மனதுக்கு வயது அதிகரிப்பதே இல்லை

Image

தேவை உற்சாக மேஜிக்

40 வயதுக்கு மேற்பட்ட பலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அத்தனை அக்கறை காட்டுவதில்லை. காரணம் கேட்டால், ‘இத்தனை வயசுக்குப் பிறகு என்ன கொண்டாட்டம், ஏகப்பட்ட செலவு இருக்கும்போது எதுக்கு வெட்டிச்செலவு, ஒவ்வொரு பிறந்த நாளும் பொறுப்பை அதிகமாக்குகிறது, மரணத்தின் அருகே அழைத்துச்செல்கிறது’ என்று ஏதேனும் காரணம் சொல்லி சலித்துக்கொள்வார்கள்.

இதன் அர்த்தம் அவர்கள் பக்குவம் அடைந்துவிட்டார்கள் என்பது அல்ல. இளமை பறிபோன பிறகு கொண்டாட்டத்திற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா? உடலுக்குத்தான் முதிர்ச்சியே தவிர, மனதுக்கு அல்ல. நீங்கள் நினைக்காத வரை மனம் முதுமை அடையாது. பேரன், பேத்தி எடுத்துவிட்ட பிறகும், மனதளவில் உற்சாகமாகவே வாழும் ஒருசிலரை நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். அதற்கு காரணம், அவர்கள் மனம் என்றென்றும் இளமையாக இருப்பதுதான்.

திரைப்பட நடிகரான ஜாக்கிசான் பற்றி ஓரளவு அறிந்திருப்பீர்கள். புருஸ்லிக்குப் பிறகு கராத்தே கலையை சினிமாவில் புகுத்தி உலக சூப்பர்ஸ்டாராக மாறியவர். அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள், சோகம், தோல்வி இருந்தாலும், எப்போதும் சிரித்த முகத்துடனும் குழந்தைத்தனத்துடனே இருப்பவர். அவர் மனம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் சம்பவம் இது.

அவரை, ‘தி கராத்தே கிட்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக  தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். அப்போது அவர்களிடம் ஜாக்கிசான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா..?

’கராத்தே கிட் என்றால் கராத்தே கற்றுக்கொள்ளும் மாணவன் பற்றிய கதைதானே… சரி, எனக்கு மாஸ்டராக நடிக்கப்போவது யார்?’ என்று இயல்பாகக் கேட்டார்.

அதை கேட்டு தயாரிப்பாளர்கள் பதில் சொல்ல தயங்கினார்கள். அந்த தயக்கத்தைப் பார்த்தபிறகுதான், உண்மையான வயதை உணர்ந்திருக்கிறார் ஜாக்கிசான். ‘’ஸாரி… எனக்கு வயசாயிடுச்சுங்கிறதை மறந்துட்டேன்…’ என்று சொல்லி சிரித்தாராம்.

ஆம், அந்த அளவுக்கு மனதளவில் ஜாக்கிசான் அத்தனை இளமையாக இருக்கிறார். அதனால்தான், அவரது திரைப்படங்களில் இப்போதும் முதுமைக்கு மீறிய நகைச்சுவையும், சுறுசுறுப்பும், துருதுருப்பும் தென்படுகிறது.  ஜாக்கிசானால் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவராலும் மனதை இளமையாக வைத்துக்கொள்ள முடியும்.

அப்படி ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்..?

இளம் வயதில் அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம், நமக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதனை பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கைதான். இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்க வேண்டும். ஆம், என்ன பிரச்னை வந்தாலும் உங்களால் சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.

மனதில் நம்பிக்கை இருப்பவருக்கு, எந்த ஒரு பிறந்த நாளும் கவலை தராது. ஏனென்றால் மனசுக்கு வயது ஒரு போதும் அதிகரிப்பதே இல்லை. ஒவ்வொரு பிறந்த நாளும் மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு காரணமாக மட்டும் இருக்கட்டும்.

எனவே, எல்லா வயதையும் கொண்டாடுங்கள்.  

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
  • தொடர்புக்கு : 9840903586

Leave a Comment