நாளைக்கும் நிலவு வரும், நாம் இருக்க மாட்டோம்

Image

ஆசிரியர் பக்கம்

இரவு நேர ரயில் பயணம்.  அந்த கோச்சில் இருந்த அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் விளக்கை அணைத்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தனர் ஒரே ஒரு கம்பார்ட்மென்ட்டில் மட்டும் மூன்று நண்பர்கள் சலசலவென பேசிக்கொண்டு இருந்தனர். அதனால் அவர்களுடன் பயணித்த முதியவர் ஒருவர் தூங்க முடியாமல் அவஸ்தையுடன் படுத்திருந்தார்.

அந்த பக்கம் கிராஸ் செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதியவர் நெளிவதைக் கண்டு, ‘ஏன் அவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறீர்கள்?’ என்று இளைஞர்களிடம் கோபப்பட்டார். அதோடு முதியவரிடம், ‘நீங்களே இவர்களை அதட்டியிருக்கலாம் அல்லது புகார் செய்திருக்கலாமே” என்று கேட்டார்.

அதற்கு முதியவர், ‘இன்னும் சில மணி நேரம்தான் பயணம். இந்த கொஞ்ச நேரத்திற்காக இவர்கள் மீது நான் கோபப்பட வேண்டுமா..? அதனால் தேவையற்ற சர்ச்சை உருவாகலாம். இந்த இடையூறை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கொஞ்சநேரம்தானே இந்த பயணம்’ என்றார் புன்னகையுடன்.

முதியவர் சொன்ன பதில் போலீஸ் அதிகாரியை மட்டுமின்றி, அந்த இளைஞர்களையும் யோசிக்க வைத்தது. உடனே அந்த இளைஞர்கள் முதியவரிடம் மன்னிப்பு கோரினார்கள். இந்த பயணம் கொஞ்சநேரம்தான் என்பதை மனதில் கல்வெட்டு போன்று பதிந்து கொண்டார்கள்.

ரயில் பயணம் மட்டுமல்ல, மனிதனின் வாழ்க்கை பயணமும் கொஞ்சநேரம்தான். இந்த பிரபஞ்சத்தின் வயதை கணக்கிட்டுப் பார்க்கையில், மனிதர்கள் அற்பமான சில வருடங்களே இங்கு வாழ முடியும். இந்த குறைந்த வாழ்க்கை நேரத்தில் பிறர் மீது வருத்தமும் கோபமும் கொள்ளத்தான் வேண்டுமா..?

வாழப்போகும் கொஞ்ச காலமும் பேராசை, சந்தேகம், வாக்குவாதம், பொறாமை, பொய் சொல்லுதல், புறம் பேசுதல், அதிருப்தி, குறை கண்டுபிடித்தல் போன்ற குணங்களுடன் அதிருப்தியாகவே வாழப் போகிறோமா..? இதனால் அடுத்தவருக்கு மட்டுமல்ல, உங்கள் மனமும் துன்பத்திலே இருக்கும்.

எனவே, தேவையில்லாமல் யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்களை யாராவது விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனதை யாராவது காயப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் அமைதியாக இருங்கள். ஏனென்றால் நமது பயணம் கொஞ்ச காலம்தான்.

இன்பங்களை ஏற்றுக்கொள்வது போல், பாராட்டுகளை ஏற்றுக்கொள்வது போல் துன்பங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு தீமை செய்பவர்களை மன்னிக்கவும் மறக்கவும் பழகிக்கொள்ளுங்கள். 

ஏனெனில், நமது வாழ்க்கை பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளைக்கும் நிலவு வரும்… நாளைக்கும் சூரியன் வரும். ஆனால், நாம் இருப்பதுதான் உறுதி இல்லை.

எனவே, குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் போன்ற எல்லோருடனும் புன்னகையை மட்டும் பகிர்ந்துகொள்வோம். அதுதான், இந்த குறுகிய கால பயணத்தில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், 9840903586

Leave a Comment