரச்சினைகளைத் தருவதோடு அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும். ஏனென்றால், முழுமையான வளர்ச்சியடையாத நிலையில் இளவயதுப் பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது, கர்ப்பத்தை ஒட்டி நிகழக்கூடிய எடை அதிகரிப்பு போதிய அளவாக இருக்காது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ரத்த சோகை போன்ற சிக்கல்கள் வரலாம்.

வைட்டமின் சத்துக் குறைபாடு வரக்கூடும். உயர் ரத்த அழுத்தமும் அதனால் வலிப்பு வரும் சாத்தியக்கூறு அதிகம். இடுப்பு எலும்புகள் முழுமையான வளர்ச்சியடையாத நிலையில் இயற்கையான பிரசவம் நிகழ்வதில் சிக்கல் ஏற்படலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நேரிடும்.

இள வயது கர்ப்பத்தில் தானாகவே கர்ப்பம் கலைவதற்கான சாத்தியம் அதிகம். கர்ப்ப காலத்துக்கு முன்னதாகவே பிரசவ வலி வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. அம்மாவுக்குச் சரியான வளர்ச்சி இல்லாதபோது குழந்தைக்கும் சரியான வளர்ச்சி இல்லாமல் போகலாம். சில நேரம் குழந்தை இறந்தும் போகலாம். பிரசவத்தின் போதும் சிக்கல்கள் வரலாம். சிசு மரணமும் பிரசவத்தில் தாய் மரணமும் நிகழ இள வயதுத் தாய்மைதான் முக்கியக் காரணமாக உள்ளது.

ஒரு குழந்தை பிறந்தவுடன் முதிர்ச்சி அடைந்த பெண் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்வது போன்று சிறு வயது தாயால் பார்த்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் கர்ப்பம், பிரசவம் போன்றவைகளை சமாளிக்க முடியாமல் மிகவும் பலவீனமாக இருப்பாள். பெரும்பாலும் குழந்தையின் பாட்டிதான் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிவரும்.

இள வயது உறவு, கர்ப்பம், பிரசவம் போன்றவை ஒரு பெண்ணின் இனப்பெருக்க நலத்தைப் பாதிக்கலாம். அதேபோல், திருமணத்துக்கு முன்னரே தாய்மை அடைய நேரிடும்போது சட்டபூர்வமில்லாத விதங்களில் கருச்சிதைவு செய்ய முற்படலாம். யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதால் சுகாதாரக் கேடான இடங்களில்கூடக் கருச்சிதைவை மேற்கொள்ளலாம். இது பல உடல்நலச் சிக்கல்களைக் கொண்டுவரலாம்.

சமூகம் சார்ந்த பிரச்சினைகள்

இள வயதுத் தாய்மை இரண்டு விதமாக வரலாம். வயதுக்கு வந்துவிட்டாள் என்று பெற்றோரே திருமணம் செய்து கொடுப்பது நிகழலாம். பாலியல் உந்துதலால் திருமணத்துக்கு முன்பே தாய்மை அடைவதும் நடக்கலாம்.

திருமணத்துக்கு முன் கருவுறும்போது அதைக் கலைப்பதற்கான காலகட்டத்தைக் கடந்த பிறகு வேறு வழியில்லாமல் கருவைச் சுமக்கும் பெண்களும் உண்டு. அவர்களே சரியான உணவு, மருத்துவப் பராமரிப்புக்குப் போகமாட்டார்கள். வீட்டிலும் வெளியிலும் ஆதரவு கிடைக்காது.

இளவயது தாய்மையைத் தவிர்ப்பது எப்படி?

டீன் ஏஜ் பெண்களுக்கு மட்டுமல்ல;அவர்கள் பெற்றோருக்கும் தகுந்த தகவல் அறிவு இருக்க வேண்டும். திருமணமாகாத 15 வயது கர்ப்பிணியை ஒரு முறை என்னிடம் அழைத்துவந்தனர். வேறு வழியின்றிக் கருக்கலைப்பு செய்ய நேர்ந்தது. இது அவள் பெற்றோருக்குத் தெரியாது. வேறு உறவுக்காரப் பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தாள்.

எனக்குத் தெரிந்த குடும்பம் என்பதால் அந்தப் பெண்ணின் அம்மாவிடம் நேரடியாக அவர்கள் பெண்ணைப் பற்றிப் பேசாமல், அவளோடு ஏன் இன்னும் அன்பாக நெருங்கிப் பேசக் கூடாது, இனப்பெருக்க உடல் நலம் பற்றியெல்லாம் சொல்லித்தரக் கூடாது எனக் கேட்டேன். அதற்கு அவர், “என் பெண் ரொம்ப அப்பாவி; அவளுக்கு உள்ளாடையைக்கூடச் சரியாகப் போடத் தெரியாது. நான்தான் போட்டுவிடுவேன்” என்றார்.

இளவயதுக் குழந்தைகள் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகள் இன்னும் குழந்தையாகவே இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்களுக்கும் பாலியல் தேவைகள் இருக்கலாம். அதற்கு ஆட்பட்டு அவர்களுக்குப் பாலியல் உறவுகூட நிகழ்ந்திருக்கக்கூட வாய்ப்பு உண்டு என்று எந்தப் பெற்றோரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

முதலில் பெற்றோர்களுக்கு இளம் வயதில் தங்கள் பெண் குழந்தைக்கு இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும். அவர்களுக்கு இந்தப் புரிதல் இருந்தால்தான் பாலியல் விஷயங்கள் குறித்துக் குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியும்.

அம்மாக்கள்,பெண் குழந்தைகள் ஏதுமறியாச் சிறுமிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் சிக்கல். வீட்டில் ஒரு பெண், குழந்தை மாதிரியே நடந்துகொள்ளக்கூடும். கூடப் படிக்கும் அவள் வயதொத்தவர்கள் இந்த மாதிரி உறவுகளில் ஈடுபடுவதுதான் அந்த வயதுக்கான அழகு என்கிறார்கள். இப்படி இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டிருக்கும் சிறுமிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

இதே மாதிரி தெரிந்தவர் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண் கருக்கலைப்புக்கு வந்தார். அவளுடைய ஆண் நண்பன் அவளுடைய பிறந்தநாளுக்கு அதிக விலையில் கம்மல் வாங்கிக் கொடுத்திருக்கிறான். அவன் நெருக்கமாக இருக்கக் கேட்டவுடன் அவளால் மறுக்க முடியவில்லை. அதாவது முடியாது, மாட்டேன் என்று ‘நோ’ சொல்லத் தெரியவில்லை. ‘நோ’ என்று சொன்னால் உறவு போய்விடுமோ என்ற பயமும் இருக்கலாம். இளம் பெண்களுக்கு இப்படி எளிதில் வயப்படும் தன்மை உடைய சூழலைத் தவிர்க்கக் கற்றுத்தர வேண்டும்.

கர்ப்பம் என்பது சுகமான அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக மாறிவிடக் கூடாது. எனவே, பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள். அதுவே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தைத் தவிர்க்கும் வழி.

Leave a Comment